செம்மீனா

முகமறியா முகமூடி
மனம் கிழிக்க,
மௌனம் தைக்க,
காற்றோடு சிறுதூறல்
எனதான புது பாடல்.....
கனவுகள் கலைந்தவன்
கதைகளில் தொலைந்தவன்
காகித ஓடங்கள்
செய்வதில் தெளிந்தவன்....
இலையாகும்
என் கானம், உன்
முகம் பாடி
முகம் வாடும்....
நதியான உன் வார்த்தை
ஒளிந்தாடி
எனைத் தேடும்....
நானில்லை எனக்குள்ளே...
நாணல்கள் நமக்குள்ளே....
முகம் காட்ட முடியாத
வெண்ணிலவில்
முழு இரவு
திகட்டாதோ.....
அகம் காட்டி
முடியாத பெண்ணிலவில்
முகம், சிறையை
அகற்றாதோ.....
சித்திர சோலை
நீ யாகும் வேளை- நான்
மந்திரக் கோலின்
மரகத வீணை....
தந்திரம் செய்து,
சாத்திரம் உடைப்பேன்-நீ
எந்திரமல்ல, நேந்திர நாட்டின்
கதகளி சேனை....
உன்னருகே ஒரு நாள்
என்னருகே நீ திருநாள்....
காத்திருக்கும் கவிதைகளில்
நானும் ஒரு வரி
உனைச் சேரா நாட்களில்
தேனும் விஷத் துளி....
கவிஜி