நடைப்பழகும் சூரியன் -3

குதித்தோடும் முயலாய் நடைப் பழகி
உதித்தெழும் கதிரைப் பிடி

பதிக்கும் பாதங்களில் என்ன வைத்துள்ளாய்
மிதித்தால் பொறி காண்..

புல்வெளியெங்கும் பூரிப்புப் பூக்கள் -உன்
சில்லென்ற பாதம் பதிவதால்

அன்றைய உன் மழலை வேதமெனக்கினில்
இன்றைய நடை போதை

குப்புறப்படுத்தாய் அன்றெந்தன் மடியில் மழை
எப்புறமும் நடக்கின்றாய் உவகை.

தத்துப்பித்தென்ற மழலை உவகை எனில்
தத்தித்தவழும் நடை பேருவகை

ஓடுகளம் உனக்கு முழு வீடும்
ஆடுகளம் என் இதயம்...

கடையில் விற்கா காசுக்கு கிட்டா
நடைவண்டிகள் நாங்கள் உனக்கு..

நடக்கின்றாய் பிடி இல்லாமல், உவகை
கடக்கின்றாய் ஒரு பருவம்...

எழுதியவர் : அகன் (6-Aug-14, 5:46 pm)
பார்வை : 91

மேலே