ஒன்றாகுவோம் தங்கம்

ஓடிநடந்து மென்ன செல்லமே செல்லம் - தினம்
உண்டுங் களித்துமென்ன சொல்லடி செல்லம் - ஒரு
ஆடிவந்தான பின்போ ஆவணி வரும் - எங்கள்
அன்னை நிலத்தில் என்றும் துன்பமே வரும்- நிதம்
தேடிநடந்துமென்ன கூறடி செல்லம் - எங்கள்
திக்கில் இருளடர்ந்த பேய்களின் வாசம் - வந்த
பேடி பிறத்தியர்கள் கொண்டனர் நிலம் -நெஞ்சு
பித்துப் பிடித்தழிந்தோம், கொஞ்சமோ துன்பம்

நாடிபிடித்து மென்ன தங்கமே தங்கம் - இவர்
நாளை பிழைப்பரென சொன்ன சாத்திரம்- இங்கு
ஓடிப் பறிக்குமந்த புல்லரின் கரம் - அதை
உண்மை வழிநிறுத்த வில்லையே நிசம்- இவர்
கோடி உழைத்து மென்ன தங்கமே தங்கம் - உயர்
கோபுரமும் சுற்றியென்ன தங்கமே தங்கம் - இங்கு
கூடி உழைத்து முண்ட நெல் உழும்வயல் - நிலம் கொண்டோர் பொருள் கவர்ந்து சென்றனர் அதம் - பல

மாடி மனைகள் கட்டி வாழுவர் இல்லம் - உயர்
மன்னர் குலத்தரென்ற மாண்புறு தமிழ்- தன்னை
பேடி மனத்தரிவர் செய்யும் இழிமை இந்தப்
பூமி பொறுத்தேனோ பொய்மை பிழைத்தே - உண்மை
மூடி மறைக்க வில்லை செல்லமே செல்லம் - ஒரு
மூடர் இருக்கும் இனமானதே செல்லம் - என்றும்
ஓடி ஒருகுலமென் றாவது மில்லை - அவர்
உய்யும் வழி இடையில் தோன்றலுமில்லை

வாடி நடந்துவழி காணுவோம் தங்கம் - எங்கள்
வம்சம் எடுக்கும் வீரம் வெல்லது திண்ணம் - அந்தச்
சூடிப்பிறை யுடையோன் கொண்டவள் நெஞ்சம் - வந்து
சுட்ட உதிரம் வலு ஊட்டுவள் இன்னும் -இனித்
தாடி உனது கரம் தங்கமே தங்கம் - நாங்கள்
தன்னந் தனியே இல்லை தங்கமே தங்கம் -வரை
கோடியென இழந்தும் உள்ளவர் ஒன்றின் - இங்கு
கொள்ளும் துயர் மறையக் காணுவோம் தேசம்

எழுதியவர் : கிரிகாசன் (11-Jun-14, 1:11 pm)
பார்வை : 116

மேலே