பாழாய் போன காய்ச்சல் குழந்தையின் ஏக்கம்
என் தந்தைக்கு அரசுப்பணி
என் தாய்க்கோ தனியார் பணி
எனக்கு மட்டும் காத்திருக்கும் பணி
எந்திரிச்ச வேளைமுதல்
சிந்திக்க நேரமின்றி
ஓட்டமும் நடையும்தான்
ஒவ்வொரு அசைவிலும்
ஓயாமல் வீட்டுக்குள் ...
குளிச்சிட்டயா..
உடுப்பு மாத்திட்டயா..
சாப்பிட்டயா..
கிளம்பிட்டயா..
என வரிசையாய் வந்துவிழும்
எரிச்சல் கலந்த வசவுகள்
எப்போதும் எனைநோக்கி ..
எல்லாம் முடித்து
புத்தக மூட்டையை
புதுப்பையில் திணித்து
பாதி சாப்பிட்டும்
பாதி சாப்பிடாமலும்
படபடப்பாய் ...
வடி நீரால்
வயிறு நிரப்பி
மறவாமல்
மதிய சாப்பாட்டையும்
மடியேந்தி கிளம்பும்வரை
மரணவலிதான்
ஒவ்வொரு நொடியும் ..
பள்ளி முடிந்து ..
அவசர அவசரமாய்
அள்ளி திணிக்கும்
ஆட்டோவில் புகுந்து
அழாக்குறையாய்
வீடு வந்தாலும்
வெறுமையாகும்
என் மனதும்
வெறிச்சோடிய வீட்டைப்போல்
என் தாயும்
என் தந்தையும்
என் நினைவு தேடி
என்னிடம் வரும்வரை
நாலு மணிமுதல்
நகரமறுக்கும்
ஒவ்வொரு நொடியும்
நரகமாய்
நாளைய நிகழ்வினை
நாடிவரை புகுத்தி
நர்த்தனமாடும் ...
இன்று காலையில்
இம்மிகூட அசையமுடியாதபடி
இளவுடலை தாக்கிய
"இனிய காய்ச்சலுக்கு "
இளமனது
நன்றி நவிழ்கிறது ஏனோ ?
எனை தனியே விட்டுவிட்டு
எல்லோரும் கிளம்பி
பத்துமுறையாவது
பத்திரமாய் இருடாஎன
பாசம் காட்டிய
என் தாய்க்கும் சேர்த்து
வந்திருக்கலாம்
பாழாய்ப்போன காய்ச்சல் ?
இன்று மட்டுமாவது
இல்லத்தினில்
இருந்திருப்பாள் அல்லவா ?
விடுப்பினில்
அவளும் என்னுடன் ..