அழகான வாழ்க்கை ஆனந்தமாய்==2

அழகிய வாழ்க்கை ஆனந்தமாய்- -2.

மண்ணிதில் வாழும் மக்கட் கெல்லாம்
கண்ணெனப் படுவது கல்வி அறிவு--அவ்
வறிவின் ஊற்றாய் இருப்பது அன்பு
வெறுப்பு என்பது அறியாமையின் விளைவு

ஊனம் உடலில் இருப்பதில் தவறிலை
தவறிய பெண்ணுக்கு வாழ்க்கை தவமே
தவம் எனப்படுவது தன்னையே துறப்பது
துறவு அதுவே விடுதலை அளிப்பது

சொந்த வூரெந்த வூரந்த வூர்வாழ
வாழு மண்ணிதிற் நட்டுவை நாற்செடி
செடியுங் கொடியும் செப்பமாய் உலகில்
நொடிக் கொரு புதுமை புகுத்துமே.

அழகிய பெண்மேல் காதல் தவறு
தவறாய் பெண்ணைப் புரிதலும் இழுக்கு
பெண்மை என்பது பேணிடுங் குணமே
குணத்தாற் குவியுங் கோலமயி லழகு

மண்ணிதில் வாழும் மக்கள் எல்லாம்
மண்ணிதிற் சென்று சேர்வது திண்ணம்
எண்ணத்தில் திண்ணியர் ஆக வாழ்ந்திடின்
அழகிய வாழ்க்கை ஆனந்தம் ஆகிடும்

அழகிய வாழ்க்கை ஆனந்தம் முடிந்து
வழுவிலா பரமனின் முன்நாம் நிற்கையில்
பெற்ற பட்டமும் வாங்கிய சொத்தும்
நற்றவம் என்ற கணக்கில் சேரா

பசியாய் இருந்தோர்க்கு உண்ணக் கொடுத்தும்
தாகம் தவித்தோர்க்குப் பருகிட அளித்தும்
ஆடை யிலாதோரை உடுக்க வைத்தும்
வீடிலா மனிதரை இல்லம் சேர்த்தும்

சேர்த்த நற்செயலே சாதனை என்றும்
எய்திடும் நிலையை எடுத்து உரைக்கும்
பொய்யான தோற்றம் திசையதை மாற்றும்
மெய்தவ இறைவனை மெய்யிலே காட்டும்

பிறரது கண்ணீர் சோதனை வலிகள்
தமதென உணரும் தகைமை பேராண்மை
பிறன்மனை நோக்கா பண்பு அதுவே
அறம் எனப்படுவதில் அர்த்தம் உண்டே

இவ்வகை வாழ்க்கை மறு பிறப்பழிக்கும்
பழிக்குப் பயந்தவர் பல்லுயிர் ஓம்புவர்
பல்லுயிர் ஓம்புதல் பரமனின் செயலே
வழுவிலா மனிதர் இறைவனின் சாயலே.

எழுதியவர் : ந்தா. ஜோசப் ஜூலியஸ். (25-Aug-14, 12:03 pm)
பார்வை : 91

மேலே