“பாறைவாதிகளின் உலகத்தில் துளிர்த்த பசுந்தளிர் பகுதி1-பொள்ளாச்சி அபி

பாறைவாதிகளின் உலகம்..,வித்தியாசமான தலைப்பில் ஈர்த்த கவிதை.நுழைந்து அலைந்ததில் பாறைவாதிகளின் உலகம் எதுவென்றும்,அங்கிருந்து தெறித்து ஓடுகின்ற சிற்பியைக் குறித்தும் விளக்கியிருந்த விதம்,அதிலேயே சிறிதுநேரம் என்னைக் கட்டிப்போட்டது. படிமங்களைப் பக்குவமாகக் கையாண்டு,எவ்வித மனஅயர்ச்சியையும் ஏற்படுத்தாமல்,வாசகனுக்கு உணர்த்த விரும்பும் பொருளையும், கச்சிதமாக உணர்த்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது.

வாசிக்கும்போது, முதலில் லேசான சிரிப்பை வரவழைத்த இக்கவிதை..,இலக்கிய உலகத்தில் நவீனம் என்ற பெயரில்,நிலவும் பிரேமைகளை உடைக்கவும் தவறவில்லை.மேலும்,குறுகிய வரிகளில்,அமைந்தவொரு சிறுகதை என்றாலும் தவறில்லை.

கவிஞர் கிருஷ்ணதேவின் இக்கவிதை,கவிதை எழுதவரும் புதியகவிஞர்கள் அனைவருக்கும்,ஒரு பாடமாக இருக்கிறது.சிலபோது ‘பழங்’கவிஞர்களுக்கும் கூட.!

மிகவும் இயல்பாக
உரைநடை எனும்
நீர்மமாக
வழிந்து வந்தது
ஒரு கவிதை..!

வழிந்து வந்த கவிதையின் பின்னாலேயே,இலக்கிய மேதாவிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கிறதா..? என்று சந்தேகமும் வருகிறது.அதனால்,நீர்மமாக இருக்கும் கவிதையை நவீனம் எனும் அடுப்பிலிட்டு சுண்டக் காய்ச்சியதில், அது ஒரு பாறையைப் போல,இறுகிப் போய்விடுகிறது, கண்ணுக்குத் தெரியாத அளவில் ஆழம் கொண்ட வறட்டுக் கிணறுபோல..!

கவிதைப் பசி,தாகத்தோடு வந்து பார்த்த சிலர்,பாறையாய் இருந்த
கவிதையை வெறுமனே பார்த்துவிட்டுப் போகிறார்கள்.பின் வேறென்ன செய்யமுடியும்.?

அதற்குப்பிறகு பாறைகளின் உலகத்திலிருந்து வருவதாகச் சொல்லிக் கொண்டு வரும் சிலர்,கவிஞர் உருவாக்கிய பாறையை,ஒரு சிற்பமென்றும்,நீயொரு சிற்பியென்றும் கூற, தான் உருவாக்கியது இறுகிய பாறை என்று உணர்ந்திருக்கும் கவிஞரைப் பார்த்து, வந்தவர்கள் இவ்வாறு கூறுவதால், “கல்விச் சாலைக்கே சென்றிராதவனைப் பிடித்து,முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது போல.., குழப்பமடைகிறார் கவிஞர்.

அந்தநிலையிலேயே இருக்கும் அவரை,பாறைவாதிகள் தங்கள் உலகத்திற்குள் அழைத்து சென்று விடுகின்றனர்.அங்கே மூக்கிலும்,வாயிலும் இரத்திம வடியும் ஒரு சிற்பத்தைக் காட்டி,இது உயிருள்ள சிற்பம் என்கின்றனர். ‘மேற்கத்திய வீச்சம் அடித்தது அந்தச் சிற்பத்தின் உதிரத்தில்..’என்கிறார் கவிஞர்.

இந்த வரிகள் இங்கே நுட்பமாக உணர்த்தும் செய்திகள் பலவுண்டு. மேற்கத்திய பாணியின் வடிவத்தை தமக்குள் உருவேற்றிக் கொண்டு,அதனைப் போலவே செய்தல் என்றொரு போக்கு,இப்போது பல கவிஞர்களிடையேயும் நிலவி வருகிறது. ‘போலச் செய்தல்’ என்பது ஒரு குற்றம் இல்லையெனினும், கவிதை நிகழும் மண்ணின் தன்மைக்கேற்பச் சொல்லப்படாத கவிதை,வாசகனிலிருந்து அந்நியப் பட்டுத்தான் போகிறது.

அந்த உலகத்தில் பலவகையான சிற்பங்கள் இருக்கின்றன.அதில் சிலவற்றை மட்டும் கவிஞர் நமக்கு அடையாளப்படுத்துகிறார்.

ஒரு பக்க முலையை அறுத்து கைகளில் ஏந்தியபடி ஒரு பெண்சிற்பம்,
தன் வயிற்றைக் கிழித்து,குடலை எடுத்து வாய்க்குள் போட்டுக் கொள்ளும் ஒரு சிற்பம்..,

பெண் எனும் உருவத்தை செதுக்கி வைத்த சிற்பம்,தனது உடல்உறுப்பில் ஒன்றை இழந்து நிற்கிறது.பசியால் துடிக்கும் ஒரு சிற்பம் தனது குடலையே வாய்க்குள் போட்டுக் கொள்கிறது.

