ஒரு மலரின் கானம்

நான்
செடியின் சிரிப்பு

என்
வசீகர புன்னகையில்தான்
வசந்தம் தனது
வரவேற்புரையை
வாசிக்கும்!

***
ராகங்களால்
இசைக்க முடியாத
அபூர்வ பாடல் நான்!
அழகின் வெளிச்சம் நான்

***
அழகாய் சிலிர்த்து
சருகாய் உதிர்ந்து
உரமாகிப் போவதே- என்
பிறப்பின் கட்டளை

எனில்,
நீங்கள் கொய்யும்போது
என் ஜீவன் துடிக்காதா?

***
கூந்தலுக்குச் சேர்ந்தாலும்
குற்றமில்லை என்னை ஒரு
கோயிலின் கற்களிலே
கொண்டு போய் வைக்காதீர்
தெய்வத்தின் பெயராலே- அங்கே
தொழில்முறை நடக்கிறது

***
எனக்கும்
அழத்தெரியும்....
என் விழிகளில்
பனித்திரை

***
பூமியின் பசியப் பக்கங்களில்
நதி ஒரு வரலாறு
வனம் ஒரு நெடுங்கதை
நான் கவிதை

நான் என்னை
மண்ணுக்கே சமர்ப்பிக்கிறேன்

***
நிலாக்கீற்று என்னை
வருடுவதாகக் கூறும்
உங்களின் கற்பனை
பொய்!-

நான்
பூத்துச் சிரிப்பது
காற்றின் சுவருக்கு
வாசனை பூசவே!

உங்களின் உணர்வும்
பொய்-
இல்லையெனில்
மணமே எனது
மெல்லிய கானம்...!(1989)

("சிகரங்களை நோக்கிய சிறகடிப்புகள் " எனும் எமது முதல் நூலிலிருந்து )

எழுதியவர் : கவித்தாசபாபதி (30-Jul-14, 2:07 pm)
சேர்த்தது : கவித்தாசபாபதி
Tanglish : oru malarin kaanam
பார்வை : 74

மேலே