அகன் அவர்கள் தேர்ந்தெடுத்த சிறப்புக் கவிதை 5 தாளாத தனிமை தானெழுதிய கொடுமை--அகமது அலி விமர்சனம்
தனிமை........
இதைப் போல ஒரு கொடிய நண்பனைக் காண முடியாது.....
தனிமை..... உங்களை சிலுவையில் ஏற்றி விடும்.... அல்லது சிலுவையாய் மாற்றி விடும்.....
கவிஞரின் தனிமை.... அதன் தனிமையை பற்றி தனிமையில் தனியாக பேசுகிறது......
தனிமை..... உங்களை நிஜமாக காட்டி விடும் நிழல்.... அதனை நெருங்க நெருங்க..... உங்களை விட்டு நீங்கள் தூரம் போய் கொண்டிருப்பீர்கள்.
தனிமை உங்களை நல்லவனாக்கும், கெட்டவனாகும், யாரோவாக மாற்றும், அல்லது உங்களைப் போலவே மாற்றும். மொத்தத்தில் தனிமை,....... என்பது ஒன்றமில்லை.... தனியாய் இருப்பதை தவிர.... என்பதாக ஒரு இருத்தலை ஆழமாய் விதைத்து விடும்......
அறை முழுக்க அகோர பசியில் ஒரு தனிமை, அமானுஷ்யங்கள் விதைத்துக் கொண்டே இருக்கிறது.....தன்னையே விதைத்து தன்னையே அறுவடை செய்து கொள்ளும் ஒரு வித அது மீறல் இந்த தனிமை என்பதை.... தனிமையோடு தனிமையாக கலந்து இருந்து தனிமைக்கு தெரியாமல் எழுதுவதாக கவிஞர் எழுதிய கவிதையில் தூணிலும் இருப்பேன், துரும்பிலும் இருப்பேன் என்று தன்னை ஒரு வித நினைவுகளாக காட்டிக் கொண்ட தனிமையை யாருமற்ற அறையில் யாரோவாய் வீற்றிருக்கும் மின்விசிறி கண்காணித்துக் கொண்டிருப்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.....
"பாலும் கசந்ததடி..... படுக்கை நொந்ததடி....." என்பது போல.... மொட்டைப் பாறையாய்.... சுட்டெரிக்கும் படுக்கை, தனிமையின் தீரா தேசம்...... அது ஒரு போதும் ஆசுவாசப்படுவதில்லை..... துயரக் கைகளின் அரவணைப்பில் கரப்பான் பூச்சிகளின் காலடி உணர்வுகளை ஏக்க பெருமூச்சுகளாய் உள் வாங்கி கொண்டிருக்கிறது..... தனிமை தீரா கோபமும் கூட...
தனிமையில் வியர்வை அதிகமாகும்.... கனவுகள் உதயமாகுவது போல.... தனிமையில் தவங்கள் அதிகமாகும்..... வரங்கள் அதிகமாகுவது போல....
பல்லிகளின் பரிகாசத்தில் சிலுவையில் தொங்கும் சட்டையின் தேடல் மிக நுணுக்கமானவை.... நுண்ணிய உயிர்களின் உணவுத்தேடல் அது....ஜன்னல் தாண்டும் புரட்சிகளின் சிறு தென்றல் அது....
சுருண்டு கிடக்கும் சுண்டெலி தனிமை வனத்தின் சிறு புல்லென தன்னை மறைத்துக் கொள்ளும்....கவிஞரின் கணினியும், அலை பேசியும்.... பேச்சு மூச்சற்று கிடக்கும் அறை கொண்ட சித்திரமாய்....
வரைந்தே கலைத்த கவிஞர் சித்திரத்தின் உட்புறம் ஒரு அறை செய்து கொண்டிருப்பதாக இந்த கவிதை எனது பார்வையில் தூண்டில் இட்டு இழுத்து செல்கிறது.... செல்லும் இடம், தனிமை வானமாக இருப்பினும்... சிறு பறவையின் சிநேகிதம் தருகிறது வரிகளின் அர்த்தமுள்ள தனிமை....
ஒரு முடிவிலி புள்ளிக்குள் அடைபட்ட கதைகளும் சிரிப்பும்.... ஏகாந்த சிறகுகளை பூட்டிக் கொண்டு செல்லும் பாதையெங்கும் தனிமை கொலுசுகளின் சிணுங்கல்கள்..... உதிர்வது கண்ணீரின் புன்னகையாக கூட இருக்கலாம்....
இப்படி..... தானும் தானுமே.... தனிமையாய் இருக்கும் அறையெங்கும்...... எது உலகம் என்றொரு கேள்வியோடு ஜன்னல் தாண்டும் வெளிக்காற்று.... வெல வெலத்து, நடு நடுங்கி, கவிஞரின் தீரா வெப்பத்தை....ஊதி ஊதி அணைக்கிறது ஒரு காதலியின் உதடுகள் கொண்டு......
எது எப்படியோ..... எல்லாம் சொன்ன பிறகும், எல்லாம் கேட்ட பிறகும்...... யாருமற்ற ஒரு தனிமை தன்னையே பார்த்துக் கொண்டு அறைக்குள் முடங்கி கிடக்கிறது.....
அதன் பிம்பம் தெரிவது கவிஞரின் தோற்றம் கொண்ட கண்ணாடி....... என்பது....... இதே கவிதையின் முடிவிலி........
கவிதைக்கும் தனிமைக்கும் முற்றுப் புள்ளி உண்டோ....? யோசித்துக் கொண்டே ஒரு தனிமை என்னை இழுத்துக் கொண்டு செல்வது...... தனிமையின் ஆங்காரம்..... தனிமை அப்படித்தான்....