மரணத்தின் ஓலம் - குமரேசன் கிருஷ்ணன்

நட்டநடு இடுகாட்டில்
சட்டென எழுந்து நிற்கும் சவத்தை
தட்டிச் சரியாக்கும் சாமானியனை
விட்டுவிடுமா மரணம் ?

"மரணத்தின் ஓலம்"
உயிர்களை உலுக்காமல்
உணர்வினை உடைக்காமல்
உண்மையிழந்து தடுமாறும்
உயிரற்ற தெருவோரம்
சிலபொழுதுகளில்...

தன்னைவந்து
தாக்காதவரை ...வெறும்
சம்பிரதாயங்களின்
சடங்குகளாகவே
சாவும் புலப்படக்கூடும்
சத்திழந்த பூமியில் ...

கொடூரம் என்ற பேனாவில்
குருதி என்ற மையடைத்து
குரூரமாய் எழுதப்படும் சிலமரணம்
இறைவனின் இதயத்தை
இம்மியளவாவது உலுக்குமா ?

எதிரில் வருவது
எமனென்று அறியாது
எப்போதும்போல் பயணிக்கும்
எண்ணற்ற உயிரை
எட்டிப்பார்க்கும் மரணம்
எதை உணர்த்தவோ ?

ஒவ்வொரு வீட்டினுள்ளும்
ஒர்முறையாவது
ஓசையின்றி நுழைந்து
ஒவ்வொரு உயிரையும்
ஓலமிட வைக்கும்
மரணம் ...இதுவரை
மரணிக்காது போனதேன் ...

ஓய்விலிருக்கும் வலிகளை
ஓங்கி மிதித்து ...
உயிர்வரை ஊடுருவி
உள்ளத்தை உடைத்து நொறுக்கி
உணர்வுகளையும் தாண்டி
உயிரைத்தாக்கும் ...மரணம் சிலநேரம் ...

காட்டாற்று வெள்ளமாய்
கண்மடை தாண்டி
கரம்கோர்த்து வெளிப்படும்
கண்ணீர்த்துளிகள்
காலியானாலும்
விம்மலின் வெளிப்பாட்டில்
நிசப்தத்தினை கிழித்து எறியும்
நிமிடங்கள் காட்டும்
மரணத்தின் வலியினை ...

உள்ளுக்குள் ...சிலநேரம்
யுத்தங்களை எழுப்பி
முத்தங்களை மறந்து
சப்தங்களில் சயனித்து
மௌனத்தில் உரைந்திடும்
மரணத்தின் ஓலத்தை
மனம் விரும்புமோ
மறுமுறையும் ...

மரணம்
மரிக்காமலிருக்கும்
மனிதனுக்கொரு
எச்சரிக்கை ...

மரணம்
மமதையிலிருக்கும்
மனிதனுக்கொரு
சங்கொலி ...

மரணம்
மனிதம் மறந்த
மனிதனுக்கொரு
சாவுமணி ...

மறுபடி ...மறுபடி ...
மரணம் மனிதனுக்கு
எதை உணர்த்த நிகழுகிறதோ ...
அது புரியாமலே
அடுத்த நொடியை நோக்கி
அசையும் மனம் உணருமா...
அர்த்தங்கள் உரைக்கும்
அம்மரணத்தை....

மரித்துப் போகும்
மனித வாழ்விற்குள்
மரிக்காது உயிர்க்கும்
மனிதத்தை மனம் விதைத்தால்
மரணம் ஒருவேளை
மரணிக்குமோ ...இப்புவியில் ...

*******************************************
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (10-Sep-14, 5:39 am)
பார்வை : 229

மேலே