அவள் அப்படித்தான் ==கதை முழுமையாகியுள்ளது
உடும்புப் பிடியாய் வரமாட்டேன் என்று அடம்பிடித்த தந்தையின் பிடிவாதம் தளர்த்தி மனசை மாற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது விக்னேஸ்வரனுக்கு.இத்தனைக்காலம் வைராக்கியத்தோடு வாழ்ந்துவிட்ட அவரை அழைத்துக்கொண்டு முச்சக்கர வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தெருமுனைக்கு வந்தான் .இவன் வந்த நேரம் தரிப்பில் ஒரு வண்டியும் இருக்கவில்லை. அலுவலகம் முடிந்து மக்கள் வீடுகளுக்குச் செல்லும் அவசர மாலை என்பதால் எல்லா வண்டிகளும் சவாரிக்கு சென்று விட்டிருந்தன.கடிகாரத்தைப் பார்த்தான் மணி ஐந்து எனக்காட்டியது. 'ஆறு மணிக்குள்ள வரல்ல நான் என் பிள்ளையை கூட்டிக்கிட்டு எங்காவது போய்விடுவேன்." மிரட்டிய மிருதுளாவின் முகம் வந்து போனது. 'பிடிவாதக்காரி. பிடிவாதம் பிடித்தே காரியத்தை சாதித்திடுவா. அவளை அப்படியே விட்டு விடக்கூடாது. அவளோட அந்தக் குணத்தை மாத்தணும்' மனதுக்குள் நினைத்துக் கொண்டவனை 'என்னடா வண்டி ஒன்னையும் காணலியே' என்னும் தந்தையின் குரல் நினைவுக்கு கொண்டுவர 'இதோ வந்திடும்ப்பா..'என்றவாறு தெருவை நோட்டமிட்டான்.
அப்போதைக்கு வண்டிகள் எதுவும் வருவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.;'ஆறு மணிக்குள்ள வராவிட்டால் எங்காவது போய்விடுவேன்னு சொன்னாளே.. போய்விடுவாளோ..ச்சே எங்கே போய்விடப் போறா. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இப்படி எத்தனை தடவை சொல்லி இருக்கா. ஒருதரம்கூட அப்படி நடந்ததில்லை.தன்னைத்தானே சமாதானப் படுத்தி வீட்டுக்குள்ளே இருந்துவிட்ட சம்பவங்கள் ஏராளம் .இன்றும் அப்படித்தான் நடக்கும்' என்று கேள்வியும் பதிலுமாக தனக்குள்ளே பட்டிமன்றம் நடாத்திக்கொண்டிருந்தான். அனால் அப்போதும் வண்டிகள் எதுவும் வரவில்லை.
மறுபடியும் கடிகாரத்தைப் பார்த்தான் அது.ஐந்து முப்பதைத் தாண்டிவிட்டிருந்தது.நேரம் ஆக ஆக மனது கொஞ்சம் படபடக்கத் தொடங்கியது.இதுவரை காலமும் இல்லாமல் நேற்றும் அவளுக்கும் அவனுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் கொஞ்சம் கடுமையானதாக இருந்ததால் இந்த நிலை. ஒரு கைப்பேசி அழைப்பு கொடுத்து தாமதத்திற்கான காரணத்தை சொல்லலாம் என்று நினைத்தான்.அப்படிச் சொன்னால் வீட்டை விட்டு போய்விடுவாள் என்ற பயத்தில் சொல்வதாய் நகைப்பாள்.அவளின் அந்த நகைப்பிற்கு இடங்கொடுக்கக் கூடாது என்ற முடிவோடு வீதியைப்பார்த்தான் .அதிர்ஷ்டவசமாக அப்போது ஒரு வண்டி வந்தது. வண்டிக்காரனோடு போகவேண்டிய இடத்தை கூறி கேட்டபோது வேறு வண்டி அந்த நிலையத்தில் இல்லாமல் இருந்த நிலைமையை புரிந்து கொண்டு சற்று அதிகமாகவே கேட்டான். வேறு வேளையாக இருந்தால் வேண்டாம் என்று கூறிவிட்டு வேறு வண்டியை பிடித்திருப்பான் .அவசரமும் அவசியமும் நிறைந்த அவ்வேளையில் அவன் கேட்ட தொகைக்கு சம்மதித்து தந்தையை முதலில் ஏற்றிக் கொண்டு தானும் ஏறினான்.
