இரத்தபேதம் பார்க்காத ஈக்கள்
மேலே
கழுகுகள்
வட்டமிடுகின்றன !
சடலமொன்றை
இழுத்துச்செல்ல முற்படும்
ஒரு நாயை
யாரோ விரட்டுகிறார்கள் !
சிந்திய
ரத்தங்கள் மீது
பேதமில்லாமல்
மொய்க்கின்றன
ஈக்கள் !
சற்றே அடங்கி
பூமியில் படிந்து
கொஞ்சம்
ஓய்வெடுக்கிறது
சாவின் புழுதி !
எரிந்து போன
ஒரு மரத்தை
வந்து பார்த்து
ஏமாற்றத்துடன்
திரும்பிச் செல்கின்றன
அந்தப் பிரதேசத்து
பறவைகள் !
குரூரப்புன்னகையோடு
சிதைவுகளை
மேற்பார்வையிடுகிறான்
யுத்தமெனும்
ஆடை தரித்த
படுகொலை அரக்கன் !
மொய்க்கிற ஈக்களை
விரட்டியபடி
வீழ்ந்து கிடக்கும்
தன் சகோதரனை
அழுதுகொண்டே
எழுப்புகிறாள்
அந்த
பாலஸ்தீனச் சிறுமி !
======================
- குருச்சந்திரன்