வளர் கவிதை
இன்னும் அந்த நேரத்திற்காக
காத்திருக்கிறேன்...
ஒரு தென்றல் வரும் வழியில்
கனவுகளைக் கொட்டி
காயவைத்துக் கொண்டிருக்கும் நான்
சில பூக்களையும்
மலரவைத்துக் கொண்டு இருக்கிறேன்
இமயமளவு அழுத்தங்களை
சுமந்து கொண்டிருக்கும் நான்
இதமாய் தழுவ வரும்
இளந்தளிரின் தொடுதலுக்காக
வீதியை விழுங்கிக் கொண்டிருக்கிறேன்
தத்துவக் குப்பையான நான்
தாங்கிக் கொள்ளும்
புத்தம்புது வளர் கவிதையை
வாரி அணைத்துக் கொள்ள
புளிய மரத்தின் வேராய்
சுருண்டு கிடக்கிறேன்
பள்ளி விடும் மணி ஒலிப்பிற்காகவும்
சின்ன வாண்டு அவள்
துள்ளி வரும் நேரத்திற்காகவும் !
***********************************
[குழந்தைச் செல்வங்களின் அன்பில் அடிபணிந்தவர்களின் சார்பாக]