+ஆதலினால் காதலிக்க ஆசைப்பட்டேன்+

அவள்தான் இவளா இவள்தான் அவளா
எவள்தான் என்று சிந்திக்க - தவழ்ந்தே
கனவென்னும் கற்பனை களம் விட்டு
நின்றாளே எதிரொரு நிலா!

சிரித்தாளோ சிறிதென்னை சிதைத்தாளோ சிறுநொடியில்
பறித்தாளோ இதயத்தை படுபாவி - சிறிதேனும்
சிந்திக்க சிறுநேரம் தருவாளோ, சின்னவனின்
பந்திக்கு முன்னே பைங்கிளி!

கண்சிமிட்டி சாடைகாட்டி கண்ணுமுன்னே மேடையிட்டு
வண்ணவண்ண பூக்களதின் வாசம்தந்தாள் - என்னவளே
எந்தன்மனம் தூண்டிலிட்டு எழுத்துக்களை அதில்பிடித்து
தந்துவிட்டாள் கயலாய் பாட்டு!

பேசாமல் பேசவைத்தாள் பெண்ணவள்தன் விழியாளே
ஆசைப்பட வைத்துவிட்டாள் அதனாலே - ஓசையின்றி
வலம்வந்தே மயக்கம் தரும் வசியக்காரி
கலப்படமில்லா அன்பே அவள்!

காதலுக்கு எடுத்துக்காட்டு காலத்துக்கும் அவள்கதியே
ஆதலினால் காதலிக்க ஆசைப்பட்டேன் - சாதுவான‌
கட்சிமாற்றி சாதிக்கும் காட்சி தந்தாள்
பட்டாக மினுக்கும் பதுமை!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Sep-14, 6:44 am)
பார்வை : 139

மேலே