எப்படிக் கொண்டாட

தமிழ்த்தாயே !
உன் ஒரு பகுதி பிள்ளைகளின்
சுதந்திரக் காற்று
பிறருணர முடியா
சாணக்கியத்துடன்
சர்வ ஜாக்கிரதையாக
கொடுங்கோலர்களின்
அரசியல் பத்தாயத்தில்
சிறை வைக்கப்பட்டுள்ளது !

அவன் சந்ததியரின்
கருவறுப்பு அறுவடைக்கான
கதிரருவாள்
சர்வதேசச் சதிகாரர்களின்
உலையில் உற்பத்தியாகிறது !

அவன் கல்லறைக்கான
செங்கற்கள்
கொல்லாமை போதித்த
பௌத்தச் சூளையில்
சுடப் படுகிறது !

அவன் விடியல்கள்
சில துரோகச் சூரியன்களின்
கறுப்புக் கரங்களால்
களவாடப்பட்டு -
பூகோள வரைபடத்தின்
தென் கோடியில்
சீதை சிறைவைக்கப்பட்ட
தீவிலோரிடத்தில்
சிதையில் வைக்கப்பட்டுள்ளது !

அவனது செக்குமாட்டுழைப்பின்
குருதிப் பாய்ச்சலிலும்
உப்பு வியர்வையிலும்
உருவான தேயிலைத் தோட்டங்களில்
மாற்றான்
ஊடுபயிர் பாவுவதர்க்கு
கலப்பைகள்
இங்கிருந்துதான்
தயாரித்தனுப்பபட்டது !

" கொஞ்சம் இரத்தம் தாருங்கள்
நிறைய சுதந்திரம்
தருகிறோம் " - என்றான்
மாவீரன் நேதாஜி -
இவர்களோ
கற்பும் , சதையுமாய்
நிறைய இரத்தம்
தந்து விட்டார்கள் ....
ஆனால் அவர்களுக்கான
சுதந்திரம் எங்கே கோழைகளே ?

தமிழ்த்தாயே
உன் ஒரு பிள்ளை
அனாதையாய் தென்கோடித் தீவினில்
நித்திரையை தொலைத்துத்
தேம்பி நிற்க ...
சித்திரைத் திருநாளை
எப்படிக் கொண்டாடுவது ?

எழுதியவர் : பாலா (14-Apr-14, 12:31 pm)
Tanglish : yeppati KONTATA
பார்வை : 77

மேலே