ஆசை தீரா மனசு

விடுமுறை முடிந்து
பள்ளி திறந்தது.

ஒரு மாத காலம்
உற்சாகமாய்
விளையாடித் திரிந்த
பேத்தி
பிரிய மனசில்லாமல்
பிரிந்து போனாள்.

வீடு
பறவைகள் பறந்து சென்ற
வெறும் கூடாய்
வெறிச்சோடிக் கிடக்கிறது.

ஆடி ஆடித் தேய்ந்த ஊஞ்சல்
ஆடாமல் ஓய்ந்து நிற்கும்.
ஓடிப்பிடித்துக் களித்த நாய்கள்
உற்சாகம் இன்றி வாடும்.

பாதி வரைந்த பென்சில் சித்திரங்கள்
விதவிதமாய் சுவர் முழுதும்.
கதவு நிலவுகளில் கைக்கெட்டிய வரை
ஒட்டிச் சென்ற கலர் ஸ்டிக்கர்கள் .
குளிரும் என்று பரிவோடு
போர்த்தி விட்டுச் சென்ற
குட்டி பொம்மை
கட்டிலின் மேல் .


பார்க்குமிடமெங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும்
நினைவின் சிதறல்கள்.


சொல்லில் அடங்கா
சுகம் நாடி மீண்டும்

அடுத்த விடுமுறைக்கு
ஆரத்தி கரைக்கும்
ஆசை தீரா மனசு !!

எழுதியவர் : (9-Jun-14, 7:04 pm)
பார்வை : 215

மேலே