விட்டு விடு என்னை

மனிதகுலமே!
தயவு செய்து மன்னியுங்கள் என்னை
உத்தரவின்றி
உயிர் பெற்றுவிட்டேன்
வேறுவழியின்றி
மண்ணில் வேர் விட்டுவிட்டேன்!!!

நிச்சயம் நிழல் தருவேன்
நலமுடன் வாழ காற்று தருவேன்
பசியாற சுவைதரு கனிதருவேன்
பறவைகளுக்கு மட்டுமல்ல
பல மனிதர்களுக்கு
நான் இன்று வீடுதான்!!!

தொட்டில் கம்பு தொடங்கி
சுடுக்காட்டு ஈம விறகுவரை
உனக்கும் எனக்குமான பந்தம்
ஒரு வரியில் அடங்காத சொந்தம்!!!

ஆனால்
என்னை நீ நடவில்லை
ஏதோ ஒரு பறவையின்
எச்சத்தில் வந்த
வித்தில் வந்தவன்
தெரிந்தும்
நீ உரிமை கொள்கிறாய்!!!

விசித்திர பிராணிகளில்
விசித்திரமாய் நீயிருந்தும்
புழுவிலும் கீழானாய்
புல்லிலும் சக்தி இழந்தாய்!!!

என்னைக் கொன்று
என்ன கண்டாய்?
குடிக்க நீரின்றி
மரித்து போனாய்
உறங்க வழியுமின்றி
எரிந்து போனாய்
இமையில் நீர்வழிய
சரிந்து போனாய்!!!

உன் உடலில்
சிறு காயம் என்றால்
துடித்துப் போகிறாய்
என் கிளையை வெட்டினாய்
கனத்த மனதோடு
மௌனம் சாதித்தேன்
மீண்டும் துளிர்ப்பேன் என்ற நம்பிக்கையோடு!!!

மனிதா!
என் மகத்துவத்தை
எப்போது உணரப் போகிறாய்?
உண்மையில்
மண்ணின் மைந்தன் நீயல்ல
நான் மட்டும்தான்
மண்ணிலிருந்து வருவதால்!!!

வெட்டும் கத்தி
தூரபோட்டு
நட்டுவா என் கன்றுகளை
இனிவரும் தலைமுறையும்
உன்பேர் சொல்லும்!!!

எழுதியவர் : பிரபாகரன் (19-Jun-14, 10:37 am)
பார்வை : 193

மேலே