வவாசிக்க விடுங்கள் ,வெளியே
உள்ளே ,
அங்கு என்ன இருக்கிறது?
கல்லும் புழுவும்
பகுத்தறிவு மழுங்கலும்
மனப்பாட மைதானமும்
கிளிப்பேடு ஒப்புவித்தாலும்
கற்றுச்சொல்லிகளின்
முனகலும் முழக்கமும்
வாழ்க்கை கரைந்து போகிறது
காணாமல்!
...
பசிக்குத் திருடாத பட்டாம்பூச்சி ,
ஊழலில் ஊறிடாத ஊர்க்குருவி-
சொல்லிக்கொடுக்கின்றன வெளியில் நிறைய !
ஓணானின் தலையாட்டலில்
நெம்புகோல் தத்துவம்,
குட்டையில் எருமை-
யுரேகா விளக்கம்!
நிறங்களை விளக்கும்
வானவில்,
சமநிலை வகைக்கு
காற்றில் நிற்கும் கழுகு!
குயில் கற்றுக்கொடுக்கும்
எதிரொலி விதிகள்
நியுட்டனைத் தெரியப்படுத்தும்
மரங்கள்!
தலைப்பிரட்டை தவளை
வளர்சிதை மாற்றம்
குளத்தின், ஏரியின்
காலை-மாலை தண்ணீர்-
வெப்ப கொள்வினை-உமிழ்வினை !
கூட்டில் குருவியும் குஞ்சுகளும்
சேய்நலம் பேணல்
நாயின் வாயில் குட்டிகள்-
பெற்றோர் பாதுகாப்பு!
இப்படித்தான் அம்மா
வெளியில் எல்லாமும்...
வெளி விசாலாமானது-
வெளி விலாசமுள்ளது-
வெளி விஷயமுள்ளது ...
உள்ளேதான் புழுவும் புழுக்கமும்
அடிகளும் வசவுகளும்
வெளியே என்னை
வா(வ)சிக்க விடு அம்மா...
ஆழமான தேடலும்
புரிதலும்
நிஜமான வாழ்வும்
வெளியில் தானே அம்மா?
முளைவிடுவதும்
முளைப்பதும் -வெளியில் தெரிந்தே!
மண்ணுக்குள்ளேவேவா?
வெளியில்தானே அம்மா?
வெளி போதுமானது அம்மா
வெளி வேலியற்றது .
அங்குதான் எல்லாமும்.
அன்றுதான் ஆசிரிய நாள்...!!!!