இறுதி ஆசை
வெற்றுத் தாள் உடலில்
நாடி நாளக் கோடு வழி
குருதி வரைகிறது
கிறுக்கல் சித்திரம்
குருஷேத்திர வடுக்கள்
குத்திய பச்சைகள்
குமிழ் குமிழாய் தோலில்
விழுப் புண்ணாய் ...கடையில்
இறக்கும் தறுவாயில்
போர்க் களத்தில்
இளைத்துக் கொண்டிருக்கும்
உயிர்ப் பொம்மையின்
உள்ளிருந்த கபாலப் பானையில்
மிஞ்சிக் கிடக்கும் ஞாபகச் சோற்றை
கிள்ளிக் கொடுக்க மறுக்கும்
குரல் நாண் அகப்பை
வெறும் காற்றோடு போராட
வரண்ட பூமியின்
இருண்ட ஓர் மூலையில்
விளங்கா மொழியில்
பாடும் ஓர் பறவையின்
சோக ஒலி காதை நிரப்ப
வலுவிழந்த கைகளுக்கிடையில்
ஒரு பிடி தாய் மண்
இறுதியாகச் சிறைப்படுகிறது!