நீல நட்சத்திர நாளில் என்ன நடந்தது

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் மேற்கொள்ளப்பட்டு 30 ஆண்டுகளானாலும் வடுக்கள் இன்னும் மறையவில்லை

சீக்கியர்களுக்காக ‘காலிஸ்தான்' என்ற தனிநாடு கோரி, ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் புகுந்துகொண்டனர். பொற்கோயிலிலிருந்து அவர்களை அகற்ற ராணுவம் எடுத்த நடவடிக்கையின் சங்கேதப் பெயர் 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்'.

அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயில் பரந்து விரிந்த ஒரு வழிபாட்டுத் தலம். அந்தக் கோயில் வளாகத்துக்குப் பெயர் ஹர்மந்தர் சாஹிப். சீக்கியர்களின் புனித நூல்தான் குருநாதராகப் பாவிக்கப்பட்டு அன்றாடம் ஓதப்படுகிறது. அந்த இடத்துக்கு வரும் பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாடியும் புனித நூலில் உள்ள வசனங்களை ஓதியும் வழிபடுவார்கள். அன்றாடம் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு அளிக்கப்படும் இடம் இது.

அந்த நாள்…

இந்தப் பொற்கோயிலுக்குள்தான் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்து பஞ்சாப் அரசும் மத்திய அரசும் விடுத்த வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன. இதையடுத்து, பஞ்சாப் மாநிலம் முழுக்கப் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசிடம் ஒப்புதல் பெறாமல் எந்தத் தகவலையும் செய்தியையும் வெளியிடக் கூடாது என்று பத்திரிகைகளுக்குச் செய்தித் தணிக்கை கடுமையாக அமல்செய்யப்பட்டது. அமிர்தசரஸ் நகரிலிருந்து பத்திரிகை நிருபர்கள் அகற்றப்பட்டனர். எல்லைகளில் வாகனங்கள் கடுமையாகச் சோதிக்கப்பட்டன. மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. சில பகுதிகளில் குடிநீர் விநியோகம்கூட நின்றது.

பஞ்சாப் மாநில போலீஸார், மத்திய போலீஸ் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படை, கமாண்டோ படையினர், ராணுவம் என்று அனைத்துத் தரப்பினரும் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் பங்கேற்றனர். தரைப்படையின் காலாட்படை, கவச வாகனப்படை இரண்டும் களத்தில் இறக்கப்பட்டன. ராணுவ டேங்குகளும், ஹெலிகாப்டர்களும்கூட பயன்படுத்தப்பட்டன. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் ‘ஆபரேஷன் மெட்டல்', ‘ஆபரேஷன் ஷாப்' என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டது.

‘ஆபரேஷன் மெட்டல்' என்பது பொற்கோயில் அமைந்துள்ள ஹர்மந்தர் சாஹிபுக்கானது. ‘ஆபரேஷன் ஷாப்' என்பது பஞ்சாபின் பிற பகுதிகளில் மறைந்திருந்த பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும் கண்டுபிடித்துக் கைதுசெய்வது அல்லது அழிப்பதற்கானது. இதற்குப் பிறகு ‘ஆபரேஷன் உட் ரோஸ்' (வன ரோஜா) என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அது மாநிலம் முழுக்க அங்குலம் அங்குலமாகச் சோதனை நடத்தி, பயங்கரவாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் எவரும் இல்லை என்பதை உறுதிசெய்வது.

சின்ஹாவின் யோசனை புறக்கணிப்பு

பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து பயங்கரவாதிகளை வெளியேற்ற வேண்டும், அதற்கொரு திட்டம் தீட்டுங்கள் என்று பிரதமர் இந்திரா காந்தி லெப். ஜெனரல் இந்தியத் தரைப்படையின் துணைத் தளபதி லெப். ஜெனரல் எஸ்.கே. சின்ஹாவைத்தான் முதலில் கேட்டார். சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில் மீது ராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தினால், அதை சீக்கியர்கள் காலம் முழுக்க மறக்க மாட்டார்கள், வேறு வழியில் இதை முயற்சி செய்துபார்க்கலாம் என்றார். இந்திரா அவருடைய யோசனையை நிராகரித்தார்.