மணி ஆறைநெருங்கிக் கொண்டிருந்தது.எப்படியும் வீட்டை அடைய இன்னும் முக்கால் மணிநேரம் எடுக்கும் அதற்குள் என்னதான் செய்து விடுவாள் என்று பார்ப்போம் என நினைத்துக் கொண்டவனின் நெஞ்சுக்குள் நேற்று இரவு வீட்டில் நிகழ்ந்த அந்த சம்பவம் நினைவில் வந்தது. இரவு சாப்பாட்டை மடித்து விட்டு உட்கார்ந்திருந்த நேரத்தில் ;என்னங்க .உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்'' பீடிகை போட்டாள். எதோ பெரிதாக ஒரு குண்டை போடப்போகிறாள் என்று தெரிந்து கொண்டு 'என்ன சொல்லு' என்றான். 'சொன்னா கோபப்படாம நான் சொல்லுறத செய்வீங்களா'' கேட்டாள்' ;முதல்ல நீ சொல்லு விஷயம் என்னன்னு தெரிஞ்சிகிட்டு பதில் சொல்றேன்' 'பெருசா ஒண்ணுமில்லே நீங்க உங்க சித்தப்பா வீட்டிலே இருக்கிற உங்க அப்பாவை நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரணும்' அவள் சொல்லி முடிப்பதற்குள் 'உனக்கென்ன பைத்தியம் ஏதும் புடிச்சிரிச்சா.?' சீறினான். 'எனக்குத்தெரியும் நீங்க இப்படித் துள்ளிக் குதிப்பீங்கன்னு.நான் என்ன யாரோ மூணாவது மனுஷரையா கூட்டிக்கிட்டு வரச் சொல்றேன்..'' '' மூணாவது மனுஷர் இல்லைதான் .ஆனால் அன்றைக்கு என்ன ஒரு மூணாவது மனுசனிலும் கீழா நடத்தினாரே ..அதை என்னால அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியாது ' 'இப்படி முடியாதுன்னு சொன்னா எப்படி? திட்டினாலும் விரட்டினாலும் அவர் உங்க அப்பா இல்லையா .." எடுத்துரைத்தாள் ''அதுக்காக தன்மானத்தை இழந்து மறுபடியும் அவர்கிட்டே மண்டி இட என்னால் முடியாது.' வீராவேசமா பேசினான் ' என்ன பெரிய தன்மானம் வேண்டிக் கிடக்குது. சொந்த அப்பாக்கிட்ட மகன் தாழ்ந்து போறதிலே என்னதான் கௌரவக் குறைச்சல் வந்திடப் போகுது? அதுவும் இந்த முடியாத காலத்திலேயே தள்ளாடுற மனுசர்கிட்டே..'' அலுத்துக்கொண்டாள் அவள் '' எல்லாம் பேசுறதுக்கு நல்லா இருக்கும் செயல்ல சரிவராது. போ..போ. போய்.ஏதும் வேற வேலை இருந்தா பாரு..'' திட்டினான் அவளை. 'ஊருக்குள்ளே நாலு பேரு நாலு மாதிரி பேசுராங்கலேன்னுதான் சொல்றேன் .பெத்த தகப்பனை வைத்து பார்க்க முடியாதவன் என்று என் காதுபடவே சொல்றாங்க இதெல்லாம் கேட்டுக்கிட்டு நீங்க வேணும்னா கேட்டும் கேட்காத மாதிரி போகலாம் .என்னால அது முடியாது .உங்களாலே எனக்கும் வெளியிலே தலைகாட்ட முடியல'அவளும் சற்று கோபமாகவே பேசினாள். 'உனக்கு வெளியிலே தலை காட்ட முடியாது என்கிறதுக்காக எனக்கு விருப்பம் இல்லாத காரியத்தை என்னாலே செய்ய முடியாது 'பிடிவாதம் பிடித்தான் அவன்.
