எண்ணியது கானல் நீராயிற்றே

வானம் பார்த்து நெல் விதைத்தேன்
வாழ்க்கை இருண்டு போக இருப்பதை
அறியாமல் வானம்கறுத்து மழையும்
வந்தது மண்ணில்புதைந்த விதையும்
நேர்மை மிகு மனிதன் தலை உயர்வது
போல பசுமை கொண்டு உயர்ந்து
வளர்ந்தது வரப்பு வெட்டி களை
எடுத்து பாங்காய் வளர்ந்து கதிர்
வந்ததை கண்ட நான் பாசத்துடன்
வளர்த்த குழந்தை வளர்ந்து புகழ்
உச்சி அடைந்தது போல் பூரித்து
அறுவடைக்கு ஆள்பேசி அறுப்புக்கு
நாள் குறித்து புது வாழ்க்கை தொடங்கிட
மணவாழ்க்கை காணும் மணமக்கள்
மணநாள் வர காத்திருப்பது போல
ஆவலுடன் நானும் காத்திருந்தேன்
நாளும் வந்தது விடிந்தால் அறுவடை
வீடு வரும் நெல் வாழ்க்கை தரம்
உயர்த்திடும் மகிழ்ச்சியில் நிம்மதியான
உறக்கம் கொண்டேன் நடு இரவின்
நிசப்தம் இருளை கிழித்த காற்றால்
கலைந்தது காற்றின் வேகம் காணவே
அச்சமாக இருந்தது கண நேரத்தில்
மிச்ச மில்லாமல் வானம் கொட்டி
தீர்த்தது புயல் மழையை இடி
வானில் இடிக்கவில்லை மின்னலோ
கண்ணில் படவேயில்லை மண்டையில்
மரண இடி நெஞ்சிலோ வேதனை மின்னல்
பாடுபட்டு வளர்த்த பயிர் வெள்ளத்தில்
என் உள்ளத்திலோ இருண்ட வாழ்க்கை
வெளிச்சம் வந்திட வஞ்சமில்லா
வளர்ந்த நெற்பயிர் தஞ்சம் தந்திடுமென
எண்ணியது கானல் நீராயிற்றே என்ற
கவலை இயற்கையும் மனிதனைப்
போல சூழ்ச்சியுடன் வஞ்சனை தனை
செய்திட்டு களிப்புற்றதே ...

எழுதியவர் : உமா (8-Sep-14, 9:11 pm)
பார்வை : 62

மேலே