அமரர் சுசிலா மணி நினைவுப் போட்டி --- எனது தெய்வம் நீ

உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடை வண்டி நீ
கரிசன களிம்புக்காரன் நீ
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்
துடித்ததும் கண்ணீர் வடித்ததும் எனக்காய்

உன் கரங்களுக்குள் என் கோவில்
எனது தெய்வம் நீ
மெய்ஞான சுடரும் நீ
மந்திரமும் தந்திரமும் எனக்காய்
மறவாமல் போதித்தாய் எனக்காய்

உன் விழிகளுக்குள் என் பார்வை
எனது அகல் விளக்கு நீ
இமையாத காவல்காரன் நீ
நன்மையும் தீமையும் எனக்காய்
நயமாய் உணர்த்திட்டாய் எனக்காய்

உன் அரவணைப்பில் என் அகிலம்
எனது யானை அம்பாரி நீ
அன்பான ஆசான் நீ
கற்றதும் பெற்றதும் எனக்காய்
வற்றாமல் தந்திட்டாய் எனக்காய்

உன் காலடிக்குள் என் பாதை
எனது ஊன்றுகோல் நீ
வலிமிக்க வழிகாட்டி நீ
கற்களிலும் முற்களிலும் எனக்காய்
தடைகள் தகர்த்திட்டாய் எனக்காய்

எழுதியவர் : ராஜராஜேஸ்வரி (10-Aug-14, 8:50 pm)
பார்வை : 136

மேலே