அதன் பிறகு, ஜெனரல் அருண் ஸ்ரீதர் வைத்யா தரைப்படைத் தலைமை தளபதியாக்கப்பட்டார். அவர் லெப். ஜெனரல் கே. சுந்தர்ஜி உதவியுடன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையை வகுத்தார்.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 1984 ஜூன் 1 முதல் 10 வரை மேற்கொள்ளப்பட்டது. 5 தரைப் படைப் பிரிவுகள், 2 கமாண்டோ படைப் பிரிவுகள், 6 டேங்குகள், 2 துணைநிலை ராணுவப் படைப் பிரிவுகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இந்திய ராணுவப் படைக்கு மேஜர் ஜெனரல் குல்தீப் சிங் பிரார் தலைமையேற்றார். பிஹார் ரெஜிமெண்ட், மெட்ராஸ் ரெஜிமெண்ட், 10-கார்ட்ஸ் ரெஜிமெண்ட் ஆகியவை பங்கேற்றன.

முதல் இலக்கு

ஜூன் முதல் நாள், ‘குரு ராம்தாஸ் லங்கர்' என்றழைக்கப்படும் யாத்ரிகர்களுக்கான உணவுக் கூடத்தைப் பாதுகாப்புப் படையினர் தாக்கினர். அதில் 8 முதல் 10 பேர் வரை இறந்தனர்.

ஜூன் 2-ம் நாள் காஷ்மீர் முதல் ராஜஸ்தானின் கங்கா நகர் வரையிலான சர்வதேச நில எல்லைகள் மூடப்பட்டன. பஞ்சாப் கிராமங்களுக்கு ராணுவத்தின் 7 டிவிஷன் படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டன. பத்திரிகைகளுக்குத் தணிக்கை விதிக்கப்பட்டது. ரயில், பேருந்து, விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. வெளிநாட்டவர்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் பஞ்சாப் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டனர். பஞ்சாப் ஆளுநரின் ஆலோசகராக ஜெனரல் கௌரி சங்கர் நியமிக்கப்பட்டார்.

ஜூன் 3-ம் நாள் பஞ்சாப் முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. ராணுவமும் துணைநிலை ராணுவமும் ரோந்து சுற்றியது. பொற்கோயிலுக்குள் யாரும் நுழைய முடியாமலும் வெளியேற முடியாமலும் காவல், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

ஜூன் 4-ம் நாள், ராம்கடியா பங்காஸ், தண்ணீர்த் தொட்டி போன்றவை குண்டுகளால் தகர்க்கப்பட்டன. பீரங்கி மூலம், பயங்கரவாதிகளின் வெளிப்புறத் தடுப்பரண்கள் துவம்சம் செய்யப்பட்டன. சுமார் 100 பேர் இறந்தனர். சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் முன்னாள் தலைவர் குருசரண் சிங் தோராவை, பயங்கரவாதிகளுடன் பேசச் சொல்லி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளைக் கைவிட்டு சரண் அடைய மறுத்துவிட்டனர். பேச்சு தோல்வியில் முடிந்தது.

ஜூன் 5-ம் நாள், ஆலய வளாகத்தின் தென்மேற்கு மூலையில் இருந்த ஹோட்டல் டெம்பிள் வியூ என்ற கட்டடமும் பிரம்மபூத அகடாவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படையின் தாக்குதலுக்கு உள்ளாயின. ராணுவத்தின் 9-வது படைப் பிரிவு, அகால்தக்த் என்ற பகுதிமீது தாக்குதல் நடத்தியது. ஆனால், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ராணுவத் தரப்பில் மிகக் கடுமையான ஆள்சேதம் ஏற்பட்டது. வெறும் துப்பாக்கிகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் பயன்தராது என்ற நிலைக்குப் பிறகே டேங்குகள் மூலம் பெரும் தாக்குதல் நடத்தி சேதம் விளைவிக்கப்பட்டது.

ஜூன் 6-ம் நாள் விஜயந்தா டேங்குகள் அகால்தக்தை நிர்மூலம் செய்தன. அங்கிருந்து தப்பி ஓட முயன்ற சிறு கும்பல், ராணுவத்தின் இயந்திரத் துப்பாக்கிகளுக்குப் பலியானது. அப்படியும் அகால்தக்தின் பக்கத்துக் கட்டடங்களிலிருந்து பயங்கரவாதிகள் தாக்கினர். ராணுவத்தின் தாக்குதலில் பிந்தரன்வாலே உயிரிழந்தார்.

