நீ நிரந்தரமானவன் அழிவதில்லை

தமிழ் யாப்பை யெலாம் தர ஒருபிறப்பு
தமிழ் பாடல் தந்தாய் அது தனிச் சிறப்பு
திரைப்பாடலிலே உன் உயிர்துடிப்பு
தெரியு தையா உன் அழகின் சிரிப்பு
கூடல் பட்டியில் பிறந்தவர் நா-அந்த
கூடல் நகராள் அமர்ந்ததனால்
பாடல் மெட்டில் பிறந்ததையா
பழகும் தமிழை பொழிந்ததையா
அர்த்த முள்ள இந்துமதம்
அழகாய் நீயும் சொன்னவிதம்
புத்தக மாகி வெளிவந்தது
புத்தியி லெல்லாம் ஒளி வந்தது
சேரமான் காதலி மாங்கனி தான்-உன்
சிந்தனை யெல்லாம் தேங்கனிதான்
தாரணி கண்ட மனவாசம்- நீ
தன்னிலை சொன்ன வனவாசம்
ஏசு காவியம் பாடியவன் - நீ
எல்லோர் மனத்தையும் ஆளுபவன்
ஆசு கவியாய் நீ வந்தாய்
அரசு கவியாய் நீவாழ்ந்தாய்
பேசும் கவிகள் கொஞ்சமல்ல...
பிள்ளைக் கவி நான் என்னசொல்ல...
நீ நிரந்தரமானவன்அழிவதில்லை
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை

எழுதியவர் : சு. ஐயப்பன் (8-Jun-14, 3:59 pm)
பார்வை : 151

மேலே