உனைப் பிரிந்து

எப்படி எழுத ஆரம்பிக்கலாம்'னு ஒரு 1000 முறை என் மனசுக்குள்ள ஒத்திகை செய்துவிட்டு தான் இந்த கடிதத்தை எழுத துவங்கினேன்.. இருந்தும் பாரேன்.. என் பேனா எழுதத் தெரியாமல் தள்ளாடுது.. எங்கே என் மனவோட்டங்களை குறைவாய் பதிவு செய்திடுமோ என்று..

கட்டாயம் இந்த கடிதத்தை முழுவதுமாய் நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் உனக்கு இதை அனுப்புகிறேன்.
நிச்சயம் ஒரு தடவயாவது படித்துப் பார்.. குறைந்தபட்சம் என் எழுத்துக்களாவது உன்னை அடையட்டும்..


இந்த கடிதம் கொண்டு வந்து உன்னிடம் சேர்க்கப்போவது வெறும் எழுத்துக்களை அல்ல, இவ்வளவு காலமா என் இதயம் சுமந்து கொண்டிருக்கும் உன் நினைவுகளின் பிம்பங்களை.. நீ என்னை பிரிந்தும், காலங்களாய் நான் காத்திருப்பது உனைப் போல் ஒரு பெண்ணைத்தேடி அல்ல, உன் நினைவுகள் என் மனசுக்கு தர அனுபவம் எனக்கு பிடித்து இருக்கிறது.. என் வாழ்க்கை பயணத்திற்க்கு புதுப் புது அர்த்தம் தரும் நொடிகள் பல நீ எனக்கு அளித்திருக்கிறாய், அவற்றிற்கெல்லாம் நன்றி..!!!
முன்போலிருந்தால் உரிமையுடன் உன்னை பெயரிட்டு அழைத்திருப்பேன்.. இப்போது விண்ணப்பிக்கிறேன், ஒரு தடவை உன் பெயரினை அழைத்துக்கொள்கிறேனே??? நிச்சயமாய் சம்மதிப்பாய் என்கிற நம்பிக்கையில்...

அடிக்கடி நீ என்னிடம், என் நெஞ்சோடு அணைந்து ஆருடம் சொல்வாய், நம் மணநாள் பற்றி, நம் வருஙகாலம் பற்றி..!!! ஆச்சரியப்படுகிறேன், பொய்களைக் கூட இத்தனை அழகாய், பசுமையாய், கோர்வையாய் உன்னால் கூறமுடிந்ததை எண்ணி...!!!
முன்பொருநாள் நள்ளிரவில் தூக்கம் கெட்டு எழுந்தேன், ஆச்சரியம், உன் குறுந்தகவல் என் அலைபேசியிடம் மெளனமாய் முறையிட்டுக்கொண்டிருந்தது.. தலையணையிடம் பெருமை பேசிக்கொண்டேன் நம் செயல்கள் ஒத்துப்போவதைப் பற்றி...


நமக்குள் இருந்த்து, இனி இல்லை என்றாகிப் போனது, அது எதுவோ ஒன்று. அதற்கு காதல் என்று பெயரிட்டு பார்த்தேன்.. கணத்த காயங்களை என்னகத்தே விட்டுச் செல்கிறது.. இருக்கட்டும், இனிமையாகத்தான் இருக்கிறது இந்த ஒரு கணம், இதெல்லாம் உனக்காக என நினைக்கும் போது!!!

மனதிற்கினியவளின் முதற் ஸ்பரிஸம், முதல் முத்தம், மரணத்திற்க்கும் அப்பாற்பட்டதாம், உண்மை என சொல்லி அனுப்புகிறேன்.!! என்னவளின் காதற்பரிசில்கள் தேவகுணங்கள் உடையன என்று..!!
கணங்களும், தினங்களும் திகைப்பூட்டி செல்கின்றதை நாம் உணரத்துவங்கியபோது, உருவானது இந்த விரிசல், நாம், நமக்கு கிடைக்காமல் போய்விடுவோமோ என்றெண்ணி..!!
நம் நலனுக்கென நாமே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள், இன்று என்னை நோக்கி ஏளனம் செய்கின்றன.. செய்வதறியாது குமைந்த தினங்கள் அளித்தாய், நன்றி...!!!


அன்றோ கார்காலம், மழைத்துளிகளுக்கு பயந்து கொஞ்சமும், மனதிற்குள் ஆசைகள் அதிகமுமாய் ஒரு குடைக்குள் நீயும் நானும்.. கணநேரம் நம் விரலிடை உரச, முகம் பார்த்து புன்னகைத்துக்கொண்டோம் பொருளரியாமல்..!! இனம்புரியாமல் மனதிற்க்குள் உரக்க சொல்லிக்கொண்டேன், "உலகாளப்பிறந்தவனடா நீ" என..!!!

விரும்பிக்கேட்டுக்கொண்டாய் சாமி கும்பிட நானும் உடன் வரவேண்டுமென, விபூதித் தீற்றல் இடும்போது இமை மூடி ஒருகணம் லேசாக ஊதினாய், மனதில் எனோ, அம்மாவின் சிரித்த முகம்.!!!
பிறந்த தினமன்று நான் வாங்கித்தந்த சிகப்பு நிற சேலையணிந்து, எப்படி இருக்கிறது என்று என்னைப் பார்க்காமல் வெட்கத்துடன் கேட்டாய், உன் முகமோ அந்த சேலையைவிட இன்னும் அழகாய் சிவந்து இருந்தது...!!!
எல்லாம் பொருந்திவர பொருந்தாமல் போனது நம் குடும்ப சூழல்..
மனமுவந்தே பிரிந்து வாழ நம்மை நாமே விதித்துக்கொண்டோம்..
"தெரிந்தோ தெரியாமலோ நாம் பழகிவிட்டோம். இப்போது தெரிந்தே பிரிவோம். எனக்காக, என கேட்க நான் உன் சொந்தம் இல்லை. உனக்காக நீ வாழ்ந்தே ஆக வேண்டும். உளமாற கேட்டு கொள்கிறேன். பிரிய வருத்தமாக தான் இருக்கிறது, இருப்பினும் வழி இல்லை.. " என வரிகளை சொல்லிவிட்டு, வலிகளை தந்துவிட்டு வாழ்கையை மறைத்துச் சென்றாய்.. வாழப்பழகிவிட்டேன்..!!!


உனக்கு நாளை திருமணமாமே????
வாழ்த்துக்கள்...!!!!

என் காதலிக்கு திருமணப்பரிசாக,
கணத்த மனதுடன் இதோ இந்த கடிதத்தினை அனுப்புகிறேன்,
.
.
.
.
.
.
என் வீட்டு குப்பைத்தொட்டிக்கு...!!!!!!

எழுதியவர் : சசிகுமார் (7-May-14, 8:10 am)
Tanglish : unaip pirinthu
பார்வை : 384

மேலே