ஆடிப் பெருக்கு
இணையில்லா காவிரியில் ஆடிப் பெருக்கு
இன்றுகண்டேன் பொதிகையிலே ஆடிப் பெருக்கு
கணக்கில்லா கால்வாய்கள் கொண்டு சிரிக்கும்
காவிரியை முக்கொம்பு மூன்றாய் பிரிக்கும்
உணவூட்டும் காவிரியின் பாசப் பயணம்
ஊர்தோறும் நடத்துகிறாள் பாசனப் பயணம்
வணங்குகிற இறையாக நதியை மதிப்போம்
வா! ஆடிப் பெருகின்று நதியைத் துதிப்போம்
மணல் அள்ளும் வாகனத்தில் மண்ணீரை சொட்டும்
மனதிலிதை நினைந்தவுடன் கண்ணீரே முட்டும்
மணற்கொள்ளை போகாமல் நாளும் தடுப்போம்
மகா நதிகள் காயாமல் நாமே தடுப்போம்
உணவுதரும் பயிர்களுக்கு உணவாகும் தண்ணீர்
ஓடிநடை பயின்றுவர நதியாகும் கண்டீர்
உணர்வுடையோர் எல்லோரும் நதியை மதிப்போம்
ஓ! ஆடிப் பெருக்கின்று நதியை துதிப்போம்