யாருமில்லா கிடங்குகளில்

தீயில் வெந்தும்
மண்ணில் புழுங்கியதுமான
ஆன்மாக்களுக்கு
கிடங்குகளின்
குளிர் பிடித்திருக்கவில்லை....!!

புகை மூச்செறிந்து
பேசத் தொடங்கியிருந்தன
ஆன்மாக்கள்...!!

நீயிருந்தவன் ஏன்
வீங்கியிருக்கிறான்..?
ம்ம்...?! நானிருந்தவள்
விஷமேற்றிக் கொன்றாள்....!!

பக்கத்துப்பெட்டி ஆன்மாவும்
புகை பரப்பிக்
கத்தியது....!! நானிருந்தவன்
அவனே
செத்துப் போனான்....!!

இப்படியாய் தானிருந்த
சதைக்கூடுகளின்
வரலாற்று வியர்வைகள்
வழித்துக் கொண்டிருந்தன...
ஆன்மாக்கள்..
பனிக்கட்டிக் குளிரில்...!!!

வீங்கியிருந்தவனின் ஆன்மா
உறுதியாய் சொன்னது...
இந்தத் தடவையாவது
ஒரு
உதிர் சிறகினுள் உயிர்
புகுத்த வேண்டும்....!!!

அப்படியானால்
நான் பாலுக்கு
நிறம் மாற்றுவேன்...
விடாப்பிடியாய் மல்லுக்கு
நின்றது
விஷம் வைத்தவளிடமிருந்தது ...!!

போங்கள்.. மீண்டும்
சிறைபுக நான்
சிந்திக்கவேனும் இல்லை....
பெருமழையாக
உலவிக்கொள்கிறேன்.. இது
பேச்சுத்துணை
தேடிவந்தது.....!!!

பிணக்கிடங்குகளை
சூழ்ந்திருந்த
பூக்கள்
சுமந்திருந்தது.... சவ
மணங்களை மட்டும்.....!!!

ஓய்வதாய் இல்லை...
ஆன்மாக்களின் அளவளாவல்...!!

எழுதியவர் : நல்லை.சரவணா (9-Sep-14, 8:10 pm)
பார்வை : 88

மேலே