===+++வாடகை வீடு+++===
இரவு ஒன்பது மணி...
வீட்டில் எல்லோரும் உணவு முடித்துவிட்டு படுத்திருந்தார்கள். இரவின் மென்மையானத் தழுவலில், செல்வி நன்றாக தூங்கிவிட்டாள். ஈழவேந்தனுக்கு மட்டும் ஏனோத் தூக்கம் வரவில்லை, ஆகையால், அவன் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு இருந்தான். அவனது மனம் கட்டவிழ்ந்த புரவியாய் அதிவேகத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தது. பள்ளிக்கூடம், வகுப்பறை, வகுப்பறைத் தோழர்கள், தோழிகள், விளையாட்டுத்திடல், இப்படியே ஓடிக்கொண்டு இருந்த அந்த மனப்புரவி. கடைசியாக நெல்லி மரத்தையே சுற்றி சுற்றி ஓடிக்கொண்டு இருந்தது.
என்னங்க..!'' அந்த வீடு நல்லா இருக்குமா..?'' ''ஒன்னும் பிரச்சனை இருக்காதே...?'', என்ன கூட்டிக்கிட்டுப் போய் காட்டாமலே முன் பணம் குடுத்துட்டு வந்துடிங்க. எதாச்சும் சரி இல்லனா என்ன பண்றது, என்றாள் தனக்கொடி,
அம்மா, அப்பாவிடம் ஏதோ கேட்கிறாள் என்பதை புரிந்துகொண்ட ஈழவேந்தன். நெல்லிமரத்தைச் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டு இருந்த, மனப்புரவியின் ஓட்டத்தை பட்டென நிறுத்தி, செவியினை கூர்மையாக்கிகொண்டான்.
வீட்டை நான் நல்லா பாத்துட்டேன் தனம். உனக்கு கண்டிப்பா புடிக்கும். ஏற்கனவே அந்த வீட்டுக்கு ரெண்டு மூனுப்பேர் போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்களாம். ''நீங்க ஒரு மாசத்துக்கு முன்னாடியே என்கிட்டே சொல்லி வச்சதாலதான் நான் ஒங்ககிட்ட சொல்றேன்,'' ''உடனே முன்பணம் கொடுத்து வீட்டை புடிச்சிகங்க,'' இல்லனா வீடு கை மாறிடும்னு தரகர் சொன்னான். அதான் ஒன்ன கூட்டிக்கிட்டுப்போய் வீட்ட காட்ட முடியாம போயிடுச்சி. நமக்கு தகுந்த மாதிரி வீடு நல்லாவே இருக்கு தனம், நீ ஒன்னும் கவலப்படாத. காலைல வீட்டை காலிப்பண்ணனும் சீக்கிரம் தூங்கு, என்றான் முத்துக்கருப்பன்.
''சரிங்க'', நீங்க சொன்னா சரிதான். ஏதோ மனசுல தோணிச்சி கேட்டுபுட்டேன் அம்புட்டுதான், என்று தன் பேச்சை முடித்தாள் தனக்கொடி.
அதன் பிறகு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது, ஈழவேந்தன் செவிகளில் நுழையவே இல்லை. ஆனால் நாளைக்கு வீட்டை காலிப்பண்ண போகிறார்கள் என்பது மட்டும் அவன் தெளிவாக புரிந்துகொண்ட அடுத்த கணமே, சோகம் கலந்த தவிப்புகளில் அவன் வேரற்று விழுந்தான்.
கனத்த அவனது மனப்புரவி, காலொடிந்து நெல்லி மரத்தின் கீழ் விழுந்து கிடந்தது. காலொடிந்து கிடந்த அவனது மனப்புரவி மெல்ல மெல்ல ஒரு ஆண்டு பின்னோக்கி நகர்ந்தது.
அவன் இரண்டாம் வகுப்பு படிக்கும்பொழுது, அன்று ஒரு நாள் தமிழாசிரியர் அமிர்தகணேசன், ''மரம் நடுவிழா'' பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். மரத்தால் மனிதனுக்கு கிடைக்கிற நன்மைகளையும். மரம் வளர்ப்பிற்கான அவசியத்தையும். அவர் எடுத்துக் கூறியதை கூர்ந்து கவனித்த ஈழ வேந்தனுக்கு, அப்பொழுதே மரம் வளர்க்க வேண்டுமென்ற ஆசை முளைத்ததுவிட்டது. அந்த ஆசை அன்றைக்கே நிறைவேறியதில் அவன் மிகுந்த மகிழ்ச்சிக் கொண்டான்.
