நூற்றாண்டுகளின் கவிஞன் - கே-எஸ்-கலை
எழுத்துச் சவுக்கெடுத்து
எதிரிக்கு சுளுக்கெடுத்து
பார் செழிக்க பாடுபட்டு
பாட்டனாகிப் போய்விட்ட
சென்ற நூற்றாண்டின்
சிறந்த கவிஞன்
இறந்த கவிஞனாகி விட்டான் !
====
வானத்தில் நடந்து
மேகத்தில் தடுக்கி
அந்தரத்தில் விழுந்து
எழ முடியாமல்
துடித்துக் கிடப்பவன்...
பனித்துளியில் நீராடி
பூவிதழில் தலைதுவட்டி
காற்றின் வாசம் பூசி
தேய்ந்த நிலாவோடு
தேனிலவு கொண்டாடுபவன்...
நடுநிசி வெயிலில்
நரிகளுடன் விளையாடி
வீட்டிற்கு வரும் வழியில்
பேயோடு விருந்துண்டு
பேரின்பம் அடைபவன்...
பரிதிக்கு பாற்சோறு
நிலவுக்கு நிலாச்சோறு
கையேந்தும் தருக்களுக்கு
காடைக்கோழி பிரியாணி
கொடுப்பதற்கு தெரிந்தவன்...
பூச்சியத்தின் வர்க்கத்திற்கு
சூட்சுமத்தின் சூட்சுமதிற்கு
உண்மையான பொய்க்கு
பொய்யான உண்மைக்கு
அடையாளமாய் வாழ்பவன்...
இந்த நூற்றாண்டின்
சிறந்த கவிஞனாகிறான் !
====
கவிதைக்கு தவமிருந்து
காலம் கெடுக்க மாட்டான் !
கற்பனையில் வான் நடந்து
கால் கடுக்க மாட்டான் !
"காப்பி & பேஸ்ட்" மட்டும் செய்து
காலத்தால் அழியாத
கவிஞனாகிப் போய்விடுவான்...
-----------------------அடுத்த நூற்றாண்டில்....!