முகவரிகள்

காதலுக்கு முகவரி
கண்கள் என்று
யாரோ சொன்னான்
தேடிச் சென்றான்
அவள் இமைகளை
இறுக மூடிக் கொண்டாள்
அவன் திரும்பிச் சென்றான் !
வேலைக்கு முகவரி
அலுவலக வாசல் என்று
யாரோ சொன்னான்
தேடித் தேடி அலைந்தான்
இல்லை என்றான்
கதவை மூடி விட்டான்
வெறுத்து வீதியில் நடந்தான் !
அலுவலக வாசல்
அவனுக்காகத் திறந்தது
அவளும் அங்கே வந்தாள்
ஒரு தேவதையாக
வரவேற்க எழுந்திருக்கையில்
எழுந்திரு எழுந்திரு என்று
எவனோ கத்தினான்
பகல் கனவும்
பாதியில் கலைந்தது
தடிய்டன் நின்றான்
பார்க் காவல்காரன் !
மலர்களின் முகவரியில்
துயில் கொள்ளலாமா
என்பதுபோல் பார்த்தன பூக்கள் !
பூங்கா கதவும் மூடிக் கொண்டது
புஷ்பங்கள் சோகத்தில் சிரித்தன !
தன்னிரக்க வீதியில்
தனிப் பட்டு நின்றான் !
சாவின் முகவரி எது
என்று கேட்டான்
எவனோ சொன்னான்
தற்கொலை என்று
கயிறா கடலா
என்று யோசித்து
கயிறு என்று முடிவு செய்து
கடை வீதிக்குச் சென்றான்
கயிறு வாங்கிவரும் வேளையில்
மழைச் சாரல் தூர
மர நிழலில் ஒதுங்கி நின்றான்
ஐயா தரும ராசா !
அந்தக் கயித்த தரமுடியுமா
என்றாள் மரத்தடியில் ஒருத்தி
எதற்கு என்றான்
அழுவற குழந்தைக்கு
தூளி கட்ட என்றாள்
தந்தான்
தூளியின் ஆட்டத்தில்
தாயின் தாலாட்டில்
அழுகுரல் நின்று துயின்றது மழலை
ஏதோ இனம் தெரியாத நிம்மதி இவனுக்கு
மரண வாசலின் முகவரி தேடிச் சென்றவனுக்கு
மழலையின் அழுகுரல்
ஜனனத்தின் அர்த்தத்தை சொல்லித் தந்ததோ ?
மழைத் தூறல் நின்று விட்டது
நன்றியுடன் பார்த்தாள் தாய்
நம்பிக்கையுடன் நடந்தான் அவன்
வாழ்க்கையின் புதிய முகவரியைத் தேடி !
~~~கல்பனா பாரதி~~~