இது விஷயமாய் பலமுறை மிருதுளா கேட்டபோதெல்லாம் மறுத்தே வந்ததற்கு காரணம் இல்லாமலும் இல்லை. விக்னேஸ்வரனின் தந்தை கதிர்வேலுவுக்கு விக்னேஸ்வரன் ஒரே பிள்ளை. இவன் பிறந்த நேரத்திலேயே அம்மாவை இழந்து விட்டான், இவனை வளர்ப்பதர்காகவேனும் ஒருத்தியை கல்யாணம் கட்டிக்கொள்ள சொல்லி உறவுகள் வற்புறுத்தியபோதும் மறுமணம் செய்து கொள்ளாமலேய இருந்துவிட்டார். இன்னொருத்தி வந்து அவளுக்கு ஒரு குழந்தை கிடைத்து இவன் புறக்கணிக்கப் பட்டுவிடக் கூடாதே என்பதற்காகவே மறுத்துவிட்டார். என்றாலும் தாய் இல்லாத குறைதெரியாமலே வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கினார். அப்படிப்பட்ட அப்பாவிடம் தான் ஒருத்தியைக் காதலிக்கிறேன் அவளை எனக்கு திருமணம் செய்து வை என்று ஒப்புக்குக் கூட கேளாமல் ஒருநாள் மிருதுளாவை இழுத்துக்கொண்டு அவர் முன்னால் போய் நின்றால் அவருக்கு எப்படி இருக்கும்? .மகனே உலகம் என்று வாழ்ந்தவர் இந்த செயலால் அனல்மேல் விழுந்த புழுவாய் ஒருகணம் துடித்துப்போனார். ஆத்திரத்தில் ''போடா போ. எங்காவது போய்விடு. என் கண் முன்னே நிற்காதே.நின்னா என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. எனக்கு மகன் என்று ஒருத்தான் இல்லை. என்று நினைச்சிக்கிட்டு இருந்திடுறேன்..''என்று விரட்டியே விட்டார்.அன்று அவரை பிரிந்து வந்தவன்தான் பலரையும் பிடித்து சமாதானம் செய்ய பார்த்தும் அசைந்து கொடுக்காத அவரை அவர்வழியிலே விட்டுவிட்டு மிருதுளாவோடு வாழ்வைத் தொடர்ந்தான் .
முதன் முதலாய் மிருதுளாவை வீட்டுக்குக் கூட்டி வந்தபோது அவளை வீட்டுக்குள்ளேயே நுழையவிடாது விட்ட வருத்தம் இன்னும் விக்னேஸ்வரன் மனதை புழுவாய் அரித்துக் கொண்டிருப்பதாலேயே அவரை அழைத்துவந்து வீட்டோடு வைத்துக் கொள்ளும் எண்ணத்தை கை கழுவி விட்டிருந்தான். மிருதுளா கேட்கும்போதெல்லாம் சாக்குப் போக்குச் சொல்லி சமாளித்து வந்தான்.இப்போது திடீரென்று மிருதுளா அவரை அழைத்துக்கொண்டு வா என்றதும் ருத்ரத் தாண்டவமாடத்தொடங்கிவிட்டான். இவனது ருத்ர தாண்டவத்தைக் கண்டு அஞ்சாத மிருதுளா 'நாம என்ன நேர் வழியிலே கல்யாணம் கட்டிக்கிட்டா உங்க அப்பா காலிலே உங்க அப்பா காலிலே விழுந்தோம் அவர் ஆசீர்வாதம் பண்ணலேன்னு கோபப்பட,. நீங்க செய்த தவறுக்கு அவர் மேலே ஆத்திரப்பட்டா எல்லாம் சரியாகிடுமா .இப்போ நமக்கும் ஒரு பிள்ளை இருக்கான் நாம எவ்வளவு அன்பா பாசமா அவனை வளர்க்கிறோம்.நாளைக்கு பெரிய ஆளாகி அவனும் ஒருத்தியக் கூட்டிக்கிட்டு வந்து நம் முன்னாடி நின்றா நமக்கு எப்படி இருக்கும். அதுமாதிரித்தான் அன்றைக்கு அவருக்கும் இருந்திருக்கும் எதோ கோபத்திலே அப்படி சொல்லிட்டாரு என்கிறதுக்காக காலத்துக்கும் அவரை ஒதுக்கியே வைக்கிறது சரி இல்லை. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது நாளைக்கு வேலை விட்டு வருபோது அவரை கூட்டி கொண்டு வந்தே ஆக வேண்டும் இல்லாட்டி நானும் என் பிள்ளையும் இந்த வீட்டிலே இருக்க மாட்டோம் " தீர்க்கமாய் சொன்னவள் அவனின் பதிலுக்காய் காத்திராமல் உறங்கச் சென்றுவிட்டாள். அவளின் அந்தச் செய்கை மேலும் அவனை வெறுப்பூட்ட அவனும் உறங்குவதற்காக கட்டிலில் வீழ்ந்தான், அங்கே ஒரு கட்டிலில் இரு துருவங்கள் உறங்காமல் உறங்கிப்போயின .விடிந்ததும் எப்போதும்போல அவள் அவனை அலுவலகம் அனுப்பி வைத்தாள். எதுவும் பேசாமல் மௌனவிரதம் பிடித்தவனாய் அவனும் கிளம்பிவிட்டான்.