ஆம்...! அன்று உணவு இடைவேளையில் தமிழாசிரியர் அமிர்தகணேசன். வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார். ஈழவேந்தனுக்கும் ஒரு நெல்லிமரக் கன்று கிடைத்தது. அதை கொண்டு வந்து தனது வீட்டின் முன்பு குழிதோண்டி நட்டு வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்தான். ஒரு வார காலத்தில் மரமும் நன்றாக வளரத்தொடங்கியது. மரம் வளர வளர, அவனுக்கு மரத்தின்மீது காதலும் வளர்ந்தது. அதன் விளைவு...!'' எப்பொழுதும் அந்த நெல்லிமரத்து அருகில் இருப்பதையே அவன் பெரிதும் விரும்பினான். அவனது மகிழ்ச்சியையும் துன்பத்தையும் அதனோடு அவன், அவனது உணர்வுகளால் பகிர்ந்துகொண்டான். அவன் விளையாடுவதை அது தலையாட்டி ரசிப்பதையும், அவன் பேசுவதை அது கூர்ந்து கேட்பதையும், அவனது சித்த புத்தியால் முழுக்க முழுக்க உணர்ந்து இருந்தான்.
ஈழவேந்தன் தனது தங்கை செல்வியோடு எப்பொழுதும் நெல்லிமரத்து அருகில்தான் விளையாடிக்கொண்டு இருப்பான். வீதிக்குச் சென்று பிள்ளைகளோடு விளையாடுவதை அவன் விரும்புவதில்லை.
அன்று ஒரு நாள் செல்வி தின்பண்டம் கேட்டு அழுது அடம் பிடித்துக்கொண்டு இருந்தாள். வீட்டில் எதுவும் இல்லாததால், தனக்கொடியால் அவளுக்குத் தின்ன எதுவும் கொடுக்க முடியவில்லை. அவளது அழுகையையும் அடக்க முடியவில்லை. அப்பொழுது ஈழவேந்தன் அழுதுகொண்டு இருந்த தங்கையை தூக்கிகொண்டு வந்து. ''செல்வி இங்க பார் நெல்லிமரம்''.., ''நான் நட்டுவச்ச மரம் எப்புடி வளர்ந்துடுச்சி பாரேன்''..., ''செல்வி அழுகையின் ஒலியை சற்று குறைத்தவாறே நெல்லிமரத்தைப் பார்த்தாள்.'' ''இது இன்னும் பெருசா வளந்து நெறையா நெல்லிக்காய் காய்க்கும்''..., ''அப்போ நானு மரத்துல ஏறி, ஒனக்குநெல்லிக்கா பறிச்சி பறிச்சி போடுவானாம்,,, நீ எடுத்து எடுத்து சாப்டுவியாம்'', சரியா என்றான்.
உடனே பட்டென தனது அழுகையை நிறுத்திக்கொண்ட செல்வி, ம்ம்'',,, என்று மகிழ்ச்சியோடு தலையாட்டியவாறே..., நெறையா நெல்லிகா காய்க்குமா.....?
ம்ம்... ஆமாம் நெறையா காய்க்கும்.
''அண்ணா''... எனக்கு நெறையா வேணும், தருவியா....?''
''ம்ம்... எல்லாமே ஒனக்குத்தான்'', நீ இனிமே அழக்கூடாது சரியா...?.
''ம்ம்.... அயமாட்டேன்.'' கண்களை துடைத்தவாறே செல்வி மகிழ்ச்சியில் கூறினாள்.
குண்டு குண்டு தக்காளி
குதிர மேல சவாரி
ஏண்டி செல்லம் அழுவுற
நெல்லிக் காய் பறிக்கலாம்
ஆளுக்குப் பாதி திங்கலாம்...என்று பாடியவாறே ஈழவேந்தன் கிச்சு கிச்சு மூட்ட. ''ஹ ஹ ஹா.... ஹ ஹ ஹா... செல்வி மகிச்சியில் சிரிக்க.'' இருவரும் நெல்லிமரத்தின் கீழ் விளையாடத் தொடங்கினார்கள்.
இப்பொழுதெல்லாம், அந்த நெல்லி மரத்தின்மேல் செல்விக்கும் ஒரு தனிப்பாசம் வந்துவிட்டது, அவளும் அந்த நெல்லிமரத்திற்கு தினமும் தண்ணீர் ஊற்றினாள். அதன் அருகில் இருந்து விளையாடுவதையே பெரிதும் விரும்பினாள். அதன் பிறகு அவள் எப்பொழுது அழுதாலும் அந்த நெல்லிமரத்தை காட்டியே அவளை சமாதானம் செய்தான் ஈழவேந்தன்.நெல்லிமரத்தைப் பற்றி பேசினாலே, மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாய் அவளும் அழுகையை நிறுத்திவிடுவது வழக்கமாகிவிட்டது.
மீண்டும் காலுடைந்த அவனது மனப்புரவி படுக்கையறைக்கு வந்தது. ''அய்யய்யோ..!'' செல்விக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ...?'' ஏன் இப்படியெல்லாம் நடக்குது...?. வீடு மாற்ற வேண்டாமென்று சொன்னால், அப்பா அம்மாவிடம் நமது பேச்சு எடுபடுமா...?. தலைகால் புரியாமல் குழம்பித் தவித்த அந்த குழந்தை மனம் எப்படியோ உறங்கிப் போய்விட்டது.
