பாரதம் விழிக்கட்டும்
பாரதம் விழிக்கட்டும்.
பாரதி கண்ட இளங் கண்ணே!-ஜெய
பாரதி கண்ட இளங் கண்ணே!
பாரதம் விழிக்கட்டும் உன் பின்னே!
சாரதி பாரதி அவன் தானே
ஆரெதிரில் நிற்பார் உன்முன்னே!
தர்மம் தெரிவதும் தூரம்தான்.
தடங்கல் கடப்பதும் நேரம்தான்.
கரடும் முரடும் பயணம்தான்
கண்டு தொடுவதும் கடினம்தான்.
மழைக்கும் முன்னே இடிமிரட்டும்
அதையும் தாண்டி அதுபொழியும்
களைக்குப் பயந்தால் விவசாயம்
களஞ்சியம் சேர்க்க உதவாதாம்.
பிள்ளைப்பேறும் கடுமைதான்.
இல்லை அதுபோல் கொடுமைதான்.
மரணம் அருகினில் இருந்தாலும்
மகவினைக் கண்டதும் மறந்துவிடும்.
பட்டினி என்பதும் பாவமடா.
பசிப்பது என்பதும் சாபமடா.
தட்டில் படையல் யோகமடா
தட்டிப்பறிப்பவன் நீசனடா.
வறுமை இல்லா வாழ்க்கையதை
வாழ உழைக்கும் கர்மமதை.
ஏழை இல்லா உலகமதை
நாளை எழுதும் தர்மம் அதை.
விடியல் கூடி வளர்கிறது.
விளங்கும் தர்மம் ஒளிர்கிறது.
பாவம் பதுங்கி ஒளிகிறது
சாபம் தீண்டி அழிகிறது.
தொடர்ந்தும் தர்மம் தோற்பதில்லை
கிடந்தும் தன்பணி சோர்வதில்லை.
படர்ந்தும் பாவம் படும் வேளை
முடித்தும் நாட்டும் திருநாளை.
பாவியர் கூட்டம் பதறுதடா.
பாவ வலையில் கதறுதடா.
தேடலின் வேட்டை தொடர்ந்திடடா.
திசைகள் நான்கும் அதிருமடா.
தீரனின்ன் வடிவம் தீயாக—தேச
பக்தியின் படிவம் நீயாக
வீரபொம்மன் வாளாக
வினையது கொண்டு புறப்படடா!
கொ.பெ.பி.அய்யா.