ஆசை
ஆசை என்னும்
அகிலத் தரக்கன்
யாரையும் இங்கே
விடுவதில்லை !
எல்லா ரிடமும்
தென்பட்டாலும்
கண்ணுக்குப் புலப்
படுவதில்லை !
கருப்போ இல்லை
வெளுப்போ இல்லை
ஒல்லியோ அல்லது
பருமனில்லை !
உலகில் அதுவும்
கடவுள் போல
உள்ளது ஆனால்
உருவமில்லை !
குழந்தை மனதில்
குடிகொண்டாலோ
கேட்டவை காண
அழுதுவிடும் !
கவிஞனுக்குள்ளே
கரைபுரண்டாலோ
கெட்டவை அழிக்க
எழுதிவிடும் !
ஞானியருக்கோ
நண்பன் ஆனால்
தன்னைத் தானே
கொன்றுவிடும் !
பெண்களின் நெஞ்சின்
பெட்டகதுள்ளே
பெரிதாய் வளர்ந்து
நின்றுவிடும் !
மாணவர் நெஞ்சில்
மகிழ்ந்தே ஆடி
மதிப்பெண் அதிகம்
பெற்றுவிடும் !
பிழையின் வழியில்
அவர்சென் றாலோ
மானம் தனையும்
விற்றுவிடும் !
புத்தன்,காந்தி
யேசுபிரானும்
வெறுத்து ஒதுக்கிய
இருளிதுதான் !
கவிதையை முடித்தேன்!
எந்தன் ஆசை
சொல்ல நினைக்கும்
பொருளிதுதான் !
-விவேக்பாரதி