எப்போது விடியப்போகிறது

நாள் : 16.08.2014
இடம் : இந்தியா


நண்பா
நேற்றே
எழுதிவிட்ட
இந்தக்கவிதையை
இன்று உன் பார்வைக்கு
வைப்பதுதான்
சரியெனப்படுகிறது !

நண்பா
நேற்று
உன் இதயத்துக்கு
வெகு அருகில்
குத்திக் கொண்டிருந்தாயே
ஒரு கொடியை ..........
அது இப்போது எங்கே ?
சட்டையோடு சேர்த்து
சலவைக்குப் போட்டிருப்பாய் பார் !

நண்பா
நேற்று
உன் வாகன முகப்பில்
பட்டொளி வீசிப்
பறந்து கொண்டிருந்ததே
ஒரு கொடி...........
அதை
அதற்குள்ளாகவா
இடப்பெயர்ச்சி செய்துவிட்டது
உன் தலைவனின்
கட்சிக்கொடி ?

நண்பா
மற்ற
கொண்டாட்டங்களைப் போலவே
நேற்றைய
கொண்டாட்டத்தையும்
வெறும்
தொலைக்காட்சியோடு
முடித்துக்கொண்டாய் தானே !

நண்பா
நீ கேட்டபடியே
மாநிலத்துக்குள்
மாநிலமொன்று
முளைத்துவிட்டது !
ஆனால்
அந்த மாநிலத்துக்குள்
மானுடம் அல்லவா
பட்டுப்போனது ?

நண்பா
இன்னும்
எத்தனை மாநிலங்கள்தான்
இங்கே உருவாகும்
இந்தியாவை
இன்னும்
விரிசல்விட வைக்க ?

நண்பா
இங்கேயிருக்கும்
நதிகளிலும்
அணைகளிலும்
உன்
இந்திய உணர்வைக்
கைகழுவிவிடுகிறாயா என்ன ?

நண்பா
உன் அலைபேசியின்
ரிங்டோனாக
வந்தேமாதரம் இருந்து
என்ன புண்ணியம் ?
உன் இதயத்தின்
ரிங்டோனாக அல்லவா
அது மாறவேண்டும் ?

நண்பா
தியாகிகளை
நினைவு கூரத்தான்
ஆண்டுகொருமுறை
ஆகஸ்ட் 15 !
நீ
இந்தியன் என்பதை
நினைவு கூர அல்ல !

நண்பா
அந்தி சாய்ந்தால்
இறங்கிவிடவேண்டுமென்ற விதி
தேசியக்கொடிக்குத்தான் !
உன்
தேசிய உணர்வுக்கு அல்ல !

மேலும்........

உனக்குள்ளே
இருக்கும்
இந்தியாவின்
தேசியக்கொடிக்கு
எப்போது
விடியப்போகிறது ?

==========================

குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (16-Aug-14, 7:12 pm)
பார்வை : 101

மேலே