காமராஜர்
![](https://eluthu.com/images/loading.gif)
காமராசர்
பல கல்விச்சாலைகளைத் திறந்தார்
மூடிக்கொண்டன என்னவோ
பல சிறைச்சாலைகள்.
நீங்கள் பதவிக்கு வந்தீர்கள்
உங்கள் காட்சியோ எளிமை
உங்கள் பேச்சோ எளிமை
உங்கள் ஆட்சியோ வளமை.
வேறு சிலர் பதவிக்கு வந்தார்கள்
அவர்கள் காட்சியோ வளமை
அவர்கள் பேச்சோ இனிமை
அவர்கள் ஆட்சியோ மிகவும் கொடுமை.
அரசியல்வாதிகள் பலர்
மண்ணில் உயிரோடு இருந்தாலும்
மக்கள் மனதில் இறந்துபோனவர்கள்.
காமராசர்
மண்ணில் இறந்துபோயிருந்தாலும்
மக்கள் மனதில் உயிரோடு வாழ்பவர்.
அவர்கள் அரசியல் வாதிகள்
காமராசர் அரசியல்தலைவர்.
காமராசர்
ஆட்சிக்கு வந்தார்
ஏழைகளின்
பிச்சைப்பாத்திரங்கள்
அட்சயப்பாத்திரங்கள் ஆயின.
சிலர் ஆட்சிக்கு வந்தார்கள்
ஏழைகளின்
அட்சயப்பாத்திரங்கள்
பிச்சைப்பாத்திரங்கள் ஆயின
கடைசியில் அதுவும் களவாடப்பட்டன.
தமிழகத்திற்கு
எத்தனை முதல்அமைச்சர் வந்தாலும்
எங்களுக்கு
முதல் அமைச்சர் காமராசர்.
பெயரளவில் சொன்னால்
இது தமிழ்நாடு
பெருமையாகச் சொன்னால்
இது திரு.காமராசர் நாடு
லால்பகதுர் சாஸ்திரியை
பிரதமராக்கி
மேக்கர் ஆனார்.
இந்திரா காந்தியை
பிரதமராக்கி
கிங்மேக்கர் ஆனார்.
காமராசரை ஊரே சொல்லும்
துறவி துறவி என்று
நான் சொல்லமாட்டேன் துறவி என்று
மக்கள் நலனை ஒருபோதும் துறக்காதவர்
தமிழகம் இந்தியா முன்னேற்ற எண்ணத்தை
ஒருபோதும் துறக்காதவர்.
புத்தரும் காமராசரும்
பல நிலைகளில் ஒன்றுபட்டவர்கள்.
இரண்டு நிலைகளில் முரண்பட்டவர்கள்.
ஒன்று மண்
மற்றொன்று பெண்.
புத்தர் அரசியலை விட்டுவிட்டு
சந்நியாசி ஆனவர்.
காமராசர் அரசியலில் இருந்து கொண்டே
சந்நியாசி ஆனவர்.
புத்தர் பெண்ணைத்தொட்டு விட்டு
சந்நியாசி ஆனவர்.
காமராசர் பெண்ணைத்தொடாமலே
சந்நியாசி ஆனவர்.
காமராசர் பிறக்கும் முன்பு
விருதுநகர்
வெறும் நகர்.
காமராசர் பிறந்த பின்பு
விருதுநகர்
விருதுபெறும் நகர்.
காமராசர் நாடார்
காமராசர் நாடார்.
இது இனத்தின் பெயர் அல்ல
தன்மானத்தின் பெயர்.
காமராசர் காசு பணத்தை நாடார்
காமராசர் பெரும்பதவியை நாடார்
காமராசர் குறுக்குவழியை நாடார்
இப்படிப் பலவற்றை நாடார்.
நான் ஆத்திகவாதி
கடவுள் சாட்சியாகச் சொல்லுகிறேன்
புலவர்களே திருத்தி எழுதுங்கள்.
தமிழ்நாட்டில் எழுத்தறிவித்தவன் இறைவன் என்று எழுதாதீர்கள்
தமிழ்நாட்டில் எழுத்தறிவித்தவர் காமராசர் என்று எழுதுங்கள்.
காமராசரைப் படிக்காதவர்
என்று சொல்லாதீர்கள்
மனிதவாழ்வியலை நன்கு கற்றதால் தான்
கல்விப்புரட்சிக்கு வித்திட்டார்.
கடவுள் புத்திசாலி
கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும்
காமராசருக்குக் கைகளை
நீளமாய் படைத்தார்.
காமராசர் நவீனத் திருவள்ளுவர்
பழையத் திருவள்ளுவர்
முதலில் செவிக்குஉணவும்
பிறகு சிறிது வயிற்றுக்கு உணவும் என்றார்.
காமராசர்
செவிக்குஉணவும் வயிற்றுக்கு உணவும்
சேர்த்தே தரச்சொன்னார்.