புதுமை செய்வதாய்க் காட்டிக் கொள்ளும் சிற்பங்கள்,தனது இயல்புகளை அழித்துக் கொண்டு நிற்பதையே,சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.இது கவிதைகளுக்கும் பொருந்தும் என்பது நமக்கு அவர் சொல்லாமல் சொல்லும் செய்தி.

அதற்குப்பின்..? நான் சிற்பியல்ல,நான் சிற்பியல்ல..என்று கதறியபடியே,தலைதெறிக்க ‘தனது எளிய உலகம்’ நோக்கி ஓடிவந்துவிடுகிறார்.

கவிதையை வாசித்து முடித்தவுடன்,நவீனக் கவிதை என்று சொல்லிக் கொண்டு,எத்தனைதான் யோசித்தாலும்,யாருக்குமே புரியாமல் எழுதப்படுகிற கவிதைகள் குறித்து,ஒரு ஆழமான விமர்சனத்தை கவிஞர் வைத்திருப்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாகத்தான் இருக்கிறது.

மேலும்,பாசாங்கற்ற,இலக்கிய மேட்டிமைத் தனம் இல்லாத,தனது எளிய உலகத்திற்கு அவர் திரும்பி வருவதாய் சுட்டுவதும் இங்கு கவனிக்கப் படவேண்டியது.

எளிமையான வார்த்தைகளில்,மிகப்பெரும் உள்ளடக்கங்களையெல்லாம் எதுகையும்,மோனையும்,சந்தமும்,உருவ அமைதியும் கொண்டு,சர்வ சாதாரணமாக கவிதைகள் படைக்கப் பட்டுள்ளன என்பதை அவர்,இப்போது உணர்ந்தவராயிற்றே..! அவருக்கு,மேலும் நம்பிக்கையூட்டும் கவிதையாக..இங்கே ஒன்று.

“கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
வளைந்து நெளிந்து
கூட்டிப் போனாள்,
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு..!”

-திரு.கல்யாண்ஜி எழுதிய இக்கவிதையில்,கருப்பு வளையல் போடுவது பொதுவாக,கீழ்சாதி என தாழ்த்தப்பட்டவர்களில், பெண்கள் அணிவது வழக்கமான ஒன்று.முதல் இருவரிகளில்,வாசல் கூட்டுவது யார் என அடையாளப்படுத்தப் படுகிறது.அடுத்த இருவரிகளில்,வளைந்து நெளிந்து அவள் கூட்டிச் செல்லும் அழகை நமக்குள் காட்சிப்படுத்துகிறது.

இந்த வரிகளில்,தாழ்த்தப்பட்டவர்கள் என்று சமூகம் ஒதுக்கி வைத்திருந்தாலும், அதிலுள்ள பெண்கள் மட்டுமின்றி பொதுவாக பெண்கள் மீதான,எந்த உயர்தட்டு வர்க்கத்திலிருந்தாலும் ஆண்களின் ஆதிக்க மனது பெரும்பாலும் ஒன்று போலத்தான் என்று விளங்கிவிடுகிறது.

அடுத்த இருவரிகளில்,வாசல் சுத்தமாச்சு..எனும் வரி,அவள் ஏற்றுகொண்ட பணியை,அவள் சரியாகத்தான் செய்திருக்கிறாள் என்பதும்,வேலையை பார்க்காமல்,வேலை செய்யும் பெண்ணை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற அலைபாய்கிற ஆணின் “மனசு குப்பையாச்சு..” என்றும் சுட்டப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால்,தலித் பெண்கள் இன்னும் இவ்வகையிலான வேலைகள்தான் செய்யும் நிலையிலிருக்கிறார்கள் என்பதும்,பெண்கள் தலித்தாக இருந்தாலும்,இல்லாவிடினும் ஆண்களின் மனசு எப்போதும் குப்பையாகத் தயாராகத்தான் இருக்கின்றன என்பதும் இதில் மறைந்திருக்கும் செய்தி. இதன் மூலம்,நமது பண்பாடுகளும்,நாகரீகங்களும் வெளியே ஒருமாதிரி,உள்ளே வேற மாதிரி..என்ற அர்த்தத்துடன் உண்மை நடப்பை அழகாய் நையாண்டி செய்கிறது.

இன்னும் இதுபோல ஆழப்பொருள் விளக்கும் எளிமையான எத்தனையோ கவிதைகள் தமிழ் இலக்கிய உலகத்தில் உள்ளன.தொடர்ந்து படைக்கப்பட்டும் வருகின்றன.

கவிஞர் கிருஷ்ணதேவின் பாறைகளின் உலகம் கவிதையும்,இதேபோல எளிமையான வார்த்தைகளில்,உயர்ந்த அர்த்தங்களைத் தந்து போகிறது..!

அவருடைய எளிமையான உலகம் இன்னும் விரிந்துகொண்டே போகட்டும்..! வாழ்த்துக்கள்.!

இன்னும் சில, மனம் கவர்ந்த அவருடைய கவிதைகளோடு,நாளையும் வருவேன்.!

அன்புடன்
பொள்ளாச்சி அபி.!

===============

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (13-Aug-14, 1:51 pm)
பார்வை : 164

மேலே