விடிய காலையில் தூங்கி எழுந்து வெளியே வந்தான் ஈழவேந்தன். முத்துக்கருப்பனும், தனக்கொடியும் மீன்பாடி வண்டியில் சாமான் சட்டிபுட்டிகளை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அதை கண்ட ஈழவேந்தனுக்கு திகீர்ரென்று தீப்பற்றியது நெஞ்சத்தில். அந்த தீ நாக்குகளில் அவன் சாம்பலாகிக் கொண்டு இருந்தான.
ராத்திரி அம்மாவும் அப்பாவும் பேசியது அவனுக்கு உடனே நினைவிற்கு வந்தது. வீட்டை மாற்றவேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால், இத்தனை விரைவாக அதை செயல்படுத்துவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அப்பா அம்மாவிடம் பேசுவதற்குகூட ஒரு அவகாசம் இல்லாமல் போய்விட்டதே என்று மனம் ஓலமிட்டது. ''அம்மா என்ன பண்றீங்க...?'' ஏன் சாமான் எல்லாத்தையும் வண்டில ஏத்துரிங்க...?'' வீட்டை மாற்றுகிறார்கள் என்பதை அவன் தெளிவாக உணர்ந்த போதும், இப்படி அவன் தனக்கொடியிடம் கேட்டான்.
''பக்கத்துத் தெருவுல வேற வீடு பாத்தாச்சி. நாம எல்லாரும் அங்க போவ போறோம்.'' என்று கூறியவாறே எடுத்து வந்த சாமான்களை மீன்பாடி வண்டியில் வைத்துக்கொண்டு இருந்தாள் தனக்கொடி.
ஈழவேந்தனின் மனது சுக்குநூறாய் நொறுங்கியது.ஆசை ஆசையாய் வளர்த்த நெல்லிமரம், இனி அவனுக்கு சொந்தமில்லை, அதைவிட்டு நிரந்தரமாகப் பிரியப் போகிறோம், இனி இந்த நெல்லிமரத்தோடு பேச முடியாது, விளையாட முடியாது, ஏன் பார்க்கவே முடியாது, என்று அவன் உணர்ந்த அந்த மரண நொடியில் இமைக்கரையை பொத்துக்கொண்டு கண்ணீர் வெள்ளம் பீறிட்டது.
ஓடிச்சென்று தனக்கொடியின் முந்தானையைப் பிடித்துக்கொண்டான். ''அம்மா வேண்டாம்மா நாம இங்கவே இருக்கலாம்மா...'' இதுதான் நல்ல வீடு..! இதுதான் எனக்கு புடிச்சி இருக்கு என்றான் அழுதவாறே...,
நாம போகப்போற வீடு இதவிட பெரியவீடு. வாடகையும் குறைவு. பள்ளிக்கூடம் பக்கமாவும் இருக்கு. அந்த வீட்டை வந்துப் பாரேன் ஒனக்கும் ரொம்ப புடிக்கும், என்று சொல்லிக்கொண்டு இருந்த தனம். வீட்டிற்குள் சாமான்களை எடுத்துக்கொண்டு இருந்த முத்துக்கருப்பன் கூப்பிட, இதோ வந்துட்டேன் என்று கூறியவாறே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.
ஈழவேந்தன் தனது பேச்சு எடுபடாது என்பதை புரிந்துகொண்டான். வீட்டைவிட்டு போயே ஆகவேண்டிய கட்டாயச் சூழலில் சிக்கிக்கொண்ட அவன். குமுறும் நெஞ்சோடு நெல்லிமரத்தின் அருகே வந்தான்.
எப்பொழுதும் ஆனந்தத்தோடு அசைந்து அவனை வரவேற்கும் நெல்லிமரம். இன்று அசைவின்றி தலைகுனிந்து மண்ணை முறைத்துக்கொண்டு நின்றிருந்தது. ஒரு நாள்கூட அவனைப்பார்க்காமல் அதுவோ, அதைப் பார்க்காமல் அவனோ இருந்ததில்லை. ஆனால், இனி எப்பொழுதுமே அவர்கள் சந்தித்துக்கொள்ள போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. அப்படியே என்றைக்காவது சந்திக்க நேர்ந்தால் அவன் தூரத்தில் இருந்து கையசைக்கலாம். இதுவும் தலையை அசைத்து நலம் பகிரலாம். ஆனால் நெருங்கித் தழுவி இருவரும் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள முடியாதே என்ன செய்வது,,,? ஒருவேளை நெருங்கி வந்து கட்டித் தழுவி உணர்வுகளை பகிர்ந்துகொண்டாளும்கூட அது நிச்சயிக்கப்பட்டதாகவோ... நிரந்தரமானதாகவோ இருக்கப் போவதில்லையே....!
