எதற்காக என்னை படைத்தான்

குப்பையிலே ஒரு சிறு
உயிராய் கிடந்தேன்....!

முழு உடலும் அதனிடையில்
மறைய மூச்சு திணறினேன்

கணங்களில்
உயிரழந்திருப்பேன்

தவறுதலாய் படைத்து
பூமிக்கு அனுப்பிய
இறைவனிடம் திரும்பி
போய் சேர்ந்திருப்பேன்

சில நாய்களின் கீறலால்
உயிர் பிழைத்தேன்

குவியலாய் வீதியில்
கிடந்தேன்

குருடராய் பலர் கடந்து
போவதை பார்த்தேன்

குமுறலாய் எனக்குள்
அழுதேன்

கடைசியில் ஒருத்தியால்
எடுக்க பட்டேன்

பிச்சைக்கு அவளுக்கு ஒரு
பிள்ளை தேவைப்பட்டது

இச்சைக்கு என்னை
பெற்றவர், பிச்சைக்கு
பலியாக்க குப்பையில்
வீசினாரோ?

ஏக்கங்களை சுமந்தேன்
ஏளனங்களை எதிர்கொண்டேன்

ஏச்சுக்கும், பேச்சுக்கும்
ஆளானேன்

எத்தனை, எத்தனை கடும்
வார்த்தைகள்

அத்தனையும் ஆறாத
ரணங்கள், இதயத்தின்
ஆழத்தில் புதைந்த வலிகள்

எங்கிருந்தோ ஒரு ஆவேசம்
வந்தெனை தாக்கியது

அன்றிலிருந்து அயராமல்
உழைத்தேன்

அனுதினமும் முன்னேற்றம்
பார்த்தேன்,

அழகான மலர் குவியல்களை...!

அங்காங்கே வீசி எறியபட்ட
சிறு உயிர்களை வாரி நெஞ்சோடு
அணைத்தேன்

அவர் வாழ்விற்காக என்னை
அர்ப்பணித்தேன்

எதற்காக என்னை படைத்தான்
இறைவன்? சபித்திருக்கிறேன்
அவனை

இன்று அறிந்தேன் அவன்
என்னை படைத்தது இதற்காக

எத்தனையோ பூக்களுக்கு
புழுதியிலிருந்து விமோசனம்
தந்திடவே,

படைத்தான், குப்பை கூடையில்
எறிந்தான்....!

நன்றி சொல்கின்றேன், நாளும்
உன்னை நினைக்கின்றேன்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (16-Jun-14, 5:22 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 56

மேலே