மஞ்சள் கம்பளி சட்டை

மஞ்சள் கம்பளி சட்டை

அம்மா அவளுக்கு பின்னிக் கொடுத்த மஞ்சள் கம்பளி சட்டை
புழுதியில் இரத்தக் கரையுடன் தரையில் கிடக்கிறது…………………

அந்த கம்பளி சட்டையிலிருந்து சிதைக்கப்பட்ட
இழைகளுக்கு நடுவில் காணாமல்போன பொத்தான்
கண்ணாடித்துகள்களுக்கும் கசங்கிய கைப்பையுக்கும்
நடுவே பதுங்கி இருந்தது
பொத்தான் பதுங்குவதற்க்கு
மட்டும் தான் அங்கு இடமிருந்தது……

அந்த விகாரமாக்கப்பட்ட கம்பளி சட்டையிலிருந்து
விரிந்து தொங்குகின்ற இழைகள்
அவள் கதறி கூக்குரலிட்ட போது
அந்த ஆண் நாய் கடித்துக் குதறிய தொண்டையிலிருந்து
அறுந்து தொங்கும் நரம்புகளாய்த் தெரிகிறது
விகாரப்பட்ட சட்டையை கையில் எடுத்த அம்மாவுக்கு…..

மகளுக்கு மங்கலமாக இருக்கட்டும் என்று
அவள் உடல் அளவுக்கு கச்சிதமாய் பின்னிய
அந்த மஞ்சள் கம்பளி சட்டை
மகளின் மார்பை கூட மூட உதவாமல்
இரத்தக்கரையுடன் தரையில் கிடந்ததை கண்டு
கதறி அழுத அவள் கண்ணீரை
கடலின் கொந்தளிப்புடன் கூட ஒப்பிட முடியாது

நாக்கை தொங்க விட்டுக்கொண்டு தலைகுனிந்தபடியே
ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆண் நாயின் நரக நாற்றம்
நளிந்த சட்டையில் குபீரென்று வீசிக்கொண்டிருக்க
சொட்டிய இரத்தத்தை மௌனமாய் நக்கிச்செல்லும் பல
சொரிநாய்களும் அந்த கூட்டத்தில் வேடிக்கை
பார்க்க மட்டும் கூடி இருந்தது

எத்தனை கம்பளி சட்டைகள் தினமும் சிதைக்கப்படுகிறது?
அதே சமயம் பல கம்பளி சட்டைகள்
பின்னிக் கொண்டுதான் இருக்கப்படுகிறது !
நாக்கை தொங்க விட்டுக்கொண்டு தலைகுனிந்தபடியே
ஓடிக்கொண்டிருக்கும் ஆண் நாயின் இரையாய் ஆகாமல்
அதன் மூளை சிதறும்வரை மண்டையை நேரடியாக கொத்தும்
பருந்துகளாய் தன் மகளை வளர்த்து……..

என்றாவது ஒருநாள்……அவள் பின்னிய சட்டையை
தன் மகள் போட்டு அதன் அழகை ரசிக்கும்
நம்பிக்கையுடன் ……..

முத்தமிழ் கலை விழி

எழுதியவர் : முத்தமிழ் கலை விழி (3-Aug-14, 2:53 pm)
பார்வை : 105

மேலே