இந்த ஒரு வருடத்தில் அவனைவிட அது இரண்டு மடங்கு உயரமாகவே வளர்ந்து இருந்தது. ஈழவேந்தன் அதை அண்ணார்ந்துப் பார்த்தான். ஒவ்வொரு சிறு சிறு இலைகளுமே அவனைப்பார்த்து கதறி அழுவதாகவே அவன் மனசுக்குத் தோன்றியது. ''அழாதா பின்ன...?'' அவனுக்காவது அப்பா அம்மா இருக்கிறார்கள். ஆனால், அதற்கு அப்பா அம்மா எல்லாமே இவன்தானே...!'' எப்பொழுதும் அதனோடு நிறைய பேசுவான் அவன். ''இதைத்தான் பேச வேண்டும் என்றில்லை, அந்த மரத்திடம் எதை வேண்டுமானாலும் உளறுவான்.'' அவன் வெளியில் இதுவரை பேசிடாத பல விடயங்களை அதனிடம் பேசி இருக்கிறான். ''இன்னும்கூட சொன்னால்.... முத்துக்கருப்பனுக்கோ, தனக்கொடிக்கோ, செல்விக்கோ, அல்லது உங்களுக்கோ எனக்கோ அவனைப்பற்றித் தெரியாத பல விடயங்கள் அந்த மரத்திற்கு மட்டும்தான் தெரியும்.''
''நான் ஒன்ன விட்டுட்டு போகப்போறேன், நீயும் என்கூட வருவியா...?'' ''ஒன்னால வர முடியுமா...?'' ''என்னாலே ஒன்ன விட்டுட்டு இருக்க முடியாதே...! நீ மட்டும் எப்படி இருப்ப என்ன விட்டுட்டு? '' ''நான் இல்லனா ஒன்ன யாரு கவனிச்சிகிவா...?'' - என்று சிறுபிள்ளைதனமாக அவன் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் அந்த நெல்லிமரத்தின் இதயத்தில் கோடாரியாய் விழுந்துகொண்டு இருந்தது. ''எதுவும் சொல்ல முடியாமல் மௌனமாய் அழுதுகொண்டு இருந்த மரத்தை பிடித்து உலுக்கினான்.'' '' ஏன் ஊமையா இருக்க பேசு எதாச்சும், ''பேசு''... கேட்குறேன் இல்ல, என்றான். பெருங்கடல் வேதனை பீறிடும் மனதோடு.
என்ன பேசும் அந்த நெல்லிமரம், அதுவும் வேதனைத்தீயில் வெந்துகொண்டுதானே இருக்கிறது.
இந்த பிரிவு இருக்கிறதே, அது யாரைத்தான் விட்டுவைத்து இருக்கிறது, இவர்களை விட்டுவைப்பதற்கு...?. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பிரிவு என்ற ஒன்று இயல்பாகவே இணைந்து இருப்பதுதானே வாழ்க்கையாக இருக்கிறது. அதை தவிர்த்துவிட்டு எவரால்தான் இங்கே வாழ்ந்துவிட முடியும். நம்மோடு இருப்பது எதுவும் நிரந்தரமில்லை. நாமும் நிரந்தரமில்லை. அப்படியெனில், பிரிவதற்கென்றே நாம் பிறந்திருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
அண்ணா... ஏன் அயிவுர...?'' அந்த நேரத்தில் அங்க வந்த செல்வி, விபரீதம் புரியாமல் பரிதாபமாக கேட்டாள்.
பாப்பா... நாம வேற வீட்டுக்கு போவப்போறோம்...,
அப்போ... நெல்லிமரமும் நம்ம கூடவே வருமா..?
ம்ம்...ஹூம்...! வராது, நாம மட்டும்தான் போவோம், ''கனத்த பேச்சு திக்கித் திணறி வந்தது.''
''அப்புறம்... எனக்கு நெல்லிக்கா எப்புடி பறிச்சித் தருவ...?''
அப்பாத்தான் நம்மள வேற வீட்டுக்கு கூப்டுகிட்டு போறாரே, அப்புறம் எப்புடி ஒனக்கு நெல்லிக்கா பறிச்சித் தரமுடியும்....? என்றவன் வா போய் அப்பாகிட்ட அந்தவீடு வேணாம், இங்கயே இருப்பமுன்னு சொல்லுவோம். என்று தனது போராட்டத்தில் தங்கை செல்வியையும் சேர்த்துக்கொண்டு அப்பாவிடம் சென்றான்.
ஈழவேந்தன், தன் அப்பா அம்மாவிற்கு அவனது உணர்வுகள் புரியவில்லை என்றே அவன் நினைத்தான். ஆனால், அவன்மீது அவர்கள் மிகுந்த பாசம் வைத்து இருந்தார்கள். வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அப்போ அப்போ சூழ்நிலைபேற்ப வீடு மாறி மாறித்தானே வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. இந்த எதார்த்தநிலையை உணர்ந்துகொள்கிற அளவிற்கு அவன் இன்னும் பக்குவமடையவில்லை என்பதுதானே உண்மை.