ஜூன் 7-ம் நாள் ஹர்மந்தர் சாஹிப், ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

ஜூன் 8 முதல் 10 வரையில் ஒரு கோபுரத்தின் அடித்தளத்தில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டனர். அந்த இடத்தை நோக்கி விரைந்த கமாண்டோ படை கர்னல் ஒருவரைப் பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டு அவரது உடலைச் சல்லடைக் கண்களைப் போலத் துளைத்தனர். ஜூன் 10-ந் தேதி பிற்பகல்தான் ஆலயம் முழுக்கப் பாதுகாப்புப் படையினர் வசம் வந்தது.

பலி எத்தனை?

ராணுவத் தரப்பில் 136 பேர் உயிரிழந்தனர், 220 பேர் காயமடைந்தனர். சிவிலியன்கள் தரப்பில் 492 பேர் இறந்தனர். இவர்களில் பயங்கரவாதிகளும் யாத்ரிகர்களும் குருத்வாரா ஊழியர்களும் இருந்தனர். ராணுவ நடவடிக்கையில் 5,000 பேர் இறந்தனர் என்றும் பஞ்சாப் முழுக்க 20,000 பேர் இறந்தனர் என்றும் எந்தவித ஆதாரங்களுமின்றிப் பல தகவல்கள் உலவுகின்றன. பொற்கோயில் நடவடிக்கையில் ராணுவம் 700-க்கும் மேற்பட்டோரை இழந்ததாகப் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த ராஜீவ் காந்தி கூறியிருக்கிறார்.

சீக்கியர்கள் கலகம்

பொற்கோயிலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகு, சீக்கியர்கள் மனதில் அடக்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது. ராணுவத்திலேயே சில படைப் பிரிவுகளில் சீக்கிய வீரர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். ராணுவத்திலும் போலீஸ் படையிலும் பணிபுரிந்த பலர் பதவிகளை விட்டு விலகினர். இந்திய அரசு அளித்திருந்த பதக்கங்களையும் பட்டங்களையும் துறந்தனர்.

இந்திரா காந்தி படுகொலை

பொற்கோயிலுக்குள் ராணுவத்தை ஏவிய நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மன்னிக்க சீக்கியர்களில் பலர் தயாராக இல்லை. அவர்களில் சிலர் இந்திரா காந்தியின் மெய்க்காவலர்களாக இருந்த சத்வந்த் சிங், பேயந்த் சிங் என்ற இருவரை அணுகி இதற்குப் பழிவாங்க இந்திராவைக் கொல்ல வேண்டும் என்று அவர்களைத் தூண்டினார்கள். இதையடுத்து, இந்திரா காந்தியை அவர்கள் அவருடைய அரசு இல்லத்திலேயே அவர் நடந்துசெல்லும்போது, 1984 அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக்கொன்றனர். இந்திரா காந்தியின் உடலை 33 குண்டுகள் துளைத்தன.

சீக்கியர்கள் படுகொலை

இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு அதற்குப் பழிவாங்கும் வகையில், டெல்லியிலும் வேறு சில ஊர்களிலும் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரங்கள் வெடித்தன. 3,000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் இதில் இறந்தனர். ஆனால், இந்த எண்ணிக்கையும் இறுதியானதோ சரியானதோ அல்ல என்றே பலர் கூறுகின்றனர். இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்டோர் அரசியல் தலைவர்கள் மீது இன்னமும் வழக்கு நடந்துவருகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சீக்கியர் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்து அந்தச் சமூகத்தினரிடம் மத்திய அரசின் சார்பில் மன்னிப்பு கோரியது நினைவுகூரத் தக்கது.

ஆண்டுகள் 30 ஆனாலும், நீறுபூத்த நெருப்பாக வடுக்களில் ஊற்றெடுக்கும் ரத்தமாகவே இருக்கிறது நீல நட்சத்திர நடவடிக்கை.

எழுதியவர் : (9-Jun-14, 9:33 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 64

மேலே