இல்லறம்

இல்லறம் ..

ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை தினம்.

வழக்கமாக எழுந்திருக்கும் நேரம் காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்தது.
கைக்கு எட்டும் தூரத்தில் கடிகாரம் இல்லாததால் எழுந்து சென்று அதன் தலையில் தட்டினால் தான் அலாரம் சத்தம் நிற்கும். வலமும் இடமும் ஒருமுறை திரும்பிப் படுத்துக் கொண்டாள் மனைவி.

அருகில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை மெல்ல உசுப்பி, "ஏன்னா .. எழுந்து போய் அந்தக் கடிகாரத்தை நிறுத்தி வையுங்கோளேன்" என்றதும், விருப்பம் இல்லாமல் கணவன் எழுந்து சென்று, கடிகாரத்தின் தலையில் ஒரு குட்டு வைக்கவும், அதன் ஒலி நின்றது.

ஞாயிற்றுக் கிழமையாவது சற்று நேரம் அதிகமாகத் தூங்கலாம் என்றால் முடிவதில்லை என்று சிணுசிணுத்த மனைவியிடம், "கடிகாரம் பாவம் என்ன செய்யும். நீ நேற்றிரவு படுக்கச் செல்லும் முன்பு அலாரம் வைக்காதிருந்தால், அதுவும் கூட பேசாதிருந்திருக்கும்" என்று சொல்லிவிட்டு, மீண்டும் படுத்துக் கொண்டார்.

ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். கைபேசி ஒலித்தது. அழைப்பு வந்தது மனைவியின் கைபேசியில். "ஏன்னா .. யாருன்னு பாருங்கோளேன்" என்றாள் மனைவி.

"வேறு யாரு இருக்கப் போறா .. ஒன்னு உங்க அம்மாவா இருக்கும் .. இல்லைன்னா உன் தங்கையா இருக்கும். நீயே போய் எடு" என்றான் கணவன்.

"ஏன் உங்க நண்பர்களாகவும் இருக்கலாமே .. எப்பவும் எங்காத்துக்காராள குத்தம் குறை சொல்வதென்றால் உங்களுக்கு அல்வா திங்கற மாதிரி. எடுத்து யாருன்னு கேளுங்கோளேன்" என்றதும், கணவன் எழுந்து சென்று கைபேசியை எடுத்து, ஹலோ என்றதும், எதிர் முனையில் இருந்து, "ஐயா .. நான் தான் மஞ்சு பேசறேன் .. என் புள்ளைக்கு நேத்து ராத்திரிலேந்து ஒரே ஜுரம். ரெண்டு மூணு தடவ பேதி வேற ஆயிடுச்சு. இன்னிக்கு புள்ளைய எடுத்துக்கிட்டு தர்மாசுபத்ரிக்குப் போணும். எவ்வளவு நேரம் ஆகும்ன்னு சொல்லமுடியாது. அதனால இன்னிக்கு வேலைக்கு வரமுடியாது. இதை அம்மா கிட்ட சொல்லிடுங்க ஐயா" என்றாள்.

"சரி .. சரி .. புள்ளைய நன்னா கவனிச்சுக்கோ" என்று சொல்லி கைபேசியின் இணைப்பைத் துண்டித்துவிடவும் மனைவி .. "யாரண்ணா" என்றாள்.

"செய்தி வந்தது எனக்குத்தான்" என்றான் கணவன்.

"அப்படி என்ன செய்தி உங்களுக்குக் காலையிலேயே வந்தது" என்று வினவ, "உன்னோடு மஞ்சு இன்னிக்கு வரமாட்டாளாம் .. அவ புள்ளைக்கு ஜுரமாம். அப்போ இன்னிக்கு எனக்குத்தானே அவ செய்யற அந்த வேலையெல்லாம்" என்று சொல்லவும் மனைவி, "ஜன்னல்ல பால்பையிலிருந்து பால் பாக்கட்டை மறக்காம எடுத்துடுங்கோ .. நேத்திக்கு காக்கை ஒரு பாக்கட்டு பாலை கீழே எடுத்துப் போட்டு கொட்டிடுத்து" என்றாள்.

"நீ சொல்லி நான் செய்யாமல் இருப்பேனா" என்று கூறிவிட்டு, படுக்கையறையிலிருந்து வெளியேறினான் கணவன்.

எழுதியவர் : வெங்கடாசலம் தர்மராஜன் (27-Jul-14, 11:37 am)
Tanglish : illaram
பார்வை : 241

மேலே