நான்கு ஐந்து நடைகளாக மீன்பாடி வண்டியில் சாமான்களை ஏற்றி புதிய வீட்டில் இறக்கி வைத்துவிட்டு. கடைசி நடையாக சிறு சிறு சாமான்களை எல்லாம் தேடி எடுத்து வண்டியில் வைத்துக்கொண்டு இருந்த முத்துக்கருப்பனிடம், அப்பா நாம அந்த வீட்டுக்குப் போவ வேண்டாம்பா, இங்கவே இருக்காலாம் என்று அழுதகண்ணோடு கூறினான் ஈழவேந்தன்.
ஏம்பா என்ன ஆச்சி...? என்று கேட்ட அப்பாவிடம், எனக்கு அந்த வீடு புடிக்கல, இந்த வீடுதான் புடிச்சிருக்கு என்றான் அழுத்தமாக.
''எனக்கும் அந்த வூடு புடிக்கில... இங்கதான் புடிச்சிருக்கு.'' அண்ணன் ஈழவேந்தனைத் தொடர்ந்து செல்வியும் அவன் சொல்வதை அப்படியே பின்பாட்டுப்பாடினாள்.
அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. அந்த வீடு ரொம்ப நல்லா இருக்கும் தெரியுமா....? நீங்க வந்து பாருங்களேன்.
''போ .. எனக்கு வேண்டாம் அந்த வீடு''.- ஈழவேந்தன் கூற...
''போ எனக்கும் வேணாம்''..., செல்வியும் கூறினாள்.
பிள்ளைகளா... சொல்ற பேச்சுக் கேக்கணும் புரியுதா....!
''கேட்க்க முடியாது.'' கோபத்தோடு சத்தமாகக் கூறினான் ஈழவேந்தன். ''கேக்க முடியாது''... செல்வியும் தீவிரமாக கூறினாள்.
பிள்ளைகளா... சொல்பேச்சி கேட்கல, அப்புறம் அடி வாங்கப்போரிங்க பாருங்க. என்று சற்று மிரட்டும் தொனியில் கூறிக்கொண்டே. அவர்களின் விளையாட்டு சாமான்களை எல்லாம் முத்துக்கருப்பன் மீன்பாடி வண்டியில் வைத்துக்கொண்டு இருந்தான்.
அந்த நேரம் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த தனக்கொடி, என்னங்க எல்லா சாமானும் எடுத்தாச்சி. நல்லத் தேடிப்பாத்துட்டேன் வீட்ல இனிமே ஒன்னும் இல்ல. அவ்ளோதான் வீட்டை பூட்டிட்டு சாவியை வீட்டுக்கார மொதலாளி கைல குடுத்துட்டு போகலாம் என்றாள்.
''அப்படியா...? சரி சரி வீட்ட பூட்டிட்டு சீக்கிரம் வா.'' நல்ல நேரம் போறதுக்குள்ள அந்த வீட்ல போய் பால் காய்ச்சிடுவோம், என்று முத்துக்கருப்பன் கூறியவாறே, பிள்ளைகளா நீங்க ரெண்டு பேரும் வண்டில ஏறிக்கங்க புது வீட்டுக்கு போவலாம் என்றான்.
''நான் வண்டில ஏறமாட்டேன் போ... என்று ஈழவேந்தான் பிணக்கோடு உதட்டைப் பிதுக்கி வெம்பினான்.'' அவனோடு சேர்ந்து செல்வியும் மழலை சோகத்தோடு நின்றுகொண்டு இருந்த்தாள்.
இங்க பாருங்க..! ''நீங்க ரெண்டு பேரும் அடம் புடிச்சா அப்புறம் அப்பா அடிப்பேன், என்று கூறியவாறே''..., செல்லகுட்டி இங்கபாரு மீன்பாடி வண்டி, நீ வண்டில உட்காந்துகுவியாம், அப்பா வண்டி ஓட்டுவனாம், நீ சந்தோசமா வருவியாம், என்று செல்வியை தூக்கி வண்டியில் உட்கார வைத்தான் முத்துக்கருப்பன்.
வண்டியில் ஏறிகொண்ட சந்தோசம் வந்துவிட்டதால், செல்வி நெல்லிமரத்தின் நினைவுகளை மறந்து, தனது போராட்டத்தை கைவிட்டாள்.
இனி ஒன்றும் பண்ண முடியாது என்பதை உணர்ந்த ஈழவேந்தன், வேறு வழியில்லாமல் வண்டியில் ஏறி அமர்ந்தான். நெல்லிமரத்தைப் பார்த்து, வழியும் கண்ணீரோடு போயிட்டுவரேன் என்று டாட்டாக் காட்டினான். அவனோடு சேர்ந்து செல்வியும் டாட்டாக் காட்டினாள். வண்டி வாயிலை விட்டு நகர்ந்துகொண்டு இருந்தது. ஈழவேந்தனின் மனது அழுதவாறு சென்றது.
தனது உணர்வுகளை அப்பா அம்மா பெரிதாக பொருட்படுத்தவே இல்லை என்பதை நினைத்தால் அவனுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.
