வதையா இறப்பு - கவிஞர் சி அருள்மதி

வதையா இறப்பு

மூளைச்சாவால்
பத்து வருடங்களாய் கோமாவில் !

எமனின் பாசக்கயிறுகள் அறுபட்டு
பூமிக்கே தள்ளப்பட்ட உயிர்ப்பிணம் !

ஜீவகாருண்யம் மறுக்கப்பட்ட
காந்திஜியின் கன்றுக்குட்டியாய் அவள் !

குளிர்சாதனப் பெட்டியின்றி
அழுகும் உயிர்க்காய்கறி !

சதைநார் கொண்டு தைத்த
உயிர் மலரின் துர்நாற்றம் …
என் சகிப்புத்தன்மையின் எல்லைகள்
விரிய மறுக்கின்றன !

கனிம நிலையிலிருந்து
கரிம நிலைக்கு மாறிக்கொண்டிருக்கும்
உயிர்ச்சேர்மம் !

அவளின் உயிர்ச்சாபம் போக்கும்
மரண வரம் வேண்டி
துயரதவத்தில்
அவளும் நானும் !

உயிர்ச்சமநிலையை
சிதைக்கப் போராடும்
மரண உந்தம் !

உடல்தானம் போல்
உயிர்தனம் செய்யத் துடிக்கும்
மறத்துப்போன மனம் !

மாண்புள்ள மரணத்தைத் தடுக்கும்
வாழ்வாதாரக் குழாய்கள் !

சுயநிர்ணயம் மறுக்கப்பட்ட
உயிர்ச்சுடுகாடாய் அவள் !

பீஷ்மரின் இச்சா மிருத்யு
இவளுக்கும் வேண்டும் !

ஏழு குழந்தைகளைக் கொன்ற
கங்கா தேவியின் புனிதம்
கெட்டா விட்டது ?

சாமுராய்களும் ஜவ்ஹார்களும்
போற்றப்படும் போது
வதையா இறப்பு மட்டும்
மறுக்கப்பட்டதேன் ?!

தற்கொலைக்கும் கொலைக்கும் நடுவில்
மாட்டிக்கொண்ட அர்த்தம் விளங்கா
அதர்மமா அல்லது தர்மமா ?!

விழுதுகள் விட்டுப்போன
பாசம் பட்டுப்போன
உயிருள்ள வேர்களாய்
தள்ளாடி நடக்கும் தலைமுறைக்கு
கொல்லிவைக்கும் 'தலைக்கூத்தல்'
மட்டும் தண்டிக்கப்படாததேன் ?

பசிக்கு உணவளிக்க
மறுத்த பட்டினிக் கொலைகள் !
மருந்தளிக்க மறுத்து செய்யும்
வதையா இறப்புகள் !

இரண்டில் எது கொடுமை ?!

மருத்துவமும் சட்டமும்
கருகிப்போன மரங்களின்
சருகாய்ப்போன இலைகளில்
நீர்தெளித்து என்ன பயன் ?!

பத்து ஆண்டுகளாய்
கல்லறையில் இடம் மறுக்கப்பட்ட
உயிருள்ள மம்மியாய் அவள் !

அறம்பாடத் தெரியா வாய்
அழுகை வற்றிய கண்கள்
அவளின் உயிர்ச்சடலம் சுமக்கும்
என் இதயக் கல்லறை !

எழுதியவர் : (16-Sep-14, 4:44 pm)
பார்வை : 164

மேலே