இப்போது மறுபடியும் கடிகாரத்தை பார்த்தான் அது ஆறு பதினைந்தைத் தாண்டி விட்டிருந்தது .இன்னும் ஒரு சில நிமிடங்களுக்குள் வானம் இருளை போர்த்திக்கொள்ளத் தயாராகி விட்டிருந்தது. 'போயிருப்பாளோ...' எண்ணிப்பார்க்கவே பயமாக இருந்தது.அவளில்லாத ஒரு வாழ்வா..நினைத்தப்போதே விழியோரம் கண்ணீர் குளம் கட்டத்தொடங்கி விட்டது. அப்பாவோ வண்டி சாரதியோ பார்த்துவிடாமல் கண்ணில் தூசு விழுந்தததை துடைப்பதுபோல் துடைத்துக்கொண்டான்.வண்டி வீட்டு வாசலை அடைந்தபோது இருள் கவிந்தே விட்டது .வீட்டின் முன் மின் விளக்கு எரிவதைக் கண்டபோது மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. உள்ளே தான் இருக்கிறாள் என நினைத்துக்கொண்டு வண்டிக்காரனுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு மின் மணியின் பொத்தானை அழுத்தினான் 'ட்ரிங்...................' சத்தம் நீண்டது ஆனால் திறப்பதற்கு உள்ளே இருந் அவள் வரவில்லை. மறுபடியும் அழுத்தினான் ம்ம்ஹும் ..யாரும் வந்த பாட்டைக் காணவில்லை .இப்போது பயம் அவன் உயிரைக் கவ்வ 'ச்சே வீண் கௌரவம் பாராமல் கைப்பேசிக்கு அழைப்பு எடுத்துச் சொல்லியிருக்கலாம் ' என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டான். இப்போ என்ன செய்வது அப்பா வேறு நின்று கொண்டிருக்கிறார்.யோசித்துக்கொண்டிருக்கையிலேயே பக்கத்து வீட்டுக்கதவு திறந்தது. எட்டிப்பார்த்தான் .வீட்டுக்காரப் பெண் இவனை நோக்கி வந்தாள். 'இந்தாங்க சாவி ..நீங்க வந்தா கொடுக்கச் சொல்லிட்டு மிருதுளாவும் மகனும் இப்போதான் வண்டிப்பிடித்து வெளியே போறாங்க.' இவனது பதைப்பைப் புரியாமல் மொட்டையாகக் கூறினாள் அவள் 'எங்கே போறாங்க என்று சொல்லிட்டுப் போனாங்களா?' படபடப்புடன் கேட்டான் .''அதுபற்றி ஒன்னும் சொல்லலீங்க 'கூறிவிட்டு நில்லாமல் போய்விட்டாள் அவள். அவள் சென்றதும் வாயில் கதவையும் வீட்டுக்கதவையும் திறந்து அப்பாவை உள்ளே அழைத்துப் போனான். 'அவள் எங்கே போயிருக்கா என்று அப்பா கேட்டு விடுவாரோ ..!கேட்டால் என்ன பதில் சொல்வது என்று மனதுக்குள் போராட்டமாக இருந்தது. அதற்குள் இவனே 'இப்போ வந்துடுவாங்க நீங்க கொஞ்சம் உட்காருங்க ' இருக்கையில் அமர்த்தினான்.திடீரென்று மூளைக்குள் ஒரு மின்னல் .கைப்பேசியை எடுத்து அவளுடைய இலக்கத்தை அழுத்தி காதில் வைத்தான். .மணி வீட்டுக்குளேயே அடித்தது. கைபேசியையும் எடுத்துப்போகவில்லையா ..என்றவாறு கைபேசி வைக்கப்பட்டிருந்த மேசை அருகே வந்தான். அங்கே அவன் கண்டக் காட்சி தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. கை வளையல், தாலிக்கொடி, கம்மல். என்று அணிந்திருந்த தங்க நகைகள் அனைத்தையும் கலட்டி வைத்துவிட்டுப் போயிருந்தாள்.' நீயே வேண்டாம் உனது நகை எனக்கு என்று அவசர முடிவு எடுத்து விட்டாளே..'அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதவனாய் அப்படியே தரையில் அமர்ந்து விட்டான்.