பிள்ளைகளின் உணர்வுகளை பெற்றோர்கள் பொருட்படுத்தவில்லை எனில், அவர்களின் வாழ்க்கை சீர்குலைந்துவிட அதுவே காரணமாகிவிடுவதோடு, அவர்களின் வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிடும் அபாயம் இருப்பதை, ஒவ்வொரு பெற்றோர்களும் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஒரு செடி மரமாவதற்கு முன்பு, காற்றில் அது சாய்ந்துவிடாமலும். வளைவு நெளிவு இன்றி நேராக வளருவதற்க்காகவும், அதன் அருகில் ஒரு கம்பு நட்டு அந்த செடியை அதனோடு பிணைத்து வைப்பார்கள். அதே போல்தான், பிள்ளைகள் என்ற செடி வளர பெற்றோர்கள் துணை கம்பாக இருக்க வேண்டும். இதை அனைத்து பெற்றோர்களும் உணர்ந்துகொண்டால் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்தானே.
அவனது உணர்வுகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது ஒருபுறமிருந்தாலும். அன்பான வார்த்தைகளால் அவனை தேற்றக்கூட அப்பொழுது அந்த பெற்றோர்களுக்கு அவகாசமில்லாமல் போனதுதான் வருத்தம். பிள்ளைகள் இப்படித்தான் அழுது அடம் பிடிப்பார்கள் பிறகு சரியாகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான், அவர்கள் முழுக்க முழுக்க தங்களது கவனத்தை வேலையில் செலுத்தி இருந்தார்களோ என்னவோ....!
மீன்பாடி வண்டியில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்ற ஈழவேந்தான். புது வீடு என்பதால், அங்கும் இங்கும் சுற்றி பார்த்துகொண்டு இருந்தான். தனக்கொடி அடுப்பு மூட்டி, பால் காய்ச்சுவதற்கு தயாராகிக்கொண்டு இருந்தாள்.
முன்பு இருந்த வீட்டைவிட இது கொஞ்சம் பெரியவீடுதான். இருபக்கமும் வாசற்படி இருந்தது. வீட்டிற்கு பின்னால் சிறிய தோட்டம் இருந்தது. கழிவறையும் அங்கே இருந்தது. முன்னாலும் ஆள் புழங்குகிற அளவிற்கு வாசலும், அதனை ஒட்டி வீதியும் இருந்தது. தனக்கொடி காய்ச்சிகொடுத்த பாலை வேண்டா வெறுப்பாக குடித்து முடித்த ஈழவேந்தனுக்கு, அங்கு இருக்கவே மனது ஒப்பவில்லை. பழைய வீட்டையும். நெல்லிமரத்தையுமே அவனது மனப்புரவி சுற்றி சுற்றி வந்துகொண்டே இருந்தது.
இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலைக்கு வந்த அவன். அப்பா அம்மா கவனிக்காத சமயத்தில் வீட்டைவிட்டு வெளியேறினான். விறு விறு என்று பக்கத்துத் தெருவில் இருக்கும் பழைய வீட்டைநோக்கி நடந்தான். நடந்தான் என்பதைவிட ஓடினான் என்றே சொல்லலாம். பக்கத்து தெருதானே அதனால் அங்கு செல்வது அவனுக்கு சிரமமின்றியே இருந்தது.
பழைய வீட்டிற்கு வந்த அவனுக்கு பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. காரணம், வீட்டின் இரும்பு வாயில் கதவு பெரிய வடச்ங்கிலியால் பிணைத்து பூட்டி இருந்தது. கம்பி வாயில் கதவின் இடுக்குகள் வழியாக, நெல்லிமரத்தை பார்த்தான். அது சோகம் தோய்ந்த முகத்தோடு, பரிதாபமாக இவனைப் பார்த்துகொண்டு இருந்தது. சிறை கம்பிகளுக்கு அப்பால் இருந்த நெல்லிமரத்தை பார்க்க பார்க்க சோகம் அவன் மனதை ரம்பமாக அறுத்துக்கொண்டு இருந்தது. வாயில் கதவு உயரமாக இருந்ததால் ஏறி குதித்து உள்ளே செல்ல முடியாத நிலை வேறு.
குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதுவரை, தங்களது உண்மையானப் பாசத்தை, தங்களுக்குப் பிடித்தவர்கள் மீதும், தங்களுக்குப் பிடித்த பொருட்கள் மீதும் முழுமையாக செலுத்திவிடுகிறார்கள். ''அவர்களின் உண்மையான பாசத்திற்கு பேதமைகள் என்பதே கிடையாது என்பதுதான், இந்த மானுடத்தின் உச்சக்கட்ட புனிதமாக இருக்குமென்று நினைக்கிறேன்.'' இல்லை என்றால், நஞ்சுள்ள பாம்புகளையும் கொஞ்ச முடியுமா...?'' ''மரப்பாச்சி பொம்மைகளோடு பேச முடியுமா...?'' ''மரம், மட்டை, கல்லு, மண்ணுகளோடு விளையாடி களிக்க முடியுமா...?'' ''நாய், பூனைகளோடு சேர்ந்து ஒரே தட்டில்தான் உண்ண முடியுமா...?'' ''எதார்த்த நிலைபாடுகளை என்றைக்குமே திரையிட்டு மறைக்கத் தெரியாத, உண்மையின் உண்மைகள் குழந்தைகளே என்றால் அதை மறுக்கத்தான் எவராலும் முடிந்துவிடுமா...?''
மீளாத சோகத்தோடும், தாளாத வலிகளோடும் நெல்லிமரத்தையே வெறிக்கப் பார்த்துக்கொண்டு இருந்தான் ஈழவேந்தன்.ஒரு சொம்பு தண்ணீரில் ஒரு மடக்கு அவனும், ஒரு மடக்கு அதுவும் மாற்றி மாற்றி குடித்த நினைவுகள் அவனை வாட்டிக்கொண்டு இருந்தது.
''ஈழவேந்தா..., என்னப்பா இங்க நிக்கிற''..., ''என்ன ஆச்சி...?'' என்ற குரல் கேட்டு பட்டெனெ திரும்பி பார்த்தான். தமிழாசிரியர் அமிர்தகணேசன் அவனை நெருங்கி வந்து தோளில் கை போட்டார்.
சார்..., அங்க பாருங்க நீங்க குடுத்த நெல்லிமரம், என்று ஈழவேந்தன் கையால் காட்டினான்.
அதை பார்த்த தமிழாசிரியர், ''அடடா..., நல்லா அழகா வளர்ந்து இருக்கே...!'' உணமையிலேயே நீ திறமையானவந்தான் என்று அவனைப் பாராட்டியவாறே... ஆமாம் ஏன் நீ இங்க தனியா நிக்கிற...? வாயில் பூட்டிக்கிடக்கு, முகமெல்லாம் வாடியிருக்கு என்னாச்சி...?
சார் நாங்க வேற வீட்டுக்கு மாறி போய்ட்டோம். என்றான் கண்ணை கசக்கியவாறே...
அப்படியா...?
ஆமா சார், அப்பா எங்கள வேற வீட்டுக்கு கூப்டுகிட்ட போய்ட்டார். எனக்கு அந்த வீடு புடிக்கல, இந்த வீடுதான் புடிச்சி இருக்கு.
அது சரி..., ஏன் அந்த வீடு உனக்கு பிடிக்கல....?
இந்த நெல்லிமரம் பெருசா வளந்து, காய் காய்ச்சா எங்க பாப்பாவுக்கு பறிச்சி தரேன்னு சொல்லிருக்கேன். அந்த வீட்டுல மரமே இல்ல சார். எங்க அப்பாகிட்ட நீங்க சொல்லுங்க சார், நாங்க திரும்ப இங்கவே வந்துடுறோம், என்று பரிதாபமாகக் கூறினான்.
இப்பொழுது, ''தமிழாசிரியர் அமிர்கணேசனுக்கு'', ஈழவேந்தனின் மனநிலை தெளிவாகப் புரிந்துபோய்விட்டது. அவன் பாசமாக வளர்த்த நெல்லிமரத்தைவிட்டு அவனால் பிரிந்துபோக முடியவில்லை என்பது.
இவனது மனநிலையை எப்படியும் மாற்றவேண்டும் என்று எண்ணிய தமிழாசிரியர். ஈழவேந்தா,,, என்னோடுவா என்று அவனை அழைத்துச்சென்றார். இயேசுவை பின்தொடரும் ஆட்டுக்குட்டியைப்போல, அவர் முன்னேச்சென்றார் அவன் அவரை பின்தொடர்ந்தான்.
சற்றுதூரம் நடந்ததும், ஊருக்கும் ஒதுக்குப் புறத்தில் இருந்த அவரது வீடு வந்தது. ஈழவேந்தனை வீட்டுத் திண்ணையில் உட்காரச்சொல்லிவிட்டு. அவர் வீட்டிற்கு பின்னே இருந்த தோட்டத்திற்குச் சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்த அவரின் கையில் இரண்டு மரக்கன்றுகள் இருப்பதை, ஈழவேந்தன் முறைத்து முறைத்துப் பார்த்தான்.
என்னா அப்படி பார்க்குறே...?'' ஒரு மாமரக்கன்று, ஒரு நெல்லிமரக்கன்று, ரெண்டுமே உனக்குத்தான். என்று கூறியவாறே அந்த மரக்கன்றுகள் இரண்டையும் ஒரு சிறிய சாக்குப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டு இருந்தார் தம்ழாசிரியர் அமிர்தகணேசன்.
