திங்களன்று மதியத்தில்

திங்கள் வெயிலில்
நகர்ந்தோம்
மதியச்சோறு
முழுச்சாப்பாடு

முனைக் கடையில்
தலைவாழை
இலைபோட்டு
முழுச்சாப்பாடு

முங்கியெழ கை
முனைகையில்
முக்கிய அழைப்புகள்
அலைபேசியில்

அத்தனை சந்தேகமெனக்கு
எத்தனை முறை
எல்லா முறையும்
அத்துமீறி மூக்கிடும்
அறைகூவி தலையிடும்
அழைப்புகள்

தவறவிட்டு
தலைவாழையில்
முங்கினோம்
முழுங்கினோம்

முடித்துவிட்டு
முற்றம் தாண்ட
முறையிட்டு
நண்பன் கேட்டான்?

மச்சி படம்ம்ம்ம்ம்?
என்ன படம்??
இது நான்
ம் ம் ம் ம் ....

தேடல் ஆரம்பம்
அலைபேசி வழியே
தேறியவை,தேறாதவை
தேதி, திரையரங்கம்

இருக்கை இன்னும்பிற
வந்திறங்கின
வகை வகையாய் - கூடவே
தொகை தொகையாய்

வங்கி இருப்பில்
இருந்த தொகையில்
இருக்கைத் தொகை
இமைக்கும் நொடியில்
இடம் மாறியே

அடுத்த சில நொடியில்
அனுமதிச்சீட்டு
அறையங்குல அலைபேசியில்
இருக்கை விவரங்களோடு

இறுதியில் இனிக்கச்
சொன்னது
இப்படியும் மரம்
சேமிக்கலாமென்று!

நகர்ந்தோம்...
நல்ல கூட்டமில்லை
வாகன நிறுத்தம்
வாகனங்கள் அதிகமில்லை

சிறு சலனங்கலோடும்
சிறு புகையோடும்
பெருமிடைவெளிகளில்
இரண்டோ,நான்கோ
வாகனங்கள்

இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
நிழல்கள் நிமித்தம்
நிறுத்தப்பட்டிருந்தது.

நகர்ந்தோம்....

ஆயிரமாயிரம்
மாற்றங்களிலும் இன்று
மாறாத மறையாத
திரையரங்கின் ஒன்று

நுழைவாயிலில்
நுழைவுச்சீட்டை
அறையாக்கி
அனுமதிப்பது
அனுமதித்தான்

தானே திறக்கா
கதவுகள் இருட்டிக்கிடக்க
தானே அடைக்கும்
கதவுகள்

தானே திறக்கா
கதவுகள்
வாழ்வின் கதவுகளும்
வழிமிகுந்தவை!
வலிமிகுந்தவை!

வரவுக்கும் செலவுக்குமான
வட்டிகளே கதவுகளாய்

செழுமையின் வெளிச்சத்திற்கு
திறப்பவை
திறமைகளை இருட்டடித்து
அடைத்துவிடும்

திறமையின் வெளிச்சத்திற்கு
திறப்பவை
செழுமையை இருட்டடித்து
அடைத்துவிடும்

செழுமையில் திறமைக்கும்
திறமையில் செழுமைக்கும்
தானே திறக்கும்
கதவுகள்
வாய்க்கப்பெற்றால்
வாழ்வும் சினிமாதான்!

நகர்ந்தோம்....

திணறாமல் அமர
படிகளிலும் சுவர்களிலும்
பளீரில்லா பல்புகள்
வெளிச்சகீற்றோடு
வெவ்வேறிடங்களில்

சிலர் சிலராய்
சிலராய்
விடுமுறை நாட்களின்
விரிந்தகண்ட பாலங்களில்

மெதுவாக நகர்வதுபோல்
மெதுவாக நெளிந்த்கொண்டு
மெளனமாக அமர்ந்திருந்தார்கள்

மீண்டும அவ்வப்போது
அதுவரை காத்திருந்த
அழைப்புகளும்
இதுவரை கண்டிராத
அழைப்புகளும்
களைப்பின்றி களைப்பாக்கின
என்னை அலைபேசியில்(?)

அத்தனை சந்தேகமெனக்கு
எத்தனை முறை அநேகமாக
எல்லா முறையும்
தலையிடும் அழைப்புகள்!

அலைபேசியின்
அம்சங்களனைத்தும்
அஸ்தமிக்க அறுதியிடுவேன்
அப்பொழுதுகளில்
வழக்கம் போல் தவறவிட்டு
அமர்ந்தோம்

சினிமா உலகம்
நிசப்த உலகம்
சப்த உலகம்
வெளிச்ச உலகம்
இருட்டு உலகம்
கதையில்லா உலகம்
கதைகளின் உலகம்
நிழல் உலகம்
நிச உலகம்
இருக்கை தொட்டு
இயற்றிடும் விமர்சனம் வரை
சனநாயகத்தை
சனங்களிடமே சமர்பித்த
(அ)சாத்திய உலகம்
சாமர்த்திய உலகம்

இடைவேளை இத்தியாதிகளை
முடித்துவிட்டு
அழைத்தவர்களிடம் அழைத்து
அலைபேசிவிட்டு

நுழைகையில்
மீண்டும் அழைப்புகள்
மீண்டும் நீண்டும்
மீண்டும் தவிர்த்தேன்.

சினிமாப் பொழுது
கனியும் பொழுதை
களிக்கும் போதை
கலியாகி
கழிக்கும் மனதை

வெளியேறி மாலையில்
கண்திருகி சாலையில்
தலைபிடித்து தலைநிமிர்ந்து
வெறிக்கையில்

அலைஅலையாய்
உழைத்துப்போய்
பிழைத்துப்போய்
களைத்துப்போவதை - மக்கள்
கலைந்துபோவதை
வெறிக்கையில்

கையில் கிடைத்த
பொழுதினை வெறுமனே
போக்கிய வெறுமனே
போனால் வருமா
வெறுமனே

போ போய்

பொழைப்பை பாரடா
பொறுப்பை பாரடா
என மூர்க்கமாய்
முடி(வெ)த்து

நகர்ந்தோம்....


மற்றுமொரு நல்லதொரு
திங்கள் வெயிலில்
நகர்ந்தோம்.
மதியச்சோறு-----
-------------------------
-------------------------

எழுதியவர் : சர்நா (10-Jun-14, 1:56 pm)
பார்வை : 126

மேலே