கொஞ்சநேரம் ஒன்றும் புரியாமல் இருந்தவனை.அப்பா அழைக்க நினைவுக்கு வந்தவனாய் எழுந்து போனான் 'என்னப்பா..'கேட்டான்,. 'அவங்க வர இன்னும் எத்தனை நேரமாகும் ?" கேட்டவர் பதிலுக்கு காத்திராமல் 'நான் கொஞ்சம் குளிக்கணும் எந்தப்பக்கம் போகணும் என்று காண்பிப்பாயா? 'மாற்று உடைகளை எடுத்துக்கொண்டே
நின்றவரருக்கு குளியலறையை காண்பித்துவிட்டு வாசல் பக்கமாக வெளியே வந்தான், குளித்து விட்டு வரும் அப்பாவிற்கு நிலைமையை எப்படி புரிய வைப்பது என்னும் புரியாத குழப்பத்தோடு .புகை பிடிக்கவேன்ன்டும் போலிருந்தது. நண்பர்களுக்காக் எப்போதோ வாங்க வைத்திருந்தது ஞாபகம் வர வீட்டினுள் சென்று எடுத்துக்கொண்டு மறுபடியும் வாசலுக்கு வந்து முற்றத்தில் கிடந்த நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அந்த வெண்சுருட்டை வாயில் வைத்து அதற்கு கொள்ளியிடப் போனான்.அந்நேரம் வீட்டுக்கு வெளியே வாகனம் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது .முச்சக்கர வண்டியின் ஓசைபோல் இருக்கவே திடீரெண்டு எழுந்துபோய் வாயிற் கதவைத் திறந்தான்,அங்கே அவன் கண்டக் காட்சி அதிர்ச்சியைக் கொடுத்தது. வெறும் அதிர்ச்சியில்ல ஆனந்த அதிர்ச்சி.கையில் தலையணை ஒன்றை எடுத்துக் கொண்டு மகன் முன்னாள் இறங்க இன்னும் சாமான்களை எடுத்துக்கொண்டு அவளும் இறங்கினார்கள்.'என்ன பார்த்துக்கிட்டு இருக்கீங்க இதை கொஞ்சம் பிடிங்க ' கையில் இருந்த பொதி ஒன்றை அவனிடம் நீட்டிவிட்டு வண்டிக்காரனிடம் பணத்தை கொடுத்தாள். காசை வாங்கிக் கொண்டு அவன் போக வாயிலை அடைத்துப் பூட்டிவிட்டு நடந்தாள். 'கொஞ்சம் சுணங்கிரிச்சி வந்து ரொம்ப நேரமாகுதா..'ஆதரவோடு கேட்டாள். பதில் சொல்லாமல் நடந்தான் அவன் .'என்ன நான் கேட்கிறேன் ஒன்று பேசாமல் இருக்கிறீங்க 'மறுபடியும் கேட்டாள். 'என்ன பதில் சொல்லுறது .வெளியிலே போனா கைபேசிய எடுத்து போகக் கூடாதா ' சற்றே காரமாகப் பேசினான் .குரலின் உக்கிரத்தை புரிந்தவள் 'இவன் மேலதிக வகுப்பு முடிச்சி தாமதமாத்தான் வந்தான் போற அவசரத்திலே வச்சிட்டுப் போயிட்டேன் ." வருத்தமாகக் கூறினாள். ' அதுசரி எதுக்கு கழுத்திலே காதிலே கிடந்த நகை நட்டெல்லாம் கழற்றி வச்சிட்டுப் போன ..கொஞ்ச நேரத்திலே எவ்வளவு குழம்பிப் போயிட்டேன் தெரியுமா?" மூடி மறைக்கவேண்டும் என்று எண்ணி இருந்ததை ஆத்திரமாகப் போட்டுடைத்தான் .'ஆறுமணி பிந்திருச்சி ஊரு கெட்டுக் கிடக்கிற காலத்தில் நகை கடை மாதிரி போனா கொள்ளைகாரனுக்கு கூப்பிட்டு கொடுத்தமாதிரி போயிடுமேன்னுதான் கழற்றி வச்சிட்டு போனேன் .இது ஒரு குற்றம்மா..! அதான் வந்துட்டேனே சரி சரி மாமா எங்கே?'கேட்டவாறு நடந்தவள் அணிந்திருந்த செருப்புடன் வீட்டிற்குள் நுழையப் போன மகனை "ஏய் ...செருப்பை கழற்றிட்டு போ' என்று சத்தமிட்டுவிட்டு அவளும் செருப்பைக் கழற்றினாள் கூடவே அவனும் பதற்றம் கோபம் ஆத்திரம் என்ற எல்லா செருப்புகளையும் கல்ழற்றி வைத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தான் .அப்போது குளியலறையில் இருந்து வெளியே வந்த அவன் அப்பாவை 'தாத்தா' என்று ஓடிச்சென்று கட்டிக்கொண்டான் மகன்.
