ஊரடங்கும் நேரத்திலே
ஊரடங்கிய நேரத்திலே வந்து
சேர்ந்த என் இனியவனே
வாய் திறந்து கேட்க துடித்த
வார்த்தைகள், ஏன் தாமதம்?
வெளி வரவில்லையே
ஊரடங்கி போனால் என்ன?
எந்தன் உள்ளம் இன்னும்
அடங்க வில்லையே
உன்னை கண்ட நிமிடத்திலிருந்து
அதன் கொந்தளிப்பு, கொதிப்பு
ஆர்ப்பரித்ததே
ஆயிரம் மனிதர் வீதியிலே போய்
வந்தார், நாள் முழுக்க, நான்
பார்க்கையிலே
ஆனாலும் உந்தன் முகம் தரும்
தணிவு எந்த முகமும் தருவதில்லையே
ஏன் இந்த கொந்தளிப்பு, ஏன்
இந்த தத்தளிப்பு, என்ன செய்தாய்
எந்தன் மனதையே?
தவிக்கும் எந்தன் உள்ளத்திற்கு
கொஞ்சம் தணிப்பு தேவையே,
வட்டில் சோற்றை நீ சாப்பிட்டால்,
உந்தன் வயிறு நிறையும், எந்தன்
உள்ளம் குளிரும்
வந்து உறங்கி, உந்தன் கை
அணைப்பில் என்னை சேர்த்து
கொண்டால், கோடி இன்பமே
தொடுத்து முடித்த மல்லிகை பூ,
மலர்ந்து கூந்தலிலே மணம் பரப்புதே
கொண்டவன் உந்தன் நாசி சேர
வேண்டுமென மலரின் மணம்
காத்திருக்குதே
கொட்டில் பசுவும் உன் சத்தம்
கேட்டு விழித்து நின்று குரல்
கொடுக்குதே
கோட்டை கட்டி வாழ்ந்த
மன்னருக்கு நீ எந்த விதத்திலும்
குறைந்ததில்லையே
ஊரடங்கிய நேரத்திலே வந்து
சேர்ந்த எந்தன் அரசனே
உறவெனக்கு நீ என, தந்திருந்த
தெய்வத்திற்கு கோடி நன்றியே