சமூகச் சிலை==

கெடுவானே கேடு நினைப்பவன் கெட்டு
படுவான் பெரும்பாடு .பட்டும் விடுவானோ
தொட்டில் பழக்கம்? இருந்தும் சுடுகாடு
மட்டும் தொடரும் நினைப்பு.

அடுத்தவன் வாழ்வை அழிக்க நினைத்து
அடுக்கடுக்காய் எந்நாளும் இன்னல் கொடுத்து
கடுப்பினை ஏற்றும் கயவர்கள் வாழ்வோ
நெடுங்காலம் நில்லா நிலைப்பு.

ஊரோடு ஒத்து உறவாடி ஒன்றிணைத்து
சீரோடும் செல்வச் செழிப்போடும் யாரோடும்
நல்லவராய் வாழ்வோர் நலங்கெடுத்து நஞ்சளிப்போர்
புல்லுருவி போன்றப் பிறப்பு.

கெடுதல் புரிவதிலே கைதேர்ந்து விட்டோர்
விடுவதில்லை விட்டால் மதுவை தொடுதலில்லை
என்போர் திரும்பக் குடித்து திரிவது
போன்றல்லோ அற்பர் பிழைப்பு.

கொடுப்பதற்கு இல்லை எனும்போதும் வாழ்வை
கெடுப்பதற்கு பொய்யை அழகாய் உடுத்தே
வடுகொடுக்கும் சமூகம் எல்லாம் தெரிந்தும்
தடுக்க நினைக்காச் சிலை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Jun-14, 5:45 pm)
பார்வை : 158

மேலே