பொல்லாப்பு - கே-எஸ்-கலை

ஏட்டுச் சுரக்காய் எளிதில் கிடைக்கும்
இந்தச் சந்தைகளில் - வெறும்
கேட்டுச் சரக்காய் பரவிக் கிடக்கும்
மந்தச் சிந்தைகளில் !
விதையே என்பார் விளையும் என்பார்
வீரியம் இருக்காது - பொய்
கதையே சொல்லி காலம் தள்ளுவார்
காரியம் நடக்காது !
கவிதை என்பார் கதைகள் என்பார்
கருத்தே இருக்காது - ஒரு
கழுதைக் கூட கடிக்கா காகிதம்
பொறுத்தே சகிக்காது !
கூனிகள் சகுனிகள் கூடியே ஆடினும்
மெய்-ஞானம் வீழாது - பொய்
ஞானிகள் ஆயிரம் கூத்துகள் செய்யினும்
அஞ்-ஞானம் வாழாது !
வில்லுக்கு துணியும் வீரம் பேசுவார்
நேருக்கு வாராது ! - நற்
சொல்லுக்குப் பயந்து சூழ்ச்சிகள் செய்யும்
கோழைக்கு வாழ்வேது ?