வறுமை கொடுமை

பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லை
வறுமைக்கு
வரம்புகள் இல்லை
வயதில்லை
இனமில்லை
மதமில்லை
மொழியில்லை
உண்டு வாரிசுகள் மட்டும்
நானும்
அதில் ஒருவன் .......
அறியா குழந்தைப் பருவமும்
அறிவூட்டும் பள்ளிப் பருவமும்
உதிரம் சூடேறும்
இளமைப் பருவமும்
வறுமையின் பிடியில்
முழுதாய்
குத்தகைக்கு
உழைப்பாலே
குத்தகையை
மீட்டெடுத்த பின்னும்
தொடர்கிறது
வறுமை
என்
உடல் வயலை
காவு கொள்ள
என் முன்னும்
பின்னும்
வெவ்வேறு உருவங்களில் ........
வறுமையுடன்
போராடியே
வயததுவும்
கடந்ததனால்
மனதின் இளமைக்கு
மசிவதில்லை
எந்தன்
உடல் ........
உடலின் வறுமை
இது
அகவைகள் பல கடந்து
கடமைக்காய்
ஓர் மணம் செய்ய
வரன் தேடி
ஓடி அலைந்தும்
வயதை விட
புறத் தோற்றம்
வயதாக தெரியுதென
ஒதுங்கி ஒழிவர்
பெண் வீட்டார்
கூட்டம்
வயதின் வறுமை
இது
சிறுபான்மை இனமாக
பிறந்ததனால்
பெரும் பான்மை இடங்களில்
என் பாடு
அரும் பாடு
என் நாடு
அடிமை வீடு
எனக்கு
ஜனநாயக வறுமை
இது
சாதிப் பட்டியலில்
என் சாதி
கடை சாதி
சொல்லவும் வேண்டுமா மீதி ?/
இல்லை எனக்கு சம நீதி ......
நான் வாழும் பொழுதே
நடமாடும் சமாதி ........
சமூக வறுமை
இது
குழந்தை குட்டியுடன்
என் வயதை ஒத்தவர்கள்
கொஞ்சி குதூகலிக்க
காணும் என் இதயம்
காணாததை கண்டது போல்
கண்களை அலையவிடும் ......
மனநிலையின் வறுமை
இது
கண் கண்ட வறுமை
இத்தனையும் இருக்க
கல்லறைக்கு போகும் வரை
காணப்போகும்
வக்கிர
வறுமையின்
உருவங்கள்
எத்தனையோ ?
எத்தனையோ ?