சினவல் ஓம்புமதி வினவுதல் செய்வேன்

சினவல் ஓம்புமதி! வினவுதல் செய்வேன்

வேந்துவிடு தொழிலொடு வேறூர் செலினும்
சேந்துவரல் விரும்பாச் செம்மலோர் நாட்டில்
மீந்தது சொல்லின் மேல்வரும் வருத்தமே!

=[அரசாணை மேற்கொண்டு கடமை காரணமாக
வெளியூர் சென்றிட நேரினும், மனைவியைவிட்டு
அங்கே தங்குவதை விரும்பாத கணவர்களைக்
கொண்டிருந்த நமது நாட்டில் இன்று மீந்திருக்கும்
நிலையினை எடுத்துச் சொல்லப் போனால் வருத்தமே மேல்வரும்!]=

வேர்க்கோட் பலவின் வேலிகள் திறந்த!
ஊர்ப்பேர் தெரியாச் சீர்மிகு பொருட்கள்
உலகிய லாகும் வணிகப் பெயரினில்
தலையெடுத் தன!ஊர்க் கலைகள் அழியும்
நிலையெழுத் ததுவாம்! நின்றகைத் திறன்கள்
தொலைந்த தொல்கவின் தோள்,நல மாயின!

=[வேரிலே காய்கொள்ளும் பலாமரங்கள் கொண்ட
தோட்டம் போன்ற நமது நாட்டின் பற்றுக் கோடாக
இருந்த கட்டுப்பாடுகள் நீங்கிவிட, வேலிகள்
திறந்துவிடப் பட்டன! ஊரின் பெயர்களும் தெரியாத
பல பொருட்கள் அழகழகாக உலகமயமாகும் வணிகம் என்ற பெயரில் தலையெடுக்கத் தொடங்கின! உள்ளூர்க் கலைகள் அழியத் தொடங்கின; நம்மவர் கைத்திறங்கள் குன்றினவாக, பழைய அழகினை இழந்துவிட்ட
தோள்களையுடைய பெண்ணைப் போலத் தம் நலங்களை இழந்தனவாகின!]=

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங் கிங்குளோர்
சிறுமனத் தாசைகள் பெருத்தன! கல்வியும்
இருப்பதை வளர்க்கும் இயல்பினை விடுத்துப்
பொறுப்பிலா வகையில் புலம்பெயர்ந் தோடிப்
பொருள்வயி னேகும் மருள்வழிப் படுத்தது!

=[ சிறிய கிளைகள் பெரிய பெரிய பலாப் பழங்களைத் தாங்கிக் கொண்டிருப்பதைப் போல, தம்முடைய சிறிய மனங்களில் பெரிய பெரிய ஆசைகளை மக்கள் தாங்கத் தொடங்கினர்! அவர்களின் கல்வியோ, தம்மிடமிருக்கும்
கலைகளை வளர்ப்பதை விட்டுவிட்டுப் பொறுப்பில்லாமல் தமது நிலங்ககளையும் விட்டு நீங்கிப் பொருளினைச் சேர்க்கும் ஆசையில் ஓடிப் போகின்ற மயக்கத்தை ஏற்படுத்துவதானது!]=

சினவல் ஓம்புமதி! வினவுதல் செய்வேன்:
கனவுமே வாழ்வாய்க் கைவர எண்ணி
எம்மறி கொன்று,எம் அம்மை,பா ரதத்தாய்
நறு,நுதல் நீவுவோம்? நம்மவர்
சிறுபலி யாகிடப் பெறுபவன் எவனோ?!

=[சினம் கொள்ளாதீர்கள்! ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன்!
நமது கனவுகளை வாழ்வாக்கக் கருதி அவை கைவருமென்ற எண்ணத்தில், எந்த ஆட்டினைப் பலிகொடுத்து நமது அன்னை பாரதத்
தாயினுடைய அழகிய நெற்றியினில் அந்தக் குருதியைத் தடவிடப் போகிறோம்? அப்படி, நம்மவர்களைச் சிறு பலியாகப் பெற்றுக்
கொள்ளப்போகின்ற, அந்தத் தேவன்-அல்லது கடவுள்- எவனோ?]

==================== =============
குறுந்தொகைச் செய்யுள்கள்: 242,18,362 ஆகியவற்றைப் படித்தபொழுது அவற்றிலுள்ள

‘வேறூர்,
வேந்துவிடு தொழிலொடு செலினும்,
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே’
‘வேரல் வேலி வேர்க்கோட் பலவின், சாரல் நாட’
‘சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்,’
‘தொல்கவின் தொலைந்த தோள்நலம் சாஅய்’
‘சினவல் ஓம்புமதி! வினவுவது உடையேன்’
‘சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி’

போன்ற வரிகள் என் மனத்தைக் கவர்ந்தனவாயிருந்ததால் மேலேயுள்ள கற்பனையை அவை என் மனத்துள் விரித்தன.
இது எளிமையாக இல்லையென்று உங்களுக்கு எண்ணத் தோன்றுமானால் எனக்குக் கவிதை எழுதத் தெரியாததே அதற்குக் காரணமாகும்.
===== =========
நீங்களும் குறுந்தொகைப் பாடல்களை இரசிக்க எண்ணமெழுந்தால் குறுந்தொகைச் செல்வம் எனும் பெயரில் முனைவர் மு.வரதராசனின் நூலைப் படிக்கலாம்.
========= =======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (13-Jun-14, 8:03 pm)
பார்வை : 95

மேலே