முடிவு மூச்சு

புரியா விடை எல்லாம்
புரிந்து போனதால்
பிரியா விடை பெற்று
பிரிந்து போகிறோம்

விடை மழுப்பிய பேனாக்களில்
கட்டிளம் பாதி கழிந்தது
வினா எழுப்பிய பேனாக்களில்
தீட்டிய மீதி அழிந்தது

வினாக்களுக்கு பட்டென்று பதில்
கடைநுதலுக்குள் வரவில்லை
விடைகளுக்கு பிட்டென்று பதில்
உடைநூலுக்குள் வந்தது

பள்ளிக் கூடம் போவதே
பள்ளிகொள்ள என்பதை
கிள்ளி யாரும் கேட்டாலும்
சொல்லிக்கொள்ள மாட்டோம்

ஆரம்பக் கல்வி தருகையில்
அருமை மாணவன் என்றீர்கள்
அரும்பும் மீசை வருகையில்
எருமை மாடவன் என்றீர்கள்

எருமை மேய்ப்பது எப்படியென்று
உங்களைப் பார்த்து அறிந்தோம்
எம்மை மேய்த்ததை பார்த்துத்தான்
எருமைக் கோனாரைத் தெரிந்தோம்

எங்கள் பாடத் திட்டம்
குறுகியது வட்டத்தில்
நீங்கள் போடும் திட்டம்
பெருகியது விட்டத்தில்

மூலையில் கிடந்த புத்தகத்தை
மூளையில் அடுக்கியவர் நீங்கள்
கால்களை மடித்து கற்றவித்தை
கல்வியாக வடித்ததும் நீங்கள்

ஆறுமணி நேரம் வரையில்
நூறுபணி செய்யும் நீங்கள்
மூடுபனி நேரம் வந்தால்
தேடும்பணி செய்வதும் நீங்கள்

ஆறுக்கும் பதினெட்டுக்கும்
பன்னிரெண்டு இடைவெளி
வேருக்கும் மலர்மொட்டுக்கும்
பண்ணிய தொண்டு நடைவழி

தழைக்கும்போது கிள்ளும் மரங்கூட
கிளைக்கும் போது,
பிழைக்கும்போது கிள்ளும் ஆசானால்
நிலைக்காதோ வாழ்வு

கிள்ளப்படாத பிழைகள் இன்னும்
அள்ளப்படாது இருப்பின்
உள்ளம்படாது எம்மை எல்லாம்
பொறுத்தருள வேண்டுகிறோம்

நன்று பயில விழைந்ததால்
அன்று அணிந்தது சீருடை
நன்றி நவில விழைந்ததால்
இன்று அவிழ்ந்தது கவிநடை

நோய் முடிந்தால் போய் விடும்
வைத்திய சாலையல்ல
போய் விடிந்தால் மீண்டு விடும்
நித்திய சாலை

கட்டிடமே விடை கொடு
கற்ற இடமே விடை கொடு
மேசைகளே விடை கொடு
ஆசைகளே விடை கொடு
வினாப்பத்திரமே விடை கொடு
விளைசத்திரமே விடைகொடு
குரு குலமே விடை கொடு
கருக் களமே விடை கொடு
போய் வருகிறோம் போய் வருகிறோம்

எழுதியவர் : மது மதி (2-Jul-14, 11:28 am)
Tanglish : mudivu moochu
பார்வை : 980

மேலே