தாய்க்கு ஒரு தாலாட்டு

எனை பிரிந்த தாயே
என்னையும் கூட்டிச்செல்ல
மறந்தாயே
எங்கு சென்றாலும் கூட்டிச்செல்வாயே
இன்று தனியே தவிக்க விட்டுச்சென்றாயே
பூ மொட்டு போல்
இருந்தாயே - இன்று
பூவை போல் உதிர்ந்தாயே
எங்களுக்காக ஓயாது
உழைத்தாயே - உடல் மெலிந்து
இளைத்தாயே
எனக்காகவே வாழ்ந்தாயே
கண் கொண்டு எனை காணாமலே
இறந்தாயே
காணக் கிடைக்காத
தெய்வமாக நின்றாயே
காற்றில் கரைந்த கற்பூரமாக ஆனாயே
மனக்குழியில் வைத்து
பாதுகாத்தாயே - இன்று
மணல் குழியில்
புதைந்து போனாயே
நான் அழுவதை
பார்த்திராத தாயே - இன்று
நீயே அழ வைத்து விட்டாயே
அய்யகோ அம்மா
எங்ஙனம் தேடுவேன்
இனி உன்னை - ஆறவில்லை நெஞ்சம்
தலைசாய்க்க தேடுகிறேன் உன்
மடியென்னும் மஞ்சம்
என் மண ஊர்வலம்
காண்பாய் என நினைத்தேனே - உன்
இறுதி ஊர்வலம் பார்த்து திக்கற்று நின்றேனே
மீண்டும் இம்மண்ணில்
வந்து பிறந்திடு தாயே
எம்மகளாக எனக்கு
அருள் புரிந்திடு தாயே