விழிநீர் விதைகள்

விழிநீர் விதைகள்

ஊரார் கண் பட்டதோ-இன்று
உள்ளமும் புண்பட்டதே! -ஓயா
உவகைகள் கண்ட இவர்கள் உதடுகள்
உயிரின்றி உறைந்த துகள்களாய்!

***
"மதங்கள் வேறுபட்டதால் இவர்கள்
மணப்பது மறுக்கப்பட்டது!
மீறி மணம் செய்ய துணிந்தால்
மரணம் என விதிக்கப்பட்டது"

சொந்தம் தகர்த்து-புது
பந்தம் அமைக்க மனமின்றி,
உறவினை எதிர்க்க வழியுமின்றி,
பிரிவினை எதிர்கொள்ள துணிந்தனர்!

"மதங்கள் இணைக்க மறுத்த
மனம் இரண்டை-இன்று
மரணம் இணைத்து!"

***

காதல் செய்தது குற்றமென்று-அன்று
சுற்றம் குறை சொன்னது- காதலித்த
குற்றத்திற்கு கல்லறை தண்டனையை
தீர்ப்பாய் யார் தந்தது?

'இவர்களது அனுமதி இல்லாமலே
இருவர் இதயமும் இடம்மாரியதே!'
இதில் ஈன்றவர் அனுமதி இல்லை என்றால்
அதில் இவரது தவறேன்னவோ?

'எம்மதமும் சம்மதம்' போன்ற
கருத்தினை கற்பித்தவர்களே -'கற்க
கசடற கற்றபின் நிற்க' என்ற
வள்ளுவன் வாய்மொழி தவரியதேனோ?

உற்றார் உறவினர் மற்றாறேல்லாம்
கூடி ஒருநாள் கொண்டாட வேண்டி,
வாடி வருந்தி தன் பிள்ளை
வாழ்நாள் முழுதும் திண்டாடலாமோ?

'திருமணம் ஒன்றை நடத்துதற்கு,
இருமனச் சம்மதம் இருப்பின் போதுமே!
இதயம் இரண்டும் இணைந்திருந்தால்,
இல்லறமதில் இனிமைகள் பொங்குமே!'

சற்றே கொஞ்சம் சிந்தித்திருந்தால்- இன்று
அவர்கள் வாய்க்கு போட்ட அரிசியானது
வாழ்த்தித் தூவிய அட்சதையாகிருக்கும்!

'மகளை காட்டிலும் மானமே முக்கியம்'
'மகனை விடவும் மரியாதை அவசியம்'
நிலையற்ற இவற்றை நிலையென நினைத்தனர்!

தன் மக்களை இழந்து,
நிலைகுலைந்து நின்றபோது,
அவர் வடித்த விழிநீர்
துடைக்க முன்வரவில்லை,
நிலையென மதித்த
மானமும் மரியாதையும்!

***
(சிறு துளி கண்ணீரும் -அது
விதைத்துச் சென்ற எண்ணற்ற
சிந்தை துளிகளையும் ,
சேர்த்து எழுதியது)

-கவிதா

எழுதியவர் : கவிதா (4-Jul-14, 2:42 am)
Tanglish : VILINEER vithaikal
பார்வை : 246

மேலே