விடை பெறும் நேரம் - குமரிபையன்

மரணம் வந்து என்னை தழுவும் நேரத்தில்
சரணம் சொல்ல யாருண்டு என் பக்கத்தில்..!
திரைக்கடலோடி திரவியம் கோடி நான் சேர்த்து
திண்ணை எனக்கு ஆறடி மண்ணே என்சொத்து..!
சலனமின்றி கிடந்தால் உடல் ஒரு ஜடம்தானே
சர்வசக்தி அடங்கி நாறும் வெறும் பிணம்தானே..!
அரசன் ஆண்டி ஆழ்வார் தாழ்வார் ஒன்றாவோம்
அடக்கம் உள்ளே அடங்கி மேலே மண்ணாவோம்..!
நீயும் நானும் ஒருவர் அன்றோ இவ்வுலகத்தில்
நீதி தெரிந்து வாழு இடமுண்டு மறு உலகத்தில்..!
மதியால் மனிதம் படித்து உணரு உள்ளத்தில்
மீதி நல்லோர் வழியைதேடு இதய எண்ணத்தில்..!
பெற்ற உந்தன் உயிராம் உறவை கொல்லாதே
பெற்றோர் முதியோர் இல்லம் விட்டு செல்லாதே.!
ஊரார் உறவுகள் உன்னோடிருந்தால் தவறில்லை
உடலில் இருக்கும் தொப்புள் உறவுக்கு ஈடில்லை.!
பசித்தவன் இருக்க புசித்து நீயும் ருசிக்காதே
பக்கம் வசிப்போர் நலியும் காட்சியில் ரசிக்காதே..!
வறியவன் வாழ வளத்தால் தர்மம் வழங்கிவிடு
வதிக்கும் அறிவு சினத்தை முற்றும் கொன்றுவிடு.!
மதத்தால் இனத்தால் மதத்து இனியும் சுத்தாதே
மாற்றார் மல்லிகை மணமில்லை என கத்தாதே..!
மடமை ஏற்றிய வாழ்வு என்றும் சிறக்காதே
மனதை மாற்றி பண்போடு வாழ மறக்காதே..!
வெளிச்சம் வீசும் கானலை தேடி ஓடாதே
வெளிவேசம் கண்டு தாகம் தீர்க்க முடியாதே..!
ஒருவர் பின்னே மற்றவர் போனார் தேடித்தேடி..
ஓடி போனவர் தடங்கள் இங்கே கோடிக்கோடி..!