ஒரு வறட்டு பிடிவாதத்தால் தாத்தா பேரன் உறவையுமல்லவா சீர்குழைத்திருக்கிறேன் என்ற குற்ற உணர்வு மேலிட நின்றான். அப்போது மாற்றவேண்டும் என்று எப்போதும் எண்ணும் மிருதுளாவின் பிடிவாதத்தின் மேல ஒரு மதிப்பே வந்து விட்டது அவனுக்குள் .ஏன் அவள் மாறவேண்டும் . தொட்டதெற்கெல்லாம் வீட்டை விட்டு போவிடுவேன் என்று சண்டை பிடித்தாலும் வீட்டு வாசலில் இருக்கும் படியைபோல் வீட்டைத் தாண்டாமல் இருக்கிறாள். நல்லதை மட்டுமே வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும்அவள் அப்படித்தான் இருந்து விட்டுப் போகட்டுமே .என்று எண்ணிக் கொண்டவனுக்கு இன்னும் ஒன்று மட்டும் புரியாமல் இருந்தது. அப்பாவை கூட்டியே வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் அவருக்கு வேண்டியதை எல்லாம் அவசர அவசரமாக வேறு வாங்கி வந்திருக்கிறாளே,, என்றுதான் வியப்பாக இருந்தது. எந்த நம்பிக்கையில் வாங்கி இருப்பாள் என்று கேட்டால் அதற்கும் ஏதாவது காரணம் வைத்திருப்பாள் என எண்ணிக் கொண்டான். ஆனால் எப்படிக் கேட்பதேன்றுதான் குழம்பினான். எல்லாம் சுமுகமாய் முடிந்து உறங்குவதற்காக படுக்கைக்கு வந்தபோது ''இனிமேல் தாத்தக்கூட படுத்துக்குவேன் என்று மகன் அவரோடேயே படுத்துக் கிட்டான். பாவம் அவரு சொந்த மகன் இருந்தும் இத்தனை நாளும் அநாதை போல இருந்தவருக்கு இன்னைக்குத்தான் மனசுக்கு சந்தோஷமா இருக்கும் .அதுதான் நான் அவன் அவரோடேயே தூங்கட்டும் என்று விட்டு விட்டேன்." நீண்டதாகப் பேசியவளிடம் ''அதுசரி எந்த தைரியத்திலே நான் அப்பாவை கூட்டிக்கிட்டு வந்திடுவேன் என்று சாமானெல்லாம் வாங்கி அவருக்கு ஒரு அறையையும் ஒதுக்கி நல்ல சாப்பாடெல்லாம் தயார் செய்தாய்?" கேட்டான் ."அதெல்லாம் ஒரு குருட்டுக் கணிப்புதான் உங்க மனசை பத்தி எனக்கு தெரியாதா ..''சிரித்தவள் சொன்னாள் ''சரி சரி நாளைக்கு நீங்க வேலைக்கு போகணும் இப்போ நேரமாச்சி வானக் தூங்குவோம்" என்றதும் மின்விளக்கை அணைத்தவன் தன வாழ்க்கை விளக்கையும் அனைத்துக் கொண்டான். அந்தக் காட்சி இருமலர்கள் உறங்குவதற்கான சாட்சி(.முற்றும்.)