இவளை நேசிப்பது யார்
ஒரு இருட்டுக் காலத்தில்
தொலைத்த காதலை
இன்றும்
அவன்
வெளிச்சம் போட்டு
தேடிக் கொண்டு இருக்கின்றானாம்
மயங்கிய நாட்களில்
அள்ளித் தெளித்த கனவுகளை
ஒன்று சேர்த்து
தன் சிந்தனையின் முகத்துவாரத்தில்
இன்றும்
தேக்கி வைத்திருக்கின்றானாம்
ஒரு கோடி விண்மீன்களை
அள்ளி எடுத்தவன்
கோர்த்தெடுக்கத் தெரியாமல்
சிதற விட்டுவிட்டு
இன்றளவும்
ஆளுயர மாலையாய்
அணிந்து கொண்டு
காத்துக் கிடக்கின்றானாம்
என்றாவது
ஒரு நாள்
அவளை
சந்திக்க நேரிடும் என்பதற்காக
இன்றும்
தன் உயிர்க்குருவியை
உலகெங்கும்
பறக்க விட்டுக் கொண்டு
இருக்கின்றானாம்
எங்கும் அவள் முகம்
இங்கும் அவள் நினைவு
என்றும் அவள் கனவு
என்று
அவன்
தன் பழைய காதலிக்கு
அனுதினமும்
ஆராதனை செய்கின்றானாம்
எனது பெயரை
உனது குழந்தைக்கு
வைத்திருக்கிறாயா என்று
கேட்க வேண்டுமாம்
உனது பெயரைத்தான்
எனது குழந்தைக்கு
வைத்திருக்கிறேன் என்பதை
உயிர் விடுவதற்குள்
சொல்லிவிட வேண்டுமாம்
வருங்காலத்தின் பாதை கூட
அவள் நினைவுகள் தரும்
திசையில்தானாம்
காதலில் இவன் தோற்றதுகூட
காதலை
காலமும்
வளர்த்துக் கொண்டே இருக்கத்தானாம்
மறு ஜென்மத்திலாவது
இணைந்து வாழ வேண்டுமாம்
என்றெல்லாம்
உள்ளுக்குள் புகைந்து கொண்டு
உலா வந்து கொண்டிருக்கின்றான்
அவன்.,
தன்னை நம்பி வந்த
மனைவியுடன்
வாழ்ந்து[?] கொண்டு !
*******
[ இது ஒரு உண்மைக் க[வி]தை. என் நண்பன் அவன். இன்றும் பழைய காதலியின் நினைவுடனும் டாஷ்மாக்கே கதி என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் மனைவி இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கைப் போராட்டம் நடத்துகின்றாள். இன்னும் சொல்லப் போனால் அவன் ஒரு அரசுப் பள்ளி [பள்ளிக்கூடம் போகாத] ஆசிரியர் ]