இப்பொழுது ஈழவேந்தனின் மனதில், பட்டென மகிழ்ச்சி குடிகொண்டது. ''இரண்டு கன்றுமே நமக்கா..?'' இரட்டிப்பு மகிழ்ச்சி அவனுக்கு. இப்பொழுது அவனது மனப்புரவிக்கு சிறகு மிக நீளமாக முளைத்து இருந்தது. அது பூமரக்காடு, புல்வெளிப்பாதை எனக்கடந்து, மலைமுகடுகளை எல்லாம் தாண்டி, அண்டார்டிகா கண்டத்தை வட்டமடித்து, மகிழ்ச்சியில் திளைத்தது.
''இந்தா இத கொண்டுபோய் புதுவீட்டுல நட்டுவச்சி வளர்க்கணும் சரியா...?'' என்று தமிழாசிரியர் மரக்கன்றுகளை அவன் கையில் கொடுத்தார். ''சரிங்க சார்'', என தலையை வேகமாக ஆட்டியவாறே பட்டென மரக்கன்றுகளை கையில் வாங்கிக்கொண்டான். அதற்கு மேல் அங்கு நிற்பதற்கு அவன் நினைத்தாலும். அவன் கால் நிற்க தயாராக இல்லை. நான் வரேன் சார். என்று ஒரு வார்த்தையை உதிர்த்துவிட்டு. ''அவரின் பதிலுக்குகூட காத்திடாமல். மரக்கன்றுகளை தூக்கிக்கொண்டு வீடுநோக்கி ஓடினான்.''
இப்பொழுது அவன் கால்களுக்கு சிறகு முளைத்து இருந்தது. சிறிது நேர பயணத்திலேயே வீட்டை அடைந்தவன். செல்வி.. செல்வி.. என்று தனது தங்கையை அழைத்தான். ஹய்... அண்ணா வந்துட்டான். என்று கூறியவாறே வீட்டிற்குள் இருந்து ஓடிவந்தாள் செல்வி. அவளைத் தொடர்ந்து வந்த தனக்கொடி. எங்கடா சாப்டாமகூட போன?'', என்னா அது கைல..? யார் குடுத்தா..?'' என்றாள், அவன் கையில் இருந்த மரக்கன்றுகளை பார்த்து.
தமிழ் வாத்தியார் குடுத்தாரு என்று அவன் கூற. சரி சரி... களவெட்டியை எடுத்துக்கிட்டுபோய், வீட்டுக்கு பின்னாடி குழித் தோண்டி நட்டு வைங்க என்றாள் தனக்கொடி. சரிம்மா... என்றவாறே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான் ஈழவேந்தன். அவனைத்தொடர்ந்து செல்வியும் சென்றாள்.
வீட்டின் பின்புறமுள்ள தோட்டப்பகுதியில், களவெட்டியால் ஒரு அடி ஆழத்திற்கு இரண்டு குழிகளை தோண்டினான். குழியில், எரு உரம் எதுவுமேப் போடவில்லை. அந்த மண்ணிற்கு அது அவசியம் இல்லாமல்தான் இருந்தது. ஏனென்றால், அது நல்ல சத்துள்ள வண்டல் மண் என்பதால்.
இரண்டு குழிகளிலும் கன்றுகளை வைத்து மண் போட்டு மூடி. ஈழவேந்தனும், செல்வியும் தண்ணீர் ஊற்றினார்கள். ஈழவேந்தனுக்கு எதையோ சாதித்துவிட்டதைபோல் மனம் குதியாட்டம் போட்டுகொண்டு இருந்தது. ''பக்கத்தில் மழலையாய் நின்றுகொண்டு இருந்த செல்வியை அப்படியே கட்டியணைத்து தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு'', ''செல்வி அந்த மாங்கன்று உனக்கு,'' ''இந்த நெல்லிக்கன்று எனக்கு.'' நீ தினமும் இதுக்கு தண்ணி ஊத்தணும் அப்போதான் மரம் சீக்கிரம் பெருசா வளரும் சரியா..? என்றான் அவள் கன்னத்தில் முத்தம் தந்தவாறே...!
செல்வி சந்தோசமாக சரியென்று தலையாட்டிகொண்டே, மரம் பெருசா வளந்து நெறையா மாங்கா காய்க்குமா,,,?''
''ம்ம்.. ஆமாம் நெறையா காய்க்கும்.''
அப்போ... நாம ரெண்டுபேரும் பறிச்சி பறிச்சி திங்கலாமா...?''
ம்ம்.. ஆமாம், உனக்கு நெறைய பறிச்சி தரேன், நீ சாப்டு என்ன....?''
''ம்ம்''... ''அப்புறம் நாம வேற வூட்டுக்கு மாறி போய்ட்டா....??????''.---- ''என்று செல்வி ஈழவேந்தனிடம் அடுத்தக் கேள்விக் கணையை தொடுக்கும் முன்பே.'' - பிள்ளைகளா வந்து சாப்டுங்க என்று தனக்கொடி அழைக்க, இருவரும் வீட்டிற்குள் சென்றார்கள்.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......படீர்ர்ர்ர்.....!
''பின்வாசல் கதவு மூடப்படுகிறது.''.
--------------நிலாசூரியன்.