மே தினம்
வியர்வைகளால்
முத்துக்கள் செய்பவனே....
நீ விதைத்த வியார்வைகள் தான்
கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்து
கர்ப்பம் தரித்து உயிர்பிடித்திருக்கிறது...!
நீ... உடல் முழுவதும் சகதிகள் பூசி
இந்த உலகத்தை மிளிர செய்தவன்...
நீ... அழுக்காகி அழுக்காகியே
அர்த்தப்பட்டவன...
நீ உயர்த்திய தோளில்
உயர்ந்திருக்கிறது சமுதாயம்...
நீ உயர்த்திய கரங்களில்
பூத்திருக்கிறது மறுமலர்ச்சி....
உன் வியர்வை நாற்றம்...
அது உன் நாட்டை மணக்கச்செய்யும்
மகரந்தத்துகள்கள்...
உன் கரங்களில் ஏற்படும் வடுக்கள்
அது தேசத்தை அறிமுகப்படுத்த வாய்க்கும்
அடையாளங்கள்....
நீ ஏர்பிடித்திருக்காவிட்டால்
என் பூமித்தாய்க்கு பட்டாடை ஏது...
நீ பாறைகளை உடைத்திருக்காவிட்டால்
இந்த பூமிச்சக்கரத்தின் அச்சுக்கள்
ஆயுள் இழந்திருக்கும்...!
தெரியுமா உனக்கு
நீ ஓய்வெடுக்க ஒதுங்கினால்
ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளும்
இந்த உலகம்...
என் பார்வையில்
தாயும் நீயும் ஒன்று தான்
தாய் ரத்தத்தை பாலாக்குகிறாள்...
நீ.. அதை வியர்வையாக்குகிறாய்...
உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு
விடியலை கண்டுவிடமுடியாது
எந்த ஒரு தேசமும்..
எந்த ஒரு மனிதனும்...
என் இனிய வியர்வையாளனே..!
உன் நெற்றியில் பிரகாசிக்கும்
ஒவ்வோறு வியர்வைத்துளிக்கும்
சாமரம் வீசும் என் கவிதை....
நண்பர்களே....
வியர்வைகள் சிந்துவோம்
பிறகு ஏன் கண்ணீர்....