அதிர்ச்சியும் ஆச்சரியமும்

சில நாட்களுக்கு முன்பு எனது கிராமத்தில் ஒரு தோட்டத்திற்குள் இருந்த கோயிலுக்குச் சென்றிருந்தேன். [படத்தில் உள்ள கோயில்தான். நிற்பது எனது தாய். இது முன்பு ஒரு சமயம் எனது மகனால் எடுக்கப்பட்ட படம்..இப்போது மிக அவசியமானதாகப் போய்விட்டது]

அந்தக் கோயில் என்பது சிறு மேடைதான். அதன் நடுவில் ஒரு மிகப்பெரிய புளிய மரம் உள்ளது. அது கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து வாழ்கிறது. சுற்று வட்டாரத்தில் இதைவிடப் பெரிய மரம் இல்லை. மிக அடர்த்தியான மரம். மாலை ஆறு மணிக்கு மேல் அங்கு போகவே பயமாக இருக்கும்.

அந்த மேடை மீது ஏறி நின்று சாமி கும்பிடலாம் என்று இருந்தபோது ஒரே இரைச்சல். மரத்தின் மேலிருந்த பறவைகள் கூச்சலும் குழப்பமுமாய் சிறகுகளை படபடப்புடன் அடித்துக் கொண்டே பறந்து கொண்டிருந்தன. இதனால் எனக்கு சற்று எரிச்சல் உண்டானது. பத்திக் குச்சிகளை பற்ற வைக்க முடியாத அளவு ஒரு அச்சுறுத்தல். பறவைகளின் அலறலால் கோபத்துடன் மேலே நிமிர்ந்து பார்த்தேன். புளுதிக் குருவிகள், காக்கைகள், குயில்கள் என எல்லாப் பறவைகளும் முட்டி மோதிப் பறந்து கொண்டு இருந்தன. எதையோ ஒன்றை குறி வைத்துக் கொத்தித் துரத்த முயன்று கொண்டிருந்தன. இப்போது நான் கொஞ்சம் பதற்றமானேன், எதைத்தான் விரட்டுகின்றன என்பதை கவனமாய் பார்க்க ஆரம்பித்தேன்.

அடி மரத்தில் இருந்து கொஞ்சம் மேலே பெரிய கிளைகள் பிரியும் இடத்திற்கும் சற்று மேலே ஒரு ஜீவன் என்னை நோக்கி இறங்கி வந்து கொண்டிருந்தது. அந்த ஜீவனைப் பார்த்ததும் அதிர்ந்த நான் வெலவெலத்துப்போய் வியர்த்து நின்றேன். கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. நான் அதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அது இன்னும் கீழே இறங்கி வருகின்றது. பிறகு கிளை பிரியும் இடத்தில் நின்று தனது தலையைத் தூக்கி பார்க்கிறது.

இரட்டை நாக்கை நீட்டியபடி ஆறடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே! அதை என்னவென்று சொல்ல. அது இன்னும் இறங்கி வருவதற்குள் ஒரே ஓட்டம்தான். கோயிலை விட்டு வெளியே வந்து நின்று கொண்டேன். இப்பொழுது அந்தப் பறவைகளின் அலறலைக் கேட்க முடியவில்லை. சட்டென ஒரு அமைதி. பிறகு வீடு வந்து சேர்ந்தேன்.

எனது அம்மாவிடம் விசயத்தைச் சொன்னேன். சற்றுப் பதற்றப்பட்டாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்.,
“அது அங்குதான் இருக்கிறது. நான் நிறையத் தடவை பார்த்திருக்கிறேன். நாம் கோயிலுக்குள் போகும்போது எதோ ஒரு ஒலியை எழுப்பிவிட்டுத்தான் போகவேண்டும். அப்படி ஒலி எழுப்பினால் அது கீழே கிடந்தாலும் நகர்ந்து சென்று விடும்” என்றாள். அம்மா அப்படிச் சொல்லி சமாதானப் படுத்தினாலும்
வெகு நேரம் கழித்துத்தான் கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.

மீண்டும் சிந்தனையை கோயிலுக்குச் செலுத்தினேன். படபடத்த பறவைகளின் உணர்த்துதலை தாமதமாக உணர்ந்து உடல் சிலிர்த்தேன். பறவைகள் கடவுளாகக் கண்முன் காட்சி கொடுத்தன. [உண்மைச் சம்பவம்]

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (29-Aug-14, 6:40 pm)
சேர்த்தது : Rathinamoorthi kavithaikal
பார்வை : 258

மேலே