நீருடல் நாயகன் 0தாரகை0

மழை வருகிறது
வெளியில் வாருங்கள்
மனங்களை கழுவ....

சாதிமத பேதமின்றி
சமத்துவம் பாராட்டும்
நீதிதேவதைகளை
பாருங்கள்!

காதல் உணர்வை
தட்டி எழுப்பி
கட்டி இழுக்கும்
நீர்கயிருகளை கொண்டு
இதயம் இணைக்க முயலுங்கள்!

வானின் மோனதவத்தால்
ஞான வரமாய்
பூமி பெற்ற
அருள்துளிகளால்
கறைபட்ட உள்ளத்தை
கழுவுங்கள்!

குழந்தைகள் கட்டிவைத்த
குட்டிக்காகித கப்பல்களை
கரைசேர்க்க வந்த
உயிர்துடுப்புகளுக்கு
உற்சாக வரவேற்பு தாருங்கள்!

விவசாயிகளின்
கண்ணீரைத் துடைக்க
வானிலிருந்து நீண்ட
தண்ணீர் விரல்களுக்கு
தங்க மோதிரம் அணிவியுங்கள்!

தாவரயினத்திற்கு
தன்னையே தாரைவார்த்து
மண்ணை பொன்னாக்கும்
தானதருமிகளுக்கு
சற்றே சாளரம் திறங்கள்!

மண்ணில் ஒளிந்திருக்கும்
மணத்தை வெளிக்கொணர்ந்து
என்னில் ஒளிந்திருந்த
இக்கவிதையை மீட்டெடுத்த
நீருடல் நாயகனல்லவா அவன்!

எழுதியவர் : தாரகை (7-May-14, 11:53 am)
பார்